மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

பன்றிக்காய்ச்சல்: மூத்த வழக்கறிஞர் மறைவு!

பன்றிக்காய்ச்சல்: மூத்த வழக்கறிஞர் மறைவு!

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடல் நலக்குறைவால் இன்று (டிசம்பர் 2) காலமானார்.

முத்துகுமாரசாமி 1948ஆம் ஆண்டு, டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தார். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில், சட்டப் படிப்பை முடித்தார். 1973ஆம் ஆண்டு வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருமான கிருஷ்ணமூர்த்தியின் ஜூனியராக பணியில் சேர்ந்தார். 1994 முதல் 1996 வரை அரசு பிளீடராக பணியாற்றினார். 1998-1999 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் மூத்த சட்ட ஆலோசகராகவும் இருந்தார்.

2001 ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த சட்ட ஆலோசகராகவும், 2006 ஆம் ஆண்டு வரை கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாகவும் பணியாற்றினார். 2012-2014 ஆகிய இரண்டு ஆண்டுகள் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவராகப் பணியாற்றினார். 2016 ஆகஸ்ட் 26 முதல் 2017 ஆகஸ்ட் வரை அரசு தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த ஒரு வாரமாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 2) உயிரிழந்துள்ளார். இவரது உடல் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சிலரில் ஒருவர் முத்துகுமாரசாமி.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon