மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

பருப்பு: காங்கிரஸை விஞ்சிய பாஜக!

பருப்பு: காங்கிரஸை விஞ்சிய பாஜக!

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.44,142 கோடி மதிப்பிலான பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு விதமான முன்முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்துள்ளதாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த முயற்சியால் தற்போது தன்னிறைவு நிலையை அடைந்துள்ளோம். 2017-18ஆம் நிதியாண்டில் 25.23 மில்லியன் டன் பருப்பை உற்பத்தி செய்துள்ளோம். இது 2009-10ஆம் ஆண்டில் 16.66 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது.

கடந்த 8 ஆண்டுகளில் இதன் அளவு 72.10 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 24.88 மில்லியன் டன்னிலிருந்து 31.3 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது 25.80 விழுக்காடு உயர்வாகும். பருப்பு இருப்பு அளவை அரசு உயர்த்தியதே அதன் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதற்குக் காரணமாகும். குறைந்தபட்ச ஆதரவு விலை இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலில் 1.50 மடங்காக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலமான 2009-10 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 7.28 லட்சம் மில்லியன் டன் அளவிலான பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,117.38 கோடியாகும். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 2014-15 முதல் 2018-19 நிதியாண்டு வரையில் 93.97 லட்சம் டன் அளவிலான பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.44,142.50 கோடியாகும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 78.74 லட்சம் டன் அளவிலான ரூ.35,800 கோடி மதிப்புடைய பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon