மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி!

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு  சாகித்ய அகாடமி!

மதரா

தமிழ் இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர எழுத்தாளராக இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை, வலிகள் ஆகியவற்றை மண் மணம் மாறாமல் அந்நாவலில் படைப்பாக்கியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு வெளியானவுடன் அவரைத் தொடர்புகொண்டு நமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு விருதுகள், நாவல், கரிசல் வட்டாரம், இசைக் கலைஞர்கள் எனப் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.

“25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் நான் இந்த விருதை எனக்கான அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். கரிசல் வட்டாரத்திலிருந்து வந்தவன் என்ற முறையில் அந்த மனிதர்களின் வாழ்க்கையை அங்குள்ள இசைக் கலைஞர்களை முதன்மைப்படுத்திய நாவலுக்கு விருது கிடைத்திருப்பது கூடுதல் சந்தோஷமாக இருக்கிறது” என்று அந்த சந்தோஷ தருணங்களை மிகவும் இயல்பாகப் பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ரா. தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. சிறுகதைகள், நாவல், விமர்சனம், கட்டுரைகள், சொற்பொழிவு எனப் பலதளங்களில் இயங்கி வரும் அவர் அனைத்துத் துறை சார்ந்தவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்துபவராகவே இருக்கிறார். அதனாலே இந்த விருது அறிவிப்பு சற்று காலதாமதமாக அவருக்கு வழங்கப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றியது. அதை அவரிடமே கேட்டோம்.

அதற்கு அவர், “காலதாமதம் என்று சொல்ல மாட்டேன். ஒரு எழுத்தாளனின் செயல்பாடு என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது தானே. விருதுகள் பெறுவது அவரது செயல்பாட்டை முடிவு செய்வதில்லை. ஒரு விஷயத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டு தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு. எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவுடன் 91ஆம் ஆண்டில் இந்த நகரத்துக்கு வந்தேன். அப்போது சில புத்தகங்கள் எழுதியிருந்தேனே தவிர எனக்கான அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் நான் மிகவும் விரும்பி இயங்கினேன். எனது கவனத்தை வேறு பக்கம் திருப்பவில்லை. நிறைய இடர்பாடுகள், பிரச்சினைகள் வந்தபோதும் நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். தொடர்ந்து இலக்கியத்தையே பற்றிக்கொண்டு நான் இயங்கியதுதான் இந்த விருதை எனக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது என்று நம்புகிறேன்” என்று நிதானமாகப் பேசினார்.

தென் தமிழகத்தின் வறண்ட பூமியான கரிசல் வட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பல ஆளுமைகளைக் கொடுத்துள்ளது. பாரதியிலிருந்து, கி.ரா., கு.அழகிரிசாமி, பூமணி, பா.ஜெயப்பிரகாசம், சோ.தர்மன், கோணங்கி எனப் பெரிய பட்டியல் உண்டு. சிறுகதைகளிலும் நாவல்களிலும் கி.ரா. அந்த மண்ணின், மக்களின் வாழ்க்கையைக் கணக்கின்றி பதிவு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் அந்தப் பணியைச் செய்துவருகின்றனர். எஸ்.ராமகிருஷ்ணனும் அதில் முக்கியமானவர். கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர்களை சஞ்சாரம் நாவலில் பதிவு செய்துள்ளதோடு மிகப் பொருத்தமாக நாவலைக் கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான கி.ரா.வுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

கரிசல் வாழ்க்கை பற்றி அவரிடம் கேட்ட போது முதல் மழையைப் பெறும் போது கிளம்பும் மண்ணின் வாசனையும், வறண்டு போன அந்த மண்ணுக்குள்ளே வாழ்ந்து மறைந்து போனவர்களின் வலியையும் கடத்தினார்.

“கரிசல் மண்ணும் அந்த மனிதர்களும், அந்த வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கண் முன் மறைந்துகொண்டுவருகின்றன. நான் பார்த்த கிராமம் இல்லை, விவசாயம் இல்லை, மனிதர்கள் இல்லை. கி.ராஜநாராயணனும் கு.அழகிரிசாமியும், பூமணியும் எனக்கு முன்பாக அந்த மண்ணைப் பற்றி எழுதினார்கள். இன்னும் சொல்லித் தீராத அந்த வாழ்க்கையை நான் எழுதுகிறேன். ஒரு தலைமுறையே வந்து சொன்னாலும் சொல்லித் தீராத அளவுக்கு அந்த வாழ்க்கை இருக்கிறது. அந்த நிலமே ஒரு வஞ்சிக்கப்பட்ட நிலம். அங்குள்ளவர்கள் வேலைக்காக வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இன்னொரு தலைமுறை அங்கு குடியேறி வாழலாம் என்ற நினைப்பே இல்லாமல் போய்விட்டது. நான் அந்த நினைவுகளைப் பதிவு செய்கிறேன். அங்கே பிறந்து வாழ்ந்து, அங்கேயே அடங்கிப்போனவர்கள் ஏராளமானவர்கள் அந்த மண்ணுக்குள் இருக்கிறார்கள். அவர்களை நினைவுகூர ஆள் இல்லை.

அந்தக் கரிசலின் ஆன்மாவைத் தான் இந்த நாதஸ்வர இசை பிரதிபலிக்கிறது. இந்த இசையைக் கோவில் விழாக்களிலோ, திருமண நிகழ்வுகளிலோ எங்கு கேட்டாலும் நம் உடலை ஏதோ செய்கிறது. எல்லா மங்களகரமான காரியங்களையும் அந்த இசையோடு செய்கிறார்கள். ஆனால் அந்த இசைக் கலைஞர்களுக்கு அந்த மங்களம் கிடைக்கவேயில்லை. செழுமை கிடைக்கவில்லை, வாழ்க்கையின் அங்கீகாரம் கிடைக்கவேயில்லை. ஏதோ ஒரு ரத்னம் பிள்ளைக்கு கிடைத்தது. காருகுறிச்சிக்காரருக்குக் கிடைத்தது. ஆனால் திறமையுள்ள சிறு ஊர்களைச் சார்ந்த பலருக்கு அங்கீகாரங்கள் கிடைக்கவேயில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாடுகளுக்காக ஓடிஓடி ஒன்றுமில்லாதவர்களாகப் போய்விட்டார்கள்” என்றார்.

வெளியே தெரியாமல் போய்விட்டதாக எஸ்.ரா. சொன்ன அந்தக் கலைஞர்கள் சஞ்சாரத்துக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் கவனிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் அவரது பேச்சில் அதிகம் காணப்பட்டது. “தஞ்சாவூர் பக்கம் இருந்த இசைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அவர்களை ஆதரிக்க நிறைய பேர் இருந்தார்கள். இவர்களை ஆதரிக்க யாரும் இல்லை. திருவிழாக்களில் வாசிப்பதைத் தவிர வேறு வாய்ப்புகளே இல்லை. வேறு வேலைக்கும் அவர்களால் போக முடியாது. இதனால் அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கைப்பாட்டை நடத்தினார்கள் என்பது பற்றி எழுதியுள்ளேன். ஆனால் இசையில் பெரிய மேதைகள் எல்லாம் இங்கே இருந்தார்கள். குறிப்பாகத் தென் மாவட்டத்தில் இருந்த நாதஸ்வர மேதைகள் எல்லாம் இங்கேயே இருந்துவிட்டார்கள். இசையை ரசித்த விவசாயிகளுக்குத் தாளம் என்றால் என்னவென்று தெரியாது, இசை நுணுக்கங்கள் பற்றித் தெரியாது. ஆனால் அவர்கள் மனம் ஒன்றி ரசித்தார்கள். ஆழமாக உள்வாங்கிக்கொண்டார்கள். இப்போதும் நாதஸ்வர இசையை எங்கு வாசித்தாலும் நின்று கேட்கிறார்கள். தம்மால் முடிந்த தானியம் தவசங்களைக் கொடுக்கிறார்கள். இசை ஞானம் இல்லாவிட்டாலும் அதை உள்வாங்கிக்கொள்வதால் அவர்களது ஆன்மாவோடு அது தொடர்புடையதாகிறது” என்கிறார் எஸ்.ரா.

சஞ்சாரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நாவலுக்கான வரவேற்பு வாசகர்கள் மத்தியில் எவ்வாறு உள்ளது என்று கேட்டபோது, “ஒவ்வொரு ஆண்டும் நாவல் வாசிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகளவில் நாவலைப் படிப்பதற்கான வாசகர்கள் பெருமளவில் உள்ளனர். நமது காலகட்டத்தில் தான் ஹாரி பாட்டர் போன்ற நாவல்களை வாங்குவதற்காக வரிசையில் நின்றார்கள். ஒருவகையில் நம்முடைய காலம் நாவல்களின் காலம். பெரிய பெரிய நாவல்களை விரும்பி வாங்கிப் படிக்கிறார்கள். என்னுடைய எல்லா நாவல்களும் சிறப்பான கவனம் பெற்றுள்ளன. சஞ்சாரமும் நான்கு ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளன. நாவலுக்கான வாசகர்கள் அதிகமாகிக்கொண்டே உள்ளனர்” என்று கூறினார்.

எழுத்தில் தனது முன்னோடிகளை எஸ்.ரா. எப்போதும் நினைவுகூரத் தவறுவதில்லை. விருது பெற்ற மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ள பெரும் கூட்டம் அவரைத் தேடிக்கொண்டிருக்கும் போதும் அவர் கி.ரா.வையும் அழகிரிசாமியையும் நினைத்துக்கொள்கிறார்.

“கி.ரா.வும், அழகிரிசாமியும்தான் எங்கள் முன்னோடி. நம் தாத்தாவுடைய ஜாடை நம்மிடையே இருக்கும் என்று சொல்வதைப் போல இலக்கியத்தில் அவர்களுடைய ஜாடை எங்களிடையே இருக்கத் தானே செய்யும். அவர்கள் வழியாகத் தான் நான் வந்தேன். எப்போதும் அவர்களைக் கொண்டாடுவேன். எல்லாத் தருணங்களிலும் அவர்களோடு இருக்கிறேன். அவர்களின் படைப்புகளை பற்றிப் பேசுகிறேன். நான் அந்த வழி வந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

நீண்ட ஒரு ஓட்டத்தைத் தொய்வின்றி ஓடும் எழுத்தாளனுக்குத் தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் அவருடைய பயணத்துக்கு மேலும் உற்சாகமூட்டும் என்று நம்பலாம்.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon