மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

திருமணத்துக்குத் தடை: யோகி ஆதித்யநாத்

திருமணத்துக்குத் தடை: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில், ஜனவரி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்குத் திருமணங்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில், வரும் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 4ஆம் தேதி வரை, 50 நாட்கள் கும்பமேளா நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாயை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பமேளாவை போன்று புத்த பூர்ணிமா உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளன. இந்த பண்டிகைகளை முன்னிட்டு மாநில மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து கங்கையில் நீராடுவார்கள்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, அலகாபாத் மாநகரின் பெயர் சமீபத்தில் பிரயாக்ராஜ் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , அலகாபாத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களுக்குத் திருமணங்கள் நடத்தத் தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உபிக்கு வருகை தரும் மக்கள், அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் அதிகளவு தங்கிச் செல்வதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமணங்கள் நடத்தினால் யாத்திரிகர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

அதன்படி, மாவட்ட நிர்வாகம், அனைத்துத் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, விடுதிகளில் தங்கவோ தடை விதிக்கப்படுகிறது, முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon