மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

கேள்விகளை உடைத்த ரொனால்டோ!

கேள்விகளை உடைத்த ரொனால்டோ!

கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தனி பிளேயரின் மீதும் அனைத்துப் பொறுப்புகளையும், காரணங்களையும் சுமத்திவிட முடியாது. 11 பேரின் 22 கால்களும் ஒரே மாதிரியான ரிதத்தில் இயங்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் எனும்போது, ரொனால்டோ எனும் தனி மனிதனின் மீது அனைத்து வெற்றிக்கான பாராட்டுகளும், அனைத்துத் தோல்விக்கான காரணங்களும் சுமத்தப்பட்டபோது இந்த உலகமே கொந்தளித்தது. அவர் என்ன கடவுளா என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், நடந்தது என்ன?

பிரீமியர் லீகில் பல சாதனைகளைச் செய்துவிட்டு, லா லிகா தொடரில் அனைத்துச் சாதனைக்கும் சொந்தக்காரனாய் மாறிய ரொனால்டோ தனது இடத்தை ‘சீரி A’-வுக்கு மாற்றினார். ரொனால்டோ சென்றால் என்ன என்று கிண்டலடித்தார்கள். கேரத் பேல் இருக்கிறார் என மார்தட்டினார்கள். உலகின் சிறந்த வீரர்கள் என்று பெருமைப்பட்டது ரியல் மேட்ரிட். ஆனால், தற்போதைய நிலை என்ன?

ரொனால்டோவின் மாற்றம் இத்தாலியின் புகழ்பெற்ற கிளப் லீக் போட்டியான சீரி A-வுக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. உலகின் பல தலைசிறந்த வீரர்கள் இத்தாலி லீகில் இருந்தாலும், அவர்கள் இருந்த காலம் வெவ்வேறாக இருந்தது. அவர்களின் இருப்பு அந்த லீகினை பணம் கொழிக்கும் பூமியாக மாற்றவில்லை. சாம்பியன்ஸ் லீக் போன்ற போட்டிகளுக்கு நல்ல டீம்களை தேடித்தரும் செலக்‌ஷன் கிளப்பாகவே இருந்தது. ஆனால், ரொனால்டோவின் வருகை இதனை மாற்றியிருக்கிறது.

உலகின் தலைசிறந்த பிளேயர்கள் இத்தாலி லீக் அணிகளின் மீது கவனம் செலுத்துகின்றனர். ரொனால்டோவுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்ட கேரத் பேல் ரொனால்டோ இல்லாத இடத்தைப் பயிற்சி மைதானமாக நினைத்தாரோ என்னவோ, அவர் மைதானத்தில் கோல் அடிக்காமல் 700 நிமிடங்களுக்கும் மேலாகச் செலவிட்டுவிட்டார். இதெல்லாம் ரொனால்டோ இல்லாததாலா?

ரொனால்டோ ஒரு காந்தம் போல செயல்பட்டார். அருகே தன்னைப்போன்ற ஸ்டிரைக்கர் வந்தால் விலகிச் சென்றுவிடுவதும், தனக்குத் தேவையான ஃபார்வேர்டு வீரர்கள் வந்தால் நெருங்கிச் செல்வதுமென காந்தத்தின் தன்மையைப் பெற்றிருந்தார் ரொனால்டோ. ‘தன்னால் இயலாதபோது ரொனால்டோ இருக்கும் பக்கம் பந்தைக் கொடுத்துவிட்டால் அது கோலாகிவிடும்’ என்ற ஃபார்வேர்ட் பிளேயரின் எண்ணத்தையும், ‘ரொனால்டோவிடம் பந்தைக் கொடுத்துவிட்டால் நமக்கு பெனால்டி ஏரியாவில் மீண்டும் கொடுத்துவிடுவார்’ என்ற ஸ்டிரைக்கரின் எண்ணமும், ‘நீ டிஃபண்டர். கோல் அடிப்பாயா?’ எனக் கேட்காமல் பந்தைக் கொடுத்து அழகு பார்த்தவர் ரொனால்டோ என்பதால்தான் இத்தாலி லீகுக்குச் செல்லத் தயார் என பிரீமியர் லீகில் இருந்து பல வீரர்கள் கிளம்பியிருக்கின்றனர். இன்னார் இருந்தாலே இந்த லீக் வெற்றிகரமாக இயங்கும் என நம்பிக்கையுடன் பல இளைய தலைமுறையினர் கிளம்புவதே ரொனால்டோ என்ற தனி நபர் எத்தனை முக்கியமானவர் என்பது தெரிகிறது.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon