மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

அரசியல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு!

அரசியல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு!

“அரசியல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு. கொள்கை கூட்டணிக்கு நிரந்தர எதிரிகளும், நிரந்தர நண்பர்களும் உள்ளனர்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 86வது பிறந்தநாள் விழா, சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் இன்று (டிசம்பர் 2) கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்பு நடந்த பிறந்தநாள் விழா கருத்தரங்கில், திமுக பொருளாளர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இறுதியாக ஏற்புரையாற்றிய வீரமணி, “பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்த எதிரிகளை விட தற்போதுள்ள எதிரிகள் ஆபத்தானவர்களாக உள்ளனர். அவர்களை பார்த்து கண்டுபிடித்து புரிந்துகொள்வதற்கே பலர் விளக்கம் கூறும் நிலையில் உள்ளோம். சாதாரணமாக அவ்வளவு பெரிய ஆபத்துகள். புறத்தோற்றத்தில் சாதி ஒழிப்பு போராளிகள் போல நடித்துக் கொள்வார்கள், தமிழை தாங்கள் காதலிப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். ஆகவே தமிழ் இன உணர்வு, மான உணர்வுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“திமுக- காங்கிரஸ்- மதிமுக- இடதுசாரிகள்- விசிக- தி.க இடையே கொள்கைக் கூட்டணி உள்ளது. கொள்கை கூட்டணியாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், இந்த கொள்கைக் கூட்டணிக்கு நிரந்தர எதிரிகள் உண்டு, நிரந்தர நண்பர்கள் உண்டு. ஆனால் அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை” என்று தெரிவித்த வீரமணி, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி. இதில் மூன்றாவது குழலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது என்றும், மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வரானால் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றை காத்து நிலைநிறுத்துவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்வோரை கொலை செய்ய பெற்றோர் கூலிப்படையை ஏவுகின்றனர், எனவே கூலிப்படையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஒரு அனுதாபம் அல்லது ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. பிறகு என்ன மனதின் குரல் என்று பேசுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon