மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

விடுதி நெறிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு!

விடுதி நெறிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு!

ஆதம்பாக்கம் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தனியார் விடுதிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த மகளிர் விடுதியொன்றில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஹிடன் கேமரா டிடெக்டர் எனும் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அங்கு தங்கியிருந்த பெண்கள் கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் (டிசம்பர் 4) அந்த விடுதியின் உரிமையாளர் சஞ்சீவி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 5) விடுதி நெறிமுறைகள் தொடர்பான ஓர் அறிவிப்பை வெளியிட்டார் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கிவரும் விடுதிகள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டுமென்று தெரிவித்தார். பெண்கள், குழந்தைகள் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நெறிமுறைகள் வெளியிடப்படுவதாகக் கூறினார்.

“இருபாலர் தங்கும் விடுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாகக் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் சேர்ந்து தங்க நேர்ந்தால், தனித்தனி அறைகள் அமைக்கப்பட வேண்டும். பெண்கள் விடுதிகளில் காப்பாளர்களாகப் பெண்களையே நியமிக்க வேண்டும். விடுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருந்தால், ஒவ்வொரு வாசலுக்கும் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும்.

50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் அமர்த்தப்பட வேண்டும். 50க்கும் மேற்பட்டோர் இருக்கும் விடுதிகளின் வாசலில் சிசிடிவி கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்த வேண்டும். விடுதிக் காப்பாளர் அல்லது துணை விடுதிக் காப்பாளர் கண்டிப்பாக அங்கு பணியில் இருக்க வேண்டும். பாதுகாவலர்கள் அவசரக் காரணம் ஏதுமின்றி, விடுதிக் கட்டடங்களுக்குள் செல்லக் கூடாது. விடுதிகளை நடத்துபவர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளை நடத்தி வருபவர்கள் மாவட்டச் சமூக நல அலுவலரிடம் பதிவுச் சான்று, உரிமம் பெற வேண்டுமென்றும், அதிகாரிகளால் ஒப்புதல் தரப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகங்களை நடத்த வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

“பதிவு செய்யப்படாமல் இயங்கும் விடுதிகள் குறித்து 9444841072 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம். புகார்கள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பதிவு செய்யாத விடுதிகளில் பெண்கள், குழந்தைகளைத் தங்க வைக்க வேண்டாம். பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறாமல் விடுதியை நடத்துபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon