மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

விஷாலுக்கு நேரடி சவால் விட்ட தனுஷ்

விஷாலுக்கு நேரடி சவால் விட்ட தனுஷ்

மின்னம்பலம்

டிசம்பர் மாத இறுதியில் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் தற்போது மாரி 2, தேவ் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் மாரி 2 படம் பற்றிய அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் முக்கிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

நவம்பர் மாதம் தொடக்கத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த சர்கார், மாத இறுதியில் ரஜினிகாந்த் நடித்த 2.O ஆகிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வரவேற்பு பெற்றன. வசூல் முக்கியத்துவம் உள்ள இரு நடிகர்களின் படங்கள் வெளியாவதால் மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை நவம்பரில் ரிலீஸ் செய்யத் தயாராக இல்லை. ஜனவரி மாதம் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என ரஜினி, அஜித் படங்கள் வருவதால் டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு படங்களை வெளியிடப் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால் இந்தத் தேதிகளுக்கு போட்டியும் அதிகமானது.

இதில் கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தை குடியரசு தின விடுமுறையைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். அஜித், ரஜினி படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து வருவதால் அந்தப் படத்திற்கு தியேட்டர்களைக் கைப்பற்றுவதில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சீதக்காதி, டிசம்பர் 21ஆம் தேதி அடங்க மறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம், டிசம்பர் 28ஆம் தேதி கனா ஆகிய படங்களை ரிலீஸ் செய்து கொள்ளத் தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியது.

மாரி 2 படத்தை டிசம்பர் 21ஆம் தேதி திரையிடக் கோரிய தனுஷுக்கு டிசம்பர் 28 அல்லது ஜனவரி 14 ஆகிய தேதிகளில் படத்தை ரிலீஸ் செய்து கொள்ளும்படி சங்கத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் தனுஷ் தற்போது ஏற்கெனவே தாங்கள் அறிவித்தபடி டிசம்பர் 21ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் ட்ரெய்லரை நாளை (டிசம்பர் 5) வெளியிடவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

விஷாலுக்கும், தனுஷுக்கும் இடையே நிலவிவரும் மறைமுகப் போட்டி குறித்து ஏற்கெனவே நமது மின்னம்பலத்தில் பதிவுசெய்திருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்ததைப் போல விஜய் ஆண்டனியுடன் கூட்டணி சேர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். இதற்கு விஷாலின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கப்போகிறது என்பதுதான், சங்கத்தில் அவரது அதிகார பலத்தின் உண்மைத் தன்மையை விவரிக்கும்.

செவ்வாய், 4 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon