மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

ஹெலிகாப்டர் ஊழல்: கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாட்கள் காவல்!

ஹெலிகாப்டர் ஊழல்: கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாட்கள் காவல்!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு இந்திய விமானப்படையினால் விவிஐபிகளுக்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான திட்டம் வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இது தொடர்பான ஒப்பந்தம் இத்தாலி நாட்டிலுள்ள பின்மெக்கானிகா குழுமத்தைச் சார்ந்து இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு 3,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்பட்டது. 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் 423 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் இரண்டு உயரதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இந்த வழக்கை இந்தியாவிலும் சிபிஐ பதிவு செய்து விசாரித்து வந்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை துபாயில் இருந்து, இந்திய உளவு அமைப்பான ரா அதிகாரிகள் அவரை டெல்லி அழைத்து வந்தனர். பின்னர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்திய பின் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்டியன் மைக்கேலுக்குத் தனது வழக்கறிஞர் அல்ஜோ கே ஜோசப்பைச் சந்தித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, மைக்கேலுக்கு சிபிஐ காவல் வழங்க அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மீதான குற்றத்தைத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரத்தையும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மைக்கேலை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் 10ஆம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் கைதின் மூலம் அரசியல் தலைவர்களின் முகமூடிகள் கிழிக்கப்படும் என்று சாடியுள்ளார். அதேபோன்று ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தொடர்பாக காங்கிரஸ் ஏற்கனவே விளக்கமளித்துள்ளதாகவும், ரஃபேல் விவகாரத்தில் ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானிக்குக் கொடுத்தது குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

“ஊழலை அடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்தது; ஒப்பந்தத்தின்போது கொடுக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டிருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கிறிஸ்டியன் மைக்கேலுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மோடி அரசால் அவர் பயனடைந்துள்ளார்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon