மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

நியமன எம்.எல்.ஏ.க்கள்: அரசு தலையிடத் தேவையில்லை!

நியமன எம்.எல்.ஏ.க்கள்: அரசு தலையிடத் தேவையில்லை!

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக பாஜகவினர் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

புதுவையில் அரசின் பரிந்துரையில்லாமல் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், மற்றும் செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப் பரிந்துரை செய்தார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. இதனை ஏற்று மத்திய அரசும் அவர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இது நடைமுறைக்கு விரோதமானது என்று புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இவர்கள் நியமனத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்றுக்கொள்ளாததால், ஆளுநரே மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனாலும் மூவரும் சட்டமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

மூவரின் நியமனத்தையும் ரத்து செய்து, அவர்களுக்கு சபாநாயகர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேசச் சட்டம் 1963இன் படி மூன்று பேரின் நியமனம் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பதற்காக உங்களை எம்.எல்.ஏ.க்களாக ஏற்க முடியாது. எனவே எம்.எல்.ஏ.க்கள் சலுகைக்கான உங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

சட்டமன்றம் செல்ல இடைக்கால அனுமதி

இதனை எதிர்த்து லட்சுமி நாராயணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என்று இடைக்கால அனுமதியும் வழங்கியிருந்தது.

இறுதி வாதம்

இவ்வழக்கின் இறுதி வாதம் கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “யூனியன் பிரதேசம் என்றால் மத்திய அரசின் ஆட்சிப் பகுதி என்று பொருள். மத்திய அரசின் ஆட்சிப் பகுதியை குடியரசுத் தலைவர் ஒரு நிர்வாகியைக் கொண்டு நிர்வகிக்கிறார். அரசியல் அமைப்புச் சட்டம் 239 (ஏ) பிரிவில் யூனியன் பிரதேசத்தின் நியமன உறுப்பினர்கள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதேபோல நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது' என்று வாதத்தை எடுத்துவைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மனுதாரர்களின் கோரிக்கை நியமன உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அல்ல” என்று தெரிவித்தனர்.

ரஞ்சித் குமார் தொடர்ந்து வாதிடுகையில், "சட்டப்பேரவை தொடர்பாக உள்ள எவ்வித விதிமுறைகளிலும் நியமன உறுப்பினர்களின் நியமனம் குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. தொடர்ச்சியான சீரான நடைமுறைகள் என்பது சட்டமாகாது' என்றார்.

இதைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நியமன உறுப்பினர்கள் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து தர்க்கம் செய்யவில்லை. மாறாக நடைமுறைகள் குறித்தே கேள்வி எழுப்பி வருகிறோம். சூழலைக் கருத்தில் கொண்டு நடைமுறை கூட்டாட்சித் தத்துவத்தை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு

இந்த நிலையில், மூன்று எம்.எல்.ஏ.க்களின் நியமனமும் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 6) பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அதில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிடத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் மூவரும் சட்டமன்ற அவை நடவடிக்கைகளில் எவ்வித தடையுமில்லாமல் பங்குபெறவும், சலுகைகளையும் பெறவும் முடியும். மூவருக்கும் சட்டப்பேரவையில் வாக்களிக்கும் உரிமை இல்லையென்றாலும், ஆளுநர் தரப்புக்கு சாதகமாக வந்துள்ள இத்தீர்ப்பு, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மகிழ்ச்சி

தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆளுநர் கிரண் பேடி, “மூவரின் நியமனம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சேவையாற்றுவார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon