மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

சாதிக்கும் இந்திய விமான நிலையங்கள்!

சாதிக்கும் இந்திய விமான நிலையங்கள்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட 10 விமான நிலையங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஆறு விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

செப்டம்பர் மாதத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்த விமான நிலையங்களுக்கான பட்டியலை ஆசிய பசிபிக் சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளன. டெல்லி விமான நிலையம் சென்ற ஆண்டை விட 10.7 சதவிகிதம் கூடுதலான விமானப் பயணிகளை ஈர்த்துள்ளது. இதில் பெங்களூரு விமான நிலையம் 25.8 சதவிகித வளர்ச்சியையும், மும்பை விமான நிலையம் 8.15 சதவிகித வளர்ச்சியையும் பதிவுசெய்துள்ளன.

ஒட்டுமொத்தமாக ஆசிய பசிபிக் நாடுகளில் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி 3.4 சதவிகிதமும், மத்திய கிழக்கு நாடுகளில் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி 1.6 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விமானச் சந்தையில் பெரும் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. சீனாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் 4 சதவிகித வளர்ச்சியும், சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவையில் 3.8 சதவிகித வளர்ச்சியும் இருந்துள்ளது. சீனாவின் க்ஷியாமென், ஷாங்காய் புடாங் மற்றும் நாஞ்சிங் ஆகிய விமான நிலையங்கள் சென்ற ஆண்டை விடக் கூடுதலான பயணிகளை ஈர்த்துள்ளன.

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் ஆசிய பசிபிக் நாடுகளின் சில விமான நிலையங்கள் வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஒசாகா கன்சாய் விமான நிலையம் 47.8 சதவிகித வீழ்ச்சியையும், சபோரோ நியூ சிடோஸ் விமான நிலையம் 21.6 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon