மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

எஸ்.ராவுக்குக் குவியும் பாராட்டுகள்!

எஸ்.ராவுக்குக் குவியும் பாராட்டுகள்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை, வலியை இந்த நாவலில் அவர் படைப்பாக்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் அரசியல் கட்சித் தலைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களைப் படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துகளில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். அவருக்கு விருது அறிவித்திருப்பது அவரது புகழுக்கு மணி மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த எஸ் ராமகிருஷ்ணனுக்கு மக்கள் சார்பில் எனது பாராட்டுகள். மேன்மேலும் இதுபோல் பல்வேறு விருதுகள் பெற வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ராவுக்கான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சஞ்சாரம்” நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

திராவிட இயக்க குடும்பத்திலிருந்து எழுத்துலகுக்கு வந்து எண்ணற்ற இலக்கியப் படைப்புகளை உருவாக்கியிருக்கும் அவர் மேலும் பல உயரிய விருதுகளைப் பெற்று தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று மீண்டும் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எஸ்.ராவின் பல்வேறு படைப்புகளை வாசித்து வருவதாக ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இலக்கியத்துக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் புலவர்களும், கவிஞர்களும் படைப்புகளைத் தந்தவண்ணம் இருக்கின்றார்கள்; அந்த வரிசையில் இருபதாம் நூற்றாண்டு விடைபெறும் காலத்திலும், 21ஆம் நூற்றாண்டின் உதய காலத்திலும் தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டு ஆற்றி இருப்பவர், பெருமதிப்பிற்குரிய எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் ஆவார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரைச் சந்திக்க விழைந்தேன். என் இல்லத்துக்கு வந்து நெடுநேரம் உரையாடினார். அப்போது, ‘உங்களுக்கு விழா எடுக்க விரும்புகின்றோம்’ என்று நான் கூறினேன். இசைவு தந்தார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், தனிச்சிறப்பு வாய்ந்த கலைவாணர் அரங்கில், திருநெல்வேலி பைந்தமிழ் மன்றத்தின் தலைவர் என்ற முறையில், இயற்றமிழ் வித்தகர் விருதையும், ரூ 50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித்தேன். அந்த விழாவில் அவரைப் பாராட்டி உரையாற்றினேன். அது என் மனதுக்கு இனிய விழாவாக அமைந்தது.

ராமகிருஷ்ணன் தலைசிறந்த எழுத்தாளர் மட்டும் அல்லர்; மிகச்சிறந்த சொற்பொழிவாளர். தங்கு தடையின்றி அருவி போலப் பொழியக்கூடியவர். உலக இலக்கியங்களை எல்லாம் பேருரைகளாகத் தந்திருக்கின்றார். தன்னை ஒரு கதைசொல்லி என்றே சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர்.

அவரது படைப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இலக்கியத்துக்கான நோபல் விருது பெறும் தகுதி அவருக்கு இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழில் ஓர் அறிவியக்கம் என்ற வகையில் செயல்படுபவர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார். அவ்வகையில் ஒரு நல்லாசானாக இன்று திகழ்கிறார்

எஸ்.ராமகிருஷ்ணன் அனைத்துவகையிலும் இன்றைய தமிழர்கள் எண்ணிப் பெருமைகொள்ள வேண்டிய ஆளுமை. இந்தக் காலகட்டத்தின் தமிழ் இலக்கிய அழகியலின் முகம் இந்த விருது அவருக்கு தமிழ்வாசகர்கள் அளிப்பதும்கூட” என்று குறிப்பிட்டுள்ளார்.

(சாகித்ய அகாடமி விருது குறித்தும், நாவல், கரிசல் வட்டாரம், இசைக்கலைஞர்கள் எனப் பல விஷயங்கள் பற்றியும் எஸ்.ராவுடன் கலந்துரையாடியவற்றைப் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்)

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon