மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

ராஜீவ் படுகொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: விடுதலைப் புலிகள்!

ராஜீவ்  படுகொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: விடுதலைப் புலிகள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குக் காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதனை விடுதலைப் புலிகள் பலமுறை மறுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சட்டத் துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் நேற்று (டிசம்பர் 1) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ “பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. சிலர், ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர், ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்றுரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ,இந்தியாவைத் தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ,தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை,திட்டம் தீட்டவுமில்லை என்று அறிக்கையில் விளக்கியுள்ள அவர்கள்,

“எங்கள் ஆயுத மௌனிப்பின் 10 வருடங்களுக்குப் பிறகும் கூட புலிகளையும் தமிழீழ மக்களையும் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்பு படுத்துவதைக் காணும் பொழுது, இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது” என்று விமர்சித்துள்ளனர். தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது என்று குறிப்பிட்டு அதுகுறித்த தகவல்களையும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

முன்பே மறுத்துள்ளோம்

ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள் (1991) விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராக இருந்த கிட்டு ‘இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை’ என அறிக்கை வெளியிட்டார். இவ்வறிக்கை அப்போது இந்திய நாளேடுகளில் வெளியானது.

கொழும்பில் பி.பி.சி. (B.B.C.) நிருபராக இருந்த கிரீஸ் மோரீஸ் (CHRIS MORRIS) யாழ்ப்பாணத்தில் 1991 செப்டம்பர் 1 இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை நேர்காணல் கண்டபோது, ‘ராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை “Our movement is not in any way involved in the killing of Mr. Rajiv Gandhi’ எனத் தெளிவாகக் கூறினார் பிரபாகரன்.

10 ஏப்ரல் 2002இல் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பு ஒன்றில் ‘ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ‘அது ஒரு துன்பியல்’ (‘It was a tragedy’) என்று பிரபாகரன் பதிலளித்தார் என்றும் தங்களது அறிக்கையில் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சூழ்ச்சியின் விளைவே ராஜீவ் படுகொலை

“1983இல் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி, ‘இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே’ என இந்திய அரசின் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார். இந்திரா காந்தி மறைவிற்குப் பின்பும்,அவரது புதல்வரான இந்திய முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவைப் பேணிவந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ள அவ்வறிக்கையில்,

இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்கோடு இலங்கை அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே ராஜீவ் காந்தி படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம்.தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ் காந்தி படுகொலை பழி உடனடியாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும், புலிகள் மீதான களங்கம் நீங்குமானால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon