மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கேரளா: தொடரும் எதிரும் புதிரும் விளையாட்டு!

கேரளா: தொடரும் எதிரும் புதிரும் விளையாட்டு!

உதய் பாடகலிங்கம்

யாருக்கு யார் எதிரி என்ற கேள்விக்கு அரசியல் அரங்கில் பதில் கிடைப்பது கடினம். உண்மையில், அரசியலில் எதிரிகளைவிட நண்பர்களிடம்தான் ஜாக்கிரதை அதிகமிருக்க வேண்டும். இதனை அறிய, எந்த அரசியல் சாஸ்திரமும் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கின்ற கட்சிகளின் செயல்பாடுகளே பாமரருக்கு இதை விளக்கிக் காட்டிவிடும்.

முக்கியமாக, எதிரும்புதிருமாக இருக்கும் கட்சிகளும் அதன் தலைவர்களும் மட்டுமே, அவற்றைச் சார்ந்து இயங்கும் தொண்டர்களை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும். இதனைப் புரிந்துகொண்டால், அரசியலில் நட்பையும் துரோகத்தையும் விட, பகைமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதன் பின்னணியை உணர்ந்துகொள்ள முடியும். மறைமுகமான இணக்கத்தின் வழியாகவும் அந்தப் பகைமை கட்டமைக்கப்படக் கூடும். மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில், பொதுவெளியில் இதனை அம்பலப்படுத்தி வருகின்றன சில கட்சிகள்.

கேரள அரசியலைப் பொறுத்தவரை, 1982ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை அங்கு இரு கட்சி ஆட்சி முறைதான் நடந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அங்கு ஆட்சியில் உள்ளது. இதற்கு முன்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சியில் இருந்தது. அதற்கு முன்னர் இடதுசாரி இருந்தது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டாம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த இரு கூட்டணிகள்தான் மாறி மாறி ஆட்சி பீடத்தை அலங்கரித்து வருகின்றன. இதில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது பாஜக. அதனை நிகழ்த்திக் காட்டும் வல்லமை சபரிமலை விவகாரத்துக்கு உள்ளது என அது நம்புகிறது.

தேர்தல் களத்தில் பாஜகவின் நிலை

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 31.10 சதவிகித வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 21.59 சதவிகித வாக்குகளையும், பாஜக 10.33 சதவிகித வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7.59 சதவிகித வாக்குகளையும் பெற்றன. கூட்டணியிலுள்ள கட்சிகளையும் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடும். இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 8 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைத்தன. பாஜக கூட்டணிக்கு எந்தத் தொகுதியிலும் வெற்றி கிட்டவில்லை.

இதற்கு முன்னர் நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து முறையே காங்கிரஸ் 46.47 சதவிகிதமும், மார்க்சிஸ்ட் 35.29 சதவிகிதமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8.62 சதவிகிதமும், பாஜக 7.31 சதவிகித வாக்குகளையும் பெற்றன. இந்த இரு தரவுகளில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அறிந்தால், இப்போதைய மாற்றங்களின் பின்னணியை உணர முடியும்.

இரட்டிப்பான வாக்கு வங்கி

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26.7 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 23.8 சதவிகித வாக்குகளையும், பாஜக 10.6 சதவிகித வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8.2 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதனால் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 91 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 இடங்களையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தையும் பெற்றன.

அதே நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு முன்னணி 72 இடங்களையும், இடதுசாரி முன்னணி 68 இடங்களையும் பெற்றன. பாஜகவுக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 28.18 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 26.73 சதவிகித வாக்குகளையும், பாஜக 6.03 சதவிகித வாக்குகளையும் பெற்றன. இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8.72 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

இதை வெறுமனே எண்களாகச் சுருக்கிவிட முடியாது. இதன் பின்னால், ஒரு கட்சியின் எழுச்சியும் சில கட்சிகளின் சிறு வீழ்ச்சியும் அடங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பான நிலையை எட்டியுள்ளது. இதன் பின்னணியில் அக்கட்சி கேரளத்தில் நடத்திவரும் அரசியல் முன்னகர்வுகளின் பின்விளைவுகளாகவும் இதைக் கருத வேண்டியுள்ளது.

கொலைகளின் வழியே அரசியல்

அரசியல் கொலைகளைப் பொறுத்தவரை, கடந்த 2000ஆவது ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 85 தொண்டர்களும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 65 தொண்டர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது கேரள காவல் துறை வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையொன்றில், கேரள சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றவுடனேயே தங்கள் கட்சித் தொண்டரான ரவீந்திரநாத்தை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. கடந்த ஆண்டு கேரளாவில் பாஜக தலைவர் அமித் ஷா பயணம் மேற்கொண்டபோது, கரிவெல்லூரில் போராட்டமொன்றை வெற்றிகரமாக்கிய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.வி.குன்ஹம்புவின் வீட்டை பாஜகவினர் தாக்கியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவின் மத்தியப் பகுதியான கண்ணூரில்தான் அரசியல் படுகொலைகள் அதிகளவில் நடக்கின்றன. மார்க்சிஸ்ட், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மட்டுமல்லாமல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உட்படப் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களும் அரசியல் படுகொலைக்கு ஆளாகின்றனர். பாஜக தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி மீதும், அவர்கள் இவர்கள் மீதும் குற்றம்சாட்டலாம். அரசியல் நோக்கம் கொண்ட படுகொலைகள் மூலமாக, இரண்டு கட்சிகள் குறித்த மாயபிம்பம் சம்பந்தப்பட்ட தொண்டர்களின் மனதில் பல்கிப் பெருகும் உளவியல் அபாயத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மாறி மாறி குற்றம்சாட்டுவதன் வழியாக, இரண்டு தரப்பின் நியாயங்கள் மட்டுமே பொதுமக்களிடையே கவனத்தைப் பெறும் அபாயமும் இதிலுள்ளது.

முடக்கும் முழு அடைப்புகள்

கேரள உணவுகள், உடைகள், கலைகளைப் போலவே, கடையடைப்புப் போராட்டங்களும் அங்குள்ள கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகிவிட்டன. போக்குவரத்து, வணிகம் மற்றும் இயல்பு நிலை பாதிக்கப்படுவதால், ஓராண்டில் குறைந்தபட்சம் சில ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படுகிறது. ஓராண்டில் 100 கடையடைப்புகள் குறைந்தபட்சமாக நிகழ்கின்றன. 2006ஆம் ஆண்டில் 223 ஹர்தால்கள் நடத்தப்பட்டது ஒரு சாதனை. கடந்த ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் முப்பத்தி மூன்று நாட்களில் 11 கடையடைப்புகள் நடத்தப்பட்டன. இவற்றில் ஆறு முழு அடைப்புப் போராட்டங்கள் பாஜகவினால் நிகழ்த்தப்பட்டன. வளர்ச்சியை முன்னிறுத்தும் ஒரு தேசியக் கட்சி, கேரள மாநில கலாச்சாரத்தை நுட்பமாக உணர்ந்ததன் விளைவு இது. சபரிமலைப் போராட்டங்களிலும் அதுவே எதிரொலிக்கிறது என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும்

காலம்காலமாக, அரசுக்கு எதிரான முழக்கங்களை காங்கிரஸ் கட்சியினரும் மார்க்சிஸ்ட் தொண்டர்களும் உரக்கக் கத்தியது போன்றே, இப்போது ‘ஐயப்ப சரணம்’ பாடி வருகின்றனர் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

சட்டமன்றத்தில் உள்ளே வெளியே..

ஐயப்ப தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வருகையை அதிகரித்து வருமானத்தைப் பெருக்கும் உத்தியைச் செயல்படுத்த, இப்போது நிலக்கல்லிலும் பம்பையிலும் எந்தக் கட்சியும் போராட்டம் நடத்தத் தயாராக இல்லை. விளைவு, போராட்டத்துக்கான களத்தை மாற்றிக்கொண்டது பாஜக. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் கேரள தலைமைச் செயலகத்துக்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் பாஜகவினர். அம்மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் இதனை முன்னின்று நடத்தி வருகிறார். சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகளைச் செய்து தருவது, 144 தடையை விலக்குவது, கைதான பாஜக தலைவர் சுரேந்திரனை விடுவிப்பது உட்படப் பல்வேறு கோரிக்கைகள் பாஜகவினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் கவன ஈர்ப்பைத் தடுக்கும் வகையில், கடந்த வாரம் தொடங்கிய கேரள சட்டமன்றக் கூட்டத் தொடரை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் காங்கிரஸ் உறுப்பினர்கள். ஐந்து நாட்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவக்குமார், முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த பாரக்கல் அப்துல்லா, கேரள காங்கிரஸ் மணி பிரிவைச் சேர்ந்த ஜெயராஜ் ஆகிய உறுப்பினர்கள் தலைமைச் செயலக வளாகத்தின் உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சில நாட்களாகச் சில நிமிடங்கள் மட்டுமே சட்டமன்ற அலுவல்கள் நடைபெற்றன. இதையடுத்து, சபாநாயகரின் வேண்டுகோளுக்கு இணங்க அவை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வாக்குறுதி அளித்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை ஆராய வேண்டிய தேவையில்லை. தலைமைச்செயலகத்தின் உள்ளேயும் வெளியேயும் உண்ணாவிரதம் தொடர்ந்தாலும், சபரிமலை நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வரும் டிசம்பர் 8ஆம் தேதி வரை அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் அரசு.

தடை மட்டுமல்ல, கேரளாவில் முத்தரப்பாக நடைபெறும் இந்த அரசியல் கோதாவும் இன்னும் பல நாட்கள் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

(தொடரும்..)

முந்தைய கட்டுரைகள் :

கட்டுரை - 1: சபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா?

கட்டுரை - 2: சட்டமன்றம் நோக்கித் திரும்பும் பாஜகவின் கவனம்!

கட்டுரை - 3: இரண்டாவது இடம் என்ற பாஜகவின் இலக்கு!

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon