மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

இரண்டாவது இடம் என்ற பாஜகவின் இலக்கு!

இரண்டாவது இடம் என்ற பாஜகவின் இலக்கு!

உதய் பாடகலிங்கம்

பந்தயத்தில் பங்கேற்பவருக்கு எப்போதும் முதலிடம்தான் இலக்காக இருக்க முடியும். அதற்குச் சாத்தியமே இல்லை என்னும் பட்சத்தில், அடுத்த இடத்தையாவது கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கை எழுவது இயல்பு. இந்திய நாட்டின் ஒவ்வோர் அங்குலத்தையும் வெற்றிகொள்ள நினைக்கும் பாஜகவின் ‘பிளான் பி’ இதுவே.

தற்போது 19 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. ஏழு மாநிலங்கள் தவிர்த்து மற்றவற்றில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துள்ளது. குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ஜம்மு காஷ்மீர் இதில் சேர்க்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, இங்கு மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து அரியணையில் அமர்ந்திருந்தது அக்கட்சி. கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாத தவிப்பில் இருந்து வருகிறது. நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்தது. இது எல்லாமே தெரிந்த தகவல்தான்.

திரிபுரா பார்முலா

திரிபுராவில் கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சராகத் தொடர்ந்த மாணிக் சர்காரின் மார்க்சிஸ்ட் சாம்ராஜ்யத்தைத் தகர்த்தது சாதாரணமானதல்ல. அதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றியை ருசிக்கும் பார்முலாவைச் சோதித்துப் பார்த்தது. அதில் வெற்றியும் கண்டது. கீழ்மட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, நம்மூர் மாநிலக் கட்சிகளில் காலம்காலமாகப் பின்பற்றிய வழிமுறைதான். இங்கு கைவிடப்பட்ட சம்பிரதாயத்தை, இப்போது தனதாக்கிக்கொண்டுள்ளது பாஜக எனும் தேசியக் கட்சி. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 51.1 சதவிகிதமும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 45.2 சதவிகித வாக்குகளும் இதர கட்சிகளுக்கு 1.9 சதவிகித வாக்குகளும் கிடைத்தன. இந்த இதர வகையறாவில்தான் காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ் கட்சிகள் அடக்கம்.

திடீர் ஏற்றம்

2013இல் நடந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 48.1 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 36.5 சதவிகித வாக்குகளையும், திரிபுரா தேசியவாத பூர்வகுடி கட்சியானது 7.6 சதவிகித வாக்குகளையும் பெற்றன. அப்போது, பாஜக பெற்ற ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை 1.5 சதவிகிதம் மட்டுமே. எப்படி ஐந்தாண்டுகளில் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தது பாஜக? இந்தக் கேள்விக்கான பதிலை, மேலும் சில மாநிலங்களில் முதலிடத்தைப் பிடிக்கப் பிரயோகித்து வருகிறது பாஜக. கேரளாவும் அதில் ஒன்று என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

வளர்ச்சி எனும் சொல், மோடி எனும் மாயப் பிம்பம், எதிர் முகாமில் முளைத்த அதிருப்திகள், வட்டாரப் பிரச்சினைகள்... இவை எல்லாவற்றையும் மீறி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் ஆகியவற்றைத் திரிபுராவில் முழு பலத்தோடு பிரயோகித்தது பாஜக தலைமை. அதற்குத் தக்கவாறு பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல் பல்வேறு தலைவர்கள் அங்கு பிரச்சாரம் செய்தனர். ஒரு சில இடங்களையாவது பிடிக்காமல்விட்டால், அது பாஜகவின் பிரம்ம பிரயத்தனங்களுக்கே இழிவு என்று சாதாரண மக்களும் நினைக்கும் வகையில் பாஜகவின் செயல்பாடுகள் இருந்தன. தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்த மாற்றங்கள் தொடங்கவில்லை என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பழங்குடிகளுக்கு முன்னுரிமை

திரிபுராவில் 31 சதவிகிதப் பழங்குடிகள் வசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே அளவுக்கு, மேற்கு வங்கத்தில் இருந்து இடம்பெயர்ந்த வங்காளிகளும் அங்கு உள்ளனர். வங்காளிகள் அதிகார பீடத்தில் இருக்க, பழங்குடி மக்கள் கீழடுக்குகளில் உழலும் சமூக முரண்களைப் பயன்படுத்திக் கொண்டது பாஜக. தேசியத்தாய் வேடமிட்ட பெண்ணுக்குச் சேலை உடுத்தாமல், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினப் பெண் போன்ற உடையலங்காரத்தை அணிவித்து அழகு பார்த்தது. 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான மனநிலையையும், ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் தனதாக்கிக்கொண்டு வெற்றி பெற்றது பாஜக. 2013 தேர்தலில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முயற்சியில் கரையேறவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, இந்தத் தேர்தலில் அங்கு ஓரிடம்கூட அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை.

காங்கிரஸை முந்திக்கொண்டு, தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டே இருந்தது பாஜக. வழக்கம்போல, ஊடக வெளிச்சத்தையும் பெற்றுக்கொண்டே இருந்தது. இதுவே, ஐந்தாண்டுகளில் பாஜகவின் 1.5 சதவிகித வாக்குகள் 51.1 சதவிகிதமாக அதிகரித்தபோது அதிர்ச்சிக்குப் பதிலாக ஆச்சர்யத்தையே பலருக்கும் ஏற்படுத்தியது.

இரண்டாம் இடத்தில் பாஜக

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருந்தன. இப்போது, அங்கு மம்தா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது திருணமூல் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்குமான மோதல்களே தேசிய ஊடகங்களில் இடம்பிடித்தன. காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியும் மூன்றாம் இடத்தைப் பிடிப்பதற்குப் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜோதிபாசுவுக்குப் பின்னர் வலுவான தலைமை இல்லாதது, நந்திகிராம் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கவனமாகக் கையாளாதது, அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தராதது போன்றவை மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் மனதில் இருந்து விலகக் காரணம். மம்தாவை எதிர்க்கும் பாஜக அரசியலின் வீரியத்தை உணர்ந்தே, காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியும் உரத்துக் குரலெழுப்பி வருகின்றன.

இப்போது, சபரிமலை விவகாரத்துக்கு வரலாம். சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி அளிக்கப்படுவதாகக் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதில், கேரள காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதில் பல நாட்கள் குழப்பமே நிலவியது.

மாறிய நிலைப்பாடு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள காங்கிரஸ் கட்சியிலுள்ள பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மறுத்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “இந்திய அரசியலமைப்பைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு இல்லை. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது; அனைவரையும் பிணைப்பது” என்று தெரிவித்தார். தீர்ப்பு வெளியாகி ஒரு வாரம் கழித்து பத்தனம்திட்டாவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா. இதுபற்றிப் பேசிய ரந்தீப், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது புதிதல்ல என்றும், இதனால் காங்கிரஸ் மேலிடத்துக்கும் மாநிலத் தலைமைக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.

முதல் கோணல்

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமைக்கும் அடிமட்டத் தொண்டனுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், மாநிலத் தலைமைக்கே முரண்பாடு இருப்பதை என்னவென்று சொல்வது? நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் களமிறங்கியது ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி. அதற்கு எதிராகச் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றது. பெண்ணியவாதிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் இதனை வரவேற்றனர். சபரிமலை தீர்ப்பைத் தீவிரமாக எதிர்த்தவர்களையும், எந்தக் கருத்தும் இல்லாமல் இருந்த இந்து மக்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையைச் செய்யத் தொடங்கின இந்துத்துவ அமைப்புகள்.

சபரிமலை கோயிலுக்குப் போக மாட்டோம் என்று பெண்களே வீதியில் இறங்கி முழங்கத் தொடங்கினர். கோயில்களில் நின்று சபதம் எடுத்தனர். இது வாட்ஸ் அப்களிலும் இதர சமூக வலைதளங்களிலும் விர்ரென்று பரவியது. பாஜக தலைவர்கள் இதனை வரவேற்றுப் பேசினர். இறைவனைப் பொறுத்தவரை பாலின, சாதி பேதங்கள் கிடையாது என்று பேசிவந்த சங் பரிவாரத் தலைவர்கள் ஒரு சில நாட்களில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணையும் சக்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்த பாஜகவுக்கு உறுதுணையாக நிற்கத் தொடங்கினர்.

கடந்த நான்காண்டுகளாக அமித் ஷாவின் சாதுர்யத் திட்டங்களும் பொதுக்கூட்ட முழக்கங்களும், புதிய உறுப்பினர் சேர்க்கையும் சாதிக்காததைச் சபரிமலை தீர்ப்பு தங்களுக்குத் தரும் என்று தெரிந்துகொண்டது கேரள பாஜக. போதாக்குறைக்கு பந்தளம் ராஜா குடும்பத்தினரும் தந்திரி குடும்பத்தினரும், மாநில அரசின் முடிவை வன்மையாகக் கண்டித்தனர்.

கட்டாயத்தில் காங்கிரஸ்

ஆட்சியாளருக்கு எதிர்த்திசையில் இருந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது காங்கிரஸ். உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் மக்களின் உணர்வு காயப்பட்டதாகத் தெரிவித்தார் ரமேஷ் சென்னிதலா. சீராய்வு மனு தாக்கல் செய்ய விரும்பும் பக்தர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டதாகக் கூறினார். தெளிவாகச் சொல்வதானால், இந்து மக்களின் நண்பர் என்ற இடத்தைப் பிடிக்க விரும்பினார். இதற்குக் காரணம் உண்டு.

கடந்த 2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் 15 சதவிகித வாக்குகளைப் பெற்றது பாஜக. அதன் வாக்கு வங்கி மேலும் அதிகரித்தால், காங்கிரஸின் பாடு திண்டாட்டமாகிவிடும். முக்கியமாக, பாஜகவின் அதிகரிக்கும் வாக்கு சதவிகிதம் காங்கிரஸின் இழப்பாகவே இருக்குமென்பதைச் சபரிமலை தீர்ப்பு தொடர்பான போராட்டங்கள் பிரதிபலித்தன. அதே நேரத்தில் சாலையில் இறங்கிப் போராடவும் காங்கிரஸ் கட்சியினால் முடியாது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர் கேரள காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த நேரத்தில், பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே பக்கத்தில் உள்ளது என்று பினராயி விஜயன் கூறத் தொடங்கினார். பாஜகவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், மார்க்சிஸ்ட்டை எதிர்த்து கோதாவில் நிற்பது தாங்கள் மட்டுமே என்று அடித்தட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள முடிவெடுத்தனர் கேரள காங்கிரஸ் தலைவர்கள்.

கடந்த ஒரு வார காலமாக கேரளச் சட்டமன்றத்தை முடக்கிவரும் காங்கிரஸ் கட்சியின் புதிய ஆட்டம், அதன் வெளிப்பாடுதான்...

(தொடரும்...)

முந்தைய கட்டுரைகள்:

சபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா?

சட்டமன்றம் நோக்கித் திரும்பும் பாஜகவின் கவனம்!

செவ்வாய், 4 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon