மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

பிரான்ஸில் கலவரம்: அவசர நிலைக்கு வாய்ப்பு!

பிரான்ஸில் கலவரம்: அவசர நிலைக்கு வாய்ப்பு!

எரிபொருள் உயர்வுக்கு எதிராக பிரான்ஸில் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவசர நிலையை பிரகடனப்படுத்தலாமா என்று அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் எரிபொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், அவற்றுக்கான வரியை அந்நாட்டு அரசு அதிகரித்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக அதிபர் மேக்ரோன் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதிபர் இமானுவல் மேக்ரோன் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. நேற்று(டிசம்பர் 1) தலைநகர் பாரீஸில் நடைபெற்ற போராட்டத்தில் முகமூடி அணிந்த நபர்கள், கார், கட்டடங்கள் ஆகியவற்றுக்குத் தீ வைத்ததுடன் கடைகளிலும் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். காவல்துறையினரோடு கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1968ஆம் ஆண்டுக்கு பின் பாரீஸில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் இது என்று கூறப்படுகிறது. 133 பேர் காயமடைந்துள்ளனர். 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நிலையை தான் இதுவரை பார்த்ததில்லை என்று பாரீஸ் நகர மேயர் ஜீன்னே டி ஹூட்சேரே கூறியுள்ளார். இந்த போராட்டத்திற்கு அதிபர் மேக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யூரோப் 1 வானொலிக்கு பேட்டியளித்துள்ள அரசு செய்தி தொடர்பாளர் பெஞ்சமின் கிரிவோக், “ இந்த சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon