மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

உ.பி. கலவரம்: முன்கூட்டியே சத்துணவுக்கு ஏற்பாடு!

உ.பி. கலவரம்: முன்கூட்டியே சத்துணவுக்கு ஏற்பாடு!

புலந்த்சார் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது காவல் ஆய்வாளர் சுபோத் சிங் கொல்லப்பட்ட விவகாரத்தில், அருகிலுள்ள பள்ளியொன்றில் மதிய சத்துணவு முன்கூட்டியே பரிமாறப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சார் மாவட்டத்திலுள்ள சிங்ராவதி பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. இதில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் சுபோத்குமார் சிங் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துத் தகவல் தெரிவிக்கும்படி உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எந்த கருத்தும் சொல்லவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர் எதிர்க்கட்சியினர்.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 6) காலையில் பாதிக்கப்பட்ட சுபோத்குமார் சிங் குடும்பத்தினரை லக்னோவில் சந்தித்துப் பேசினார் யோகி. சுபோத் சிங்கின் மனைவி, மகன்கள், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பாஜக அரசு செய்யும் என்றும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார்.

இந்த நிலையில், கலவரம் நடைபெற்ற இடத்தின் அருகே 100 மீட்டர் தொலைவில் இயங்கிவந்த பள்ளியொன்றில் முன்கூட்டியே குழந்தைகளுக்கு மதிய சத்துணவு பரிமாறப்பட்டது தெரிய வந்துள்ளது. சுமார் 170 குழந்தைகள் அந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். காலை 9 மணி முதல் 3 மணி வரை இயங்கும் அந்த பள்ளியில், மதியம் 12.30 மணியளவில் சத்துணவு அளிக்கப்படும்.

ஆனால், கலவரம் நடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று மதியம் 11.30 மணிக்கே உணவு பரிமாறப்பட்டது. அதன்பின் குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார் அங்கு ஆசிரியராகப் பணியாற்றும் தேஷ்ராஜ் சிங். கலவரம் நடந்த இடத்தில் கூச்சல் அதிகமாக இருந்ததால், காலை 11 மணிக்கே மாவட்ட கல்வி அதிகாரியிடம் இருந்து தகவல் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon