மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: பாபர் மசூதி இடிப்பும் அதன் பின்னும்!

சிறப்புக் கட்டுரை: பாபர் மசூதி இடிப்பும் அதன் பின்னும்!

டிசம்பர் 6: பாபா் மசூதி இடிக்கப்பட்ட நாள்!

சேது ராமலிங்கம்

1992இல் டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தி்ல் அயோத்தியிலிருந்த பாபா் மசூதி இடிக்கப்பட்டது. அது மத நல்லிணக்கத்தையும் மத சகோதரத்துவத்தையும் சீர்குலைத்த நாளாக அமைந்தது. நாடு முழுவதும் மதக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான நாளாகவும் இருந்தது. அது நடந்து இன்றோடு 26 ஆண்டுகள் ஆகிவி்ட்டன. இதுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. மசூதியை இடித்துப் பெரும் அநீதியை இழைத்துவிட்டு, அதை முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 2019 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் உரிய அமர்வு நியமிக்கப்பட்டு அது இப்பிரச்சினையை விசாரிக்கும் எனத் தெரிவித்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியதற்கு நீதிமன்றத்திற்கென முதன்மை முக்கியத்துவம் அளிக்க வேண்டிய வழக்குகள் இருக்கின்றபடியால் தற்போதைக்கு இவ்வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

இவ்வழக்கில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துத்துவ அமைப்புகள் தங்களுக்கானதாகச் சொந்தம் கொண்டாடிவருகின்றனர். அதற்காக வரலாற்றுரீதியான ஆதாரங்களையும் காட்டுகின்றனர். அதனால் டைட்டில் சூட் அதாவது இடத்தின் உடமையாளர் யார் என்ற அடிப்படைக் கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை மூலம் தீர்வு காண முடியும்.

நாடு முழுவதும் மத ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய வழக்கின் விசாரணையை முதன்மைப்படுத்த முடியாது என்று தலைமை நீதிபதி கூறியதற்குப் பின்னணியில் பல அர்த்தங்களைச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்றம் தலையிடக் கூடாதா?

இந்த நிலையில், அயோத்தியிலுள்ள இடத்தில் ராமர் கோயிலை உடனடியாகக் கட்ட வேண்டும். ஏற்கெனவே 26 ஆண்டுக் காலம் தாமதமாகி வி்ட்டது என்று பாஜகவின் தாய்க்கட்சியான ஆர்எஸ்எஸ்ஸும், அதன் வலைப்பின்னலில் உள்ள இந்துத்துவ அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிப்போட்டதன் மூலமாக இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது என்று கூறும் இந்துத்துவ அமைப்புகள், நீதிமன்றங்கள் இதில் தலையிடக் கூடாது என்றும் சொல்கின்றன. நீதிமன்றங்களை மீறி கோயில் கட்டப்பட அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு 2019இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைச் சந்திக்கும்போது அது மக்களிடம் சொல்லிக்கொள்ள எந்த சாதனையும் இல்லை. வளர்ச்சியை முன்வைத்து 2014இல் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இனியும் வளர்ச்சியை முன்வைக்க முடியாது. எனவே வேறு வழியின்றி ஆர்எஸ்எஸ் மறுபடியும் மத உணர்வைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தி இந்துக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற ராமர் கோயில் பிரச்சினையை எடுத்து அதில் தீவிரம் காட்டிவருகிறது.

மசூதி இடிப்புக்குக் கொண்டாட்டம்

சில நாட்களுக்கு முன்னதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் அமைப்பான தர்ம சபை என்ற இந்து மத நிகழ்வை நடத்தியது. பிரமாண்டமான ராமர் கோயிலை கட்டுவதற்கான ஆதரவு திரட்டுவதற்காக இந்தச் சடங்கை நடத்துவதாகத் தெரிவித்தது. இன்று (டிசம்பர் 6) சௌரியா திவாஸ் என்ற நிகழ்ச்சியை பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கொண்டாடும் விழாவாக நடத்துவதாக அறிவித்துள்ளது. வரும் 18ஆம் தேதியன்று பகவத் கீதை ஜெயந்தி நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் சரத் ஷர்மா பத்திரிகையாளர்களிடம் நேற்று (டிசம்பர் 5) பேசுகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்ச்சியைப் பாரம்பரியக் கொண்டாட்டமாகப் பல்வேறு இந்து அமைப்புகளுடன் இணைந்து கொண்டாட இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட கலவரங்களில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான கர சேவகர்களுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இருபுறமும் நெருக்கடி

ஆனால், மத உணர்வைத் தூண்டிவிட்டு இனியும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறியே. சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மீறி ராமர் கோயில் கட்டினாலும் அது அவர்களுக்குச் சாதகமாக அமையும் என்று சொல்வதற்கில்லை. எதிர்விளைவையும் அது ஏற்படுத்தக்கூடும்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்க முதலீட்டாளர்களிடம், ராமர் கோயில் பிரச்சினையை மீண்டும் கிளப்பி முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமில்லாத எந்தச் சூழலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகச் சொல்லப்படுவதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

எனினும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கோயில் கட்டும் கோரிக்கையைத் தளர்த்துவதாகத் தெரியவில்லை. ஒருபுறம் ஆர்எஸ்எஸ்ஸின் நிர்பந்தம், இன்னொரு பக்கம் கோயில் கட்டுவதை முன்னெடுத்தால் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும் அபாயம் என இருபுறமும் நெருக்கடியில் பாஜக அரசு சிக்கிக்கொண்டுள்ளது. பாஜக மதவாத அரசியலைத் தீவிரப்படுத்தும்போது அதை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? மீண்டும்1992ஐ எதிர்கொள்ளப் போகிறோமா? சிறுபான்மையினருக்கு இப்பிரச்சினையில் எப்போது நீதி கிடைக்கப் போகிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இந்தப் பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையவை அல்ல. இந்தியாவின் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சிக்கு இருக்கும் மரியாதை, அரசியல் சாசனத்தின் மதிப்பு முதலானவற்றுடனும் தொடர்புடையவை.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon