மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

கஜா: மரங்களை அகற்றும் காகித ஆலைகள்!

கஜா: மரங்களை அகற்றும் காகித ஆலைகள்!

கஜா புயலால் சேதமுற்ற மரங்களை அகற்ற மர ஆலைகளும், காகித ஆலைகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தால் சேதமடைந்து விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவது மிகப்பெரும் சவாலாக உள்ளது. விவசாயிகளாலும் இம்மரக் குவியல்களை அகற்றுவது சாத்தியமற்ற பணியாக உள்ளது. ஆகையால், மரங்களை அகற்றும் பணியை எடுத்துக்கொள்ளும்படி டிஎன்பிஎல், சேஷாயி பேப்பர்ஸ் & போர்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட மர ஆலைகள் மற்றும் காகித ஆலைகளின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை செயலாளரான ககன்தீப் சிங் பேடி நேற்று (டிசம்பர் 1) செய்தியாளர்களிடம் பேசுகையில், “இக்கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மரங்களை வெட்டி விலைக்கு வாங்கிக் கொள்வர். அகற்றப்படும் மரங்கள் காகித உற்பத்திக்கும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

தைல மரங்கள், சவுக்கு மரங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்குத் தேவையான எந்திரங்களை டிஎன்பிஎல் நிறுவனம் எடுத்துவரும். மரங்களை வெட்டிய பிறகு அவற்றை விவசாயிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்கிக்கொள்வர். இதற்கான ஏஜெண்டுகளின் பெயர்களை அரசு வெளியிடும். அவர்களை தோட்டங்களைச் சுத்தப்படுத்துவதற்கு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். கஜா புயலால் நெற்பயிர்கள் சேதமாகியுள்ளதால், அதுபற்றி ஓர் ஆய்வை நடத்தும்படி ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநருக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon