மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

அரசியல் ஆபத்தான விளையாட்டு: ரஜினி பேட்டி!

 அரசியல் ஆபத்தான விளையாட்டு: ரஜினி பேட்டி!

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சிக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.

அரசியலுக்கு வரப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து ஒரு வருடம் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை அவர் கட்சி தொடர்பான எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போதுவரை ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணிகளும், ஆலோசனைக் கூட்டங்களும் மட்டுமே நடைபெற்றுவருகின்றன. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த ரஜினிகாந்த், மோடியை பலசாலி என்று மறைமுகமாகப் பாராட்டியிருந்தார்.

இதற்கிடையே ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள 2.o திரைப்படம், தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் இந்தியா டுடே இதழுக்கு ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமா, அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அது கேள்வி பதில் வடிவத்தில் பின்வருமாறு.

எம்.ஜி.ஆரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

குறிப்பாக, அவரின் உதவும் மனப்பான்மையை, இயல்பாகவே அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை அவருக்கு இருந்தது. ஏழைகள் மேல் கரிசனம் இருந்தது. அரசியலுக்கு வந்ததற்கு பிறகு மட்டுமல்ல, சினிமாவில் இருந்தபோதே அவருக்கு அந்த பண்பு இருந்தது. அவர் மிகச்சிறந்த மனிதநேயர், இதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது.

ஜெயலலிதா பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

ஜெயலலிதா மிகச்சிறந்த மனிதர். அவருடைய தைரியம், மன உறுதியை பாராட்டியே ஆக வேண்டும்.

அவருடைய ஆட்சி எப்படி இருந்தது?

அதைப் பற்றி நான் தற்போது பேச விரும்பவில்லை. ஆனால், ஆண்கள் நிறைந்த உலகத்தில் ஒரு பெண்ணாக நின்று ஜெயித்தாரே...அதுதான் வரலாறு.

ஜெயலலிதாவுடன் நீங்கள் கருத்து மாறுபாடு கொண்டிருந்தீர்கள், 1996இல் அவருக்கு எதிரான உங்களின் பேச்சு, அதிமுகவின் தேர்தல் வெற்றியை பாதித்தது. அதன்பிறகு அவருடன் இணக்கமான உறவு இருந்ததா?

ஆம், அவர் என்னுடைய மகளின் திருமணத்திற்கு வருகை தந்தார். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம்.

நீங்கள் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்த பிறகு, உங்களுடைய போட்டியாளரான கமலிடம் அதுகுறித்து விவாதித்தீர்களா?

போட்டியாளரா?, நான் யாரையும் போட்டியாளர் என்று கூற மாட்டேன். அவர் என்னுடைய நல்ல நண்பர், சக நடிகர், இதுதான் உண்மை. படப்பிடிப்பின்போது நான் வசனம் பேசுவதற்கு கமல்ஹாசன் உதவுவார். அவர் இன்னும் என்னுடைய நெருங்கிய நண்பர்தான்.

பிரதமர் மோடியைப் பற்றிய உங்களுடைய உணர்வுகளைக் கூறுங்கள்?

பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடினமானவற்றையும் சிறந்தவற்றையும் செய்ய முயற்சிக்கிறார். இதைத்தான் தற்போது சொல்ல விரும்புகிறேன்.

திரைப்படங்களில் உங்கள் நடிப்பு அதிவேகமாக இருக்கிறது. ஆனால் அரசியலில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கிறீர்கள், உங்கள் திட்டங்கள் குறித்து பேசுவதில் நிதானம் காட்டுகிறீர்கள்?

அரசியல் என்பது மிகப்பெரிய விளையாட்டு, அது ஆபத்தானதும் கூட. அதனால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். நேரம் என்பது மிகவும் முக்கியமானது.

தமிழ்நாட்டிற்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

முதலில் தலைமை. தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் உருவாகியுள்ளது. பின்னர் மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும், அது மிகவும் முக்கியம். அவர்களின் வாக்குகளை பெறுவதை விட இது முக்கியமானது. தமிழர்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது? கடினமான உழைப்பாளிகளாகவும், அறிவார்ந்தவர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்கள் யார், அவர்கள் திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டார்கள். அதனை முறைப்படுத்தவில்லை எனவே அதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

அயோத்தி குறித்த கேள்விக்கு கருத்து கூற மறுத்துவிட்டார்.

நன்றி: இந்தியா டுடே

ஞாயிறு, 2 டிச 2018

அடுத்ததுchevronRight icon