மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: சாதியின் வேர் எது?

சிறப்புக் கட்டுரை: சாதியின் வேர் எது?

பி.இளங்கோ சுப்பிரமணியன்

(சாதி என்பது பொருள்முதல்வாதம் எனக் கூறும் அ. குமரேசனின் கட்டுரைக்கான எதிர்வினை)

சாதி என்பது கருத்துமுதல்வாதமா அல்லது பொருள்முதல்வாதமா என்ற கேள்வியே அடிப்படையில் தவறானது. இந்தக் கேள்விக்கு சாதி என்பது பொருள்முதல்வாதமே என்று பதில் கூறுகிறார் தோழர் குமரேசன். ஏற்கெனவே தாம் பங்கேற்றுள்ள ஒரு வாட்ஸ் அப் குழுவில் சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற கண்டுபிடிப்பைச் செய்தார். இது அவருடைய முதற்கோணல். தற்போது அந்தக் கோணலின் மீது புதிய கட்டுமானத்தை எழுப்புகிறார். இதன் விளைவு அவரின் சாதியம் பற்றிய ஒட்டு மொத்தக் கருத்துகளும் முற்றும் கோணலாகி உள்ளன.

தத்துவம் வேறு; நிறுவனம் வேறு!

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டும் மனித குலத்தின் இருபெரும் தத்துவங்கள். பிரபஞ்சம், இயற்கை, உலகம், மனித சமூகம் ஆகிய அனைத்தையும் பற்றிய ஓர் ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தை வழங்குபவை தத்துவங்கள்.

பொருளை முதன்மையாகவும் மையமாகவும் கொண்ட உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதம். இதற்கு மாறாக, கருத்தை முதன்மையாகவும் மையமாகவும் கொண்ட உலகக் கண்ணோட்டம் கருத்துமுதல்வாதம் ஆகும். இவ்விரு தத்துவங்களும் நேற்றோ, இன்றோ முளைத்தவை அல்ல; குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை கொண்டவை.

சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற குமரேசனின் கருத்தைப் பரிசீலிப்போம். சாதி என்பது பொருள்முதல்வாதம். ஆதலால், அது ஒரு தத்துவம் ஆகிவிடுகிறது. எனவே, ஒரு தத்துவம் என்ற நிலையில், சாதியானது இந்தப் பிரபஞ்சத்தை விளக்க வேண்டும். இது சாத்தியமா? இயற்கை, உலகம், மனித சமூகம் ஆகியவை பற்றி சாதியம் என்னும் தத்துவம் என்ன விளக்கத்தை அளிக்கப் போகிறது?

ஆயின் சாதி என்பதுதான் என்ன? சாதி என்பது, அதாவது சாதியம் என்பது ஒரு சமூகக் கட்டுமானம். அது கருத்தியல் கட்டுமானம். ஒரு கருத்தாக, ஒரு கோட்பாடாகத் தோன்றிய சாதியம், அதன் வளர்ச்சியின் போக்கில் ஒரு நிறுவனமாக உருவாகி நிலைபெற்றுள்ளது. ஆக, சாதியம் என்பது ஒரு நிறுவனமே தவிர, ஒரு தத்துவம் அல்ல.

மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஒரு நிறுவனம்; அது தத்துவம் அல்ல. ஆனால், மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். தோழர் குமரேசன் தத்துவத்தையும் நிறுவனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறார்.

எல்லாக் கருத்துக்கும் பொருளே அடிப்படை!

சாதியம் என்னும் கருத்தியல் கட்டுமானத்துக்குப் பொருளாயத அடிப்படை (materialist foundation) உண்டா? சர்வ நிச்சயமாக உண்டு. பொருளாயத அடிப்படை இல்லாமல், சாதியம் போன்ற ஆயிரம் ஆண்டுகளாய் நீடித்து நிற்கும் கருத்தியல் கட்டுமானத்தை எழுப்பி இருக்க முடியாது. கருத்து என்பதே பொருளின் பிரதிபலிப்புதான் என்பதே பொருள்முதல்வாத பால பாடம்.

கருத்துகள் அந்தரத்தில் பிறப்பதில்லை. பொருள் இல்லாமல் கருத்து இல்லை. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்கிறது நவீன அறிவியல். (1 பில்லியன் = 100 கோடி). ஆக, பொருளின் வயது 14 பில்லியன் ஆண்டுகள். ஆனால், கருத்தின் வயது என்ன?

கருத்து என்பதே வளர்ச்சியடைந்த உயிரினங்கள் தோன்றிய பிறகுதான் பிறந்தது. இந்த பூமியில் மனிதன் தோன்றி எட்டு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்கிறது ஓர் அறிவியல் மதிப்பீடு. மனிதன் தோன்றிய பிறகுதான் சிந்தனை தோன்றுகிறது. அதிலும் நாகரிகம் அடைந்த மனிதர்கள் தோன்றி, சிந்தித்து, கருத்துகளை உருவாக்கியது எப்போது? அதிகம் போனால் 15,000 ஆண்டுகள் இருக்கும்.

ஆக பொருளின் வயது 14 பில்லியன் ஆண்டுகள். சிந்தனையின் வயது வெறும் 15,000 ஆண்டுகள். சிந்தனையே இல்லாமல் பொருளை மட்டிலும் கொண்டு இந்தப் பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது. இந்த அறிவியல் உண்மையை நன்கு மனதில் இருத்திக்கொண்டால் ஒரு விஷயம் மிகத் தெளிவாக விளங்கும். அதாவது, பொருள் இல்லாமல் கருத்து இல்லை. ஆனால், கருத்து இல்லாமலும் பொருள் இருக்கும்.

இதன் மூலம் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், எந்த ஒரு கருத்தியல் கட்டுமானத்துக்கும் பொருளாயத அடிப்படை உண்டு. இவ்வாறு கருத்தியல் கட்டுமானமான சாதியம் என்பது ஒரு பொருளாயத அடிப்படையைக் கொண்டிருப்பதாலேயே, சாதியம் என்பது பொருள்முதல்வாதம் ஆகிவிடாது. சாதி என்பது ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானமே.

சாதியை உருவாக்கிய குற்றவாளி இரும்பே!

சாதியத்தின் பொருளாயத அடிப்படைதான் என்ன? இந்தியச் சமூகத்தின் உற்பத்தி முறையில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதும் பயன்பாட்டுக்கு வந்ததுமான ஒரு காலகட்டத்தில், உழைப்பு சார்ந்த பல்வேறு புதிய வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. இந்தப் புதிய வேலைப் பிரிவினைகளே வளர்ச்சியின் இயக்கப் போக்கில் சாதிகளாகப் பரிணமித்தன. தொடர்ந்து சுரண்டும் நிலவுடைமை வர்க்கமானது தமக்குள் இணக்கம் கொண்டிருந்த சாதிகளைப் பகைமைச் சாதிகளாக மாற்றியது. சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளும் உயர்வு தாழ்வு பேதமும் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு சாதியம் கொடிய சுரண்டல் முறையாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

பார்ப்பனர்கள்தான் சாதியைத் தோற்றுவித்தார்கள் என்பதும் உண்மையல்ல. இவ்வாறு பார்ப்பது கருத்துமுதல்வாதப் பார்வை. சாதி தோன்றியது என்றால் அது தோன்றுவதற்கு உண்டான சூழல் இல்லாமல் சாதி தோன்றவில்லை. அத்தகைய சூழலை பார்ப்பனர்களோ அல்லது வேறு எந்தச் சாதியினரோ செயற்கையாக உருவாக்க இயலாது. இனக்குழுச் சமூக வாழ்க்கையில் ரிக் வேத காலத்தில் வாழ்ந்த மக்களிடம் எவ்வித பேத உணர்வும் இருந்ததில்லை என்கிறார் மார்க்சிய வரலாற்று ஆசிரியர் கோசாம்பி. பின்னர் இனக்குழுக்களிடையே வருணங்கள் தோன்றின. வருணங்களே பின்னாளில் வேலைப் பிரிவினை சார்ந்து சாதிகளாக மாற்றம் பெற்றன. சாதியைத் தோற்றுவித்ததில் இரும்புக்கு உள்ள பாத்திரத்தை அங்கீகரிக்காமல், சாதியம் பற்றிய தெளிவான புரிதலுக்கு எவரும் வர இயலாது.

இந்தியாவில் நிலவுடைமைச் சமூக உற்பத்தி உறவுகளை ஓரளவு மாற்றி அமைத்து, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் கொண்டுவரப்பட்டன. யார் வேண்டுமானாலும் பயணம் செய்யும் ரயில்கள், பேருந்துகள் ஆகியவை வந்த பிறகு அதுவரை இருந்து வந்த சாதியம் எவ்வளவு மாற்றம் அடைந்தது என்று பார்க்க வேண்டும். காசு கொடுத்தால் யாருக்கும் உணவு வழங்கும் ஹோட்டல்கள், காசு கொடுக்கும் யாருக்கும் சினிமா காட்டும் திரையரங்குகள் ஆகியவை சமூகத்தில் பெருமளவு வந்ததுமே சாதியக் கெடுபிடிகள் பெரிய அளவுக்கு நொறுங்கின. ஆக சாதியை ஒழிக்க வேண்டுமெனில், நிலவுடைமை உற்பத்தி உறவுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும். சோஷலிச உற்பத்தி உறவுகளைச் சமூகத்தில் நிறுவும்போது சாதியம் என்பது முற்றிலுமாக அழிந்துவிடும். இதைத் தவிர சாதியை ஒழிக்க வேறு எந்தக் குறுக்கு வழியும் இல்லை.

தோழர் குமரேசன் தமது கட்டுரையில், சாதியைக் காரணம் காட்டிக் கொண்டுவரப்பட்டதுதான் கடவுள் என்கிறார். இது சரியான வாதமல்ல! அதிகம் போனால், சாதியின் வயது இரண்டாயிரம் ஆண்டு. ஆனால் கடவுளின் வயது குறைந்தது பத்தாயிரம் இருக்கும். சாதி தோன்றும் முன்னரே கடவுள் என்னும் கற்பிதம் தோன்றிவிட்டது.

இந்தியாவிலும் ஜப்பானிலும் (இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளடக்கம்) மட்டுமே சாதிகள் இருந்தன; இருக்கின்றன. ஆனால், கடவுள் மீதான நம்பிக்கையோ உலகம் முழுவதும் இருக்கிறது. எனவே, சாதியால்தான் கடவுள் கொண்டுவரப்பட்டார் என்பது தவறு.

கற்பிதங்களும் உண்மையும்!

சாதி என்பது கருத்தியல் கட்டுமானமாக இல்லாமல் குமரேசன் கூறுவது போல, பொருள்முதல்வாதமாக இருக்குமேயானால் என்ன நடக்கும்? நடக்க வேண்டும்?

சாதியம் கூறுகிற உயர்வு தாழ்வுகள் உண்மையாக இருக்க வேண்டும். உயர்ந்த சாதியினரின் மூளை வலிமை மிக்கதாகவும், தாழ்ந்த சாதியினரின் மூளை பலவீனமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே..

குமரேசன் கூறுகிறபடி, சாதி பொருள்முதல்வாதம் என்றால், பார்ப்பனர்களின் ரத்தமும் மரபணுவும் பிற தாழ்ந்த சாதியினரின் ரத்தம், மரபணுவை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், மனிதர்களின் மரபணுவில், ரத்தத்தில் சாதியின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.

எனவே சாதிக்கு எவ்வித பௌதிக அடிப்படையும் கிடையாது என்பது இங்கு நிரூபிக்கப் பட்டுள்ளது. சாதியம் என்பது வெறும் கருத்தியல் கட்டுமானமே தவிர, அது பொருள்முதல்வாதமோ அல்லது சமூகத்தின் பொருளியல் அடித்தளமோ இல்லை.

(கட்டுரையாளர் : பி.இளங்கோ சுப்பிரமணியன் மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான NFTE (National Federation of Telecom Employees) சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் அறிவியல் குறித்தும் எழுதிவருகிறார். நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் அமைப்பின் வாயிலாகக் கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடம் அறிவியலைப் பரப்பி வருபவர். மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்னும் நூலின் ஆசிரியர்.)

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon