மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

சட்டமன்றம் நோக்கித் திரும்பும் பாஜகவின் கவனம்!

சட்டமன்றம் நோக்கித் திரும்பும் பாஜகவின் கவனம்!

ஒரு போராட்டம் மேற்கொள்ளப்படும்போது அதில் யார் பங்கு பெறுகிறார்கள்? எத்தகைய நோக்கத்துக்காக அது நடத்தப்படுகிறது என்பதைப் போலவே, அந்தப் போராட்டம் எங்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதும் முக்கியமானது. மாதவிடாயை ஒவ்வொரு மாதமும் எதிர்கொள்ளும் பருவத்திலுள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதால் தீட்டு ஏற்படும் என்றும், அதனால் ஆகம விதிகள் தடம்புரளும் என்றும் கூறின சபரிமலை வட்டாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகள். இவர்களது போராட்டம் நிலக்கல், பம்பை, சபரிமலை சன்னிதானத்துக்குச் செல்லும் வழியிலுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கொச்சி, திருவனந்தபுரம் போன்ற பெருநகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைவிட, சபரிமலை வட்டாரத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் இப்போது வரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவிடாமல் தடை செய்து கொண்டிருக்கின்றன. இதன் பக்கவிளைவுகள் கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கையில் பிரதிபலித்தது.

குறைந்தது எண்ணிக்கை

கடந்த நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 75,000 பக்தர்கள் சபரிமலை சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதற்கு மாறான நிலைமை இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சபரிமலைக்கு வந்த பக்தர்களின் வருகை குறித்துத் தகவல் வெளியிட்டார் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார். முதல் 35 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் வந்ததாகவும், இதனால் கோயில் வருமானம் 159 கோடி ரூபாயாக உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்கு முந்தைய ஆண்டு, குறிப்பிட்ட காலகட்டத்தில் கோயிலின் வருமானம் 141.18 கோடியாக இருந்தது. இதிலிருந்தே, கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த பக்தர்களின் வருகைக்கும், தற்போதைய எண்ணிக்கைக் குறைவுக்குமான வித்தியாசம் தெரியும். இதனைச் சரி செய்யும் பொருட்டு திரை நட்சத்திரங்களின் உதவியை தேவசம் போர்டு நாடவுள்ளதாகத் தகவல் வெளியானது தனிக்கதை.

வழக்கமாக தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இதர வடமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாத பின்பகுதியில் அதிகரிக்கும். இதில் சரிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கிலேயே, சபரிமலைக்குச் செல்லும் வழியில் நடத்தப்பட்ட போராட்டங்களின் வீரியம் மெல்லக் குறைந்தது. அதாவது, சபரிமலை போராட்டங்களினால் அங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே இதன் மூலம் தெரியவரும் உண்மை.

திசை திரும்பிய பாஜக

இதற்கு முன்னர் இரண்டு முறை கோயில் நடை திறக்கப்பட்டபோதும், நான்கு அல்லது ஐந்து நாட்களே பக்தர்களின் வருகை இருந்தது. இந்த முறை அப்படியல்ல; மொத்தமாக 62 நாட்கள் மண்டல, மகரவிளக்கு பூஜை காலகட்டத்தில் சபரிமலை கோயிலுக்குப் பக்தர்கள் குவிவார்கள். இதனால் கோயில் வருமானம் பாதிக்கப்படும் என்ற கூக்குரல்கள் கடந்த மாத இறுதியிலேயே அதிகளவில் எழுந்தன. இதன் எதிரொலியாக, பாஜக தனது போராட்டத்தின் திசையை மாற்றிக்கொண்டுள்ளது.

சபரிமலை வட்டாரத்தில் 144 தடையை விலக்குவது, ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது, இரவில் கோயில் வளாகத்தில் தங்க அனுமதியளிப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு மேற்கொள்வது உட்படப் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி, கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டது பாஜக. இந்த பிரச்சினையைத் தேசிய அளவில் பாஜக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே குறைவாக உள்ள பக்தர்களின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என்ற சிந்தனை பல்கிப் பெருகிய வேளையில், ஓர் அறிவிப்பை வெளியிட்டது பாஜக. கைது செய்யப்பட்ட சுரேந்திரனை விடுவிக்கும் வகையில், டிசம்பர் 3ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் எதிரே கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் திட்டமிடப்பட்டது. நேற்று, இதன்படி உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியது பாஜக.

செயலகத்தின் உள்ளே... வெளியே...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வர் என்று பாஜக மேலிடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்கள் இந்தப் போராட்டத்தைத் தொடரவுள்ளதாகவும், இடதுசாரி கூட்டணி அரசு தங்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பதைப் பொறுத்து போராட்டம் எந்த திசையில் செல்லும் என்பதை முடிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன். சுரேந்திரன் கைது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சுரேந்திரனை விட முக்கியமான விஷயங்கள் நிறைய இருப்பதாகத் தெரிவித்தார். சபரிமலை கட்டுப்பாடுகளைப் பலரும் வரவேற்கத் தொடங்கியுள்ளதால், பாஜகவின் கவனம் இப்போது திரும்பியுள்ளதாகக் கூறினார். பினராயி விஜயன் மட்டுமல்ல, அவரது அமைச்சரவையில் உள்ளவர்களும் பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான பேசுபொருளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவே செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரு சோறு பதமாக விளங்குகிறார் கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் ஜி.சுதாகரன்.

வலுக்கும் மோதல்

டிசம்பர் 1ஆம் தேதியன்று ஆலப்புழாவில் நடந்த கூட்டமொன்றில் பேசிய சுதாகரன், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தேவையான பொருட்களை ஒருகாலத்தில் கழுதைகளே சுமந்து சென்றதாகத் தெரிவித்தார். “இந்தக் கழுதைகளுக்கு உள்ள சக்தியும், ஐயப்பன் மீதான பாசமும் சபரிமலை கோயில் தந்திரியிடம் கிடையாது. அப்படி இருந்திருந்தால், ஐயப்பன் கோயில் சாவியைப் பூட்டி எடுத்துச் செல்வேன் என்று கூறியிருப்பாரா? அவர் இருக்கும் இடத்தில் ஐயப்பன் இருப்பாரா என்பது சந்தேகம்தான்” என்று கூறினார். அவ்வளவுதான். அவருக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கிவிட்டன. என்ன பேசினாலும் எதிர்ப்பு வரும் என்ற நிலையில், இவ்வாறான பேச்சுகள் பெருகுவது திட்டமிட்ட தாக்குதலாகத் தோன்றுவது இயற்கை.

பாஜகவின் குரலை அதிகரிக்க வைக்கும் முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இது அரசியல் நோக்கர்களின் கருத்து மட்டுமல்ல, இதற்கு முன் கேரள மண்ணை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் கருத்தும் அதுதான்.

மறைமுக இணக்கம்

கடந்த நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கேரள சட்டமன்றம் சபரிமலை விவகாரத்தைக் காரணம் காட்டி முடக்கப்பட்டது. மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி உட்படப் பலரும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மார்க்சிஸ்ட் அரசை விமர்சித்து வருகின்றனர். ஒரு படி தாண்டி, பாஜக - மார்க்சிஸ்ட் இடையே மறைமுகமான இணக்கம் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன்.

பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததாக திருவாங்கூர் தேவசம் போர்டு கவலைப்படுவது, சபரிமலையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பாஜகவினர் போராட்டக் களத்தை மாற்றிக்கொண்டது, பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சி சபரிமலை விவகாரத்தில் தலைகீழாகச் செயல்படுவது போன்றவை அம்மாநிலத்தின் அரசியல் சதுரங்கத்தை அங்குலம் அங்குலமாகப் படமிட்டுக் காட்டுகின்றன.

பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான பிரச்சினையாக சபரிமலை விவகாரம் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது காங்கிரஸ் கட்சி. தாங்கள் தற்போது வகித்துவரும் இரண்டாவது இடம் என்ற ஸ்தானம் பாஜகவுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. இடம் தானே அரசியலில் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது!

(தொடரும்...)

நேற்றைய கட்டுரை: சபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா?

திங்கள், 3 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon