மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

ஏற்றம் காணும் டயர் ஏற்றுமதி!

ஏற்றம் காணும் டயர் ஏற்றுமதி!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் டயர் ஏற்றுமதி மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து டயர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒன்றிய வர்த்தக அமைச்சகத்தின் கணக்குப்படி நடப்பு நிதியாண்டின் (2018-19) முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ரூ.6,314 கோடி மதிப்பிலான டயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 விழுக்காடு கூடுதலான அளவில் டயர் ஏற்றுமதி செய்யப்படும் என்று இந்திய வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஆனந்த் கோங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் வேறெங்கும் உற்பத்தி செய்யப்படாத அளவுக்கு இந்தியாவில் பல்வேறு விதமான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2007-08ஆம் நிதியாண்டில் இந்தியாவின் டயர் உற்பத்தி அளவானது 80 மில்லியன் யூனிட்டுகளாக மட்டுமே இருந்தது. ஆனால் இது 2017-18ஆம் நிதியாண்டில் 180 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் சற்று முடங்கியே உள்ளது” என்றார்.

மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், இந்தியாவின் ரப்பர் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 7 விழுக்காடு அதிகரித்து, அதன் மதிப்பு ரூ.12,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். இந்தியாவில் ரப்பருக்கான தேவைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் டயர் தயாரிப்புக்கு இயற்கை ரப்பர்தான் முக்கிய மூலப் பொருளாக உள்ளது. உள்நாட்டுத் தேவைக்கும், நுகர்வுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. டயர் உற்பத்தி ஆலைகள் இயங்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் ரப்பர் மிக முக்கியக் காரணியாக உள்ளது. எனினும் இத்துறைக்கான கொள்கைகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளன. இயற்கை ரப்பருக்கான கலால் வரி தற்போது 25 விழுக்காடாக உள்ளது. இயற்கை ரப்பரை இறக்குமதி செய்யும் மற்ற எல்லா நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் வரி விதிப்பு மிக உயர்வாக உள்ளது” என்றார்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon