மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

தேர்தல் நிதி: ரூ.1000 கோடி வசூலித்த பாஜக!

தேர்தல் நிதி: ரூ.1000 கோடி வசூலித்த பாஜக!

கடந்த நிதியாண்டில் தேர்தல் நிதியாக ரூ.1000 கோடியை ஆளும்கட்சியான பாஜக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி வருமான தாக்கலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பணக்கார கட்சியான பாஜக, அக்கட்சிக்கு உதவக் கோரி மக்களிடம் நன்கொடை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2017-18ஆம் நிதியாண்டில் பாஜக இதர கட்சிகளைக் காட்டிலும் அதிக தொகையாக ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் நிதி ரூ.618 கோடியில் இருந்து ரூ.717 கோடியாகவும், மம்தாவின் திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.262 கோடியில் இருந்து ரூ.291 கோடியாகவும் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.104 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் ரூ.1.5 கோடியும் பெற்றுள்ளது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இதுவரை தங்கள் கட்சியின் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், பாஜக ரூ.1000 கோடி வசூலித்தது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால் அகர்வால், மிக வெளிப்படையாக பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும், அதுகுறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நமோ ஆப், காசோலை மற்றும் ஆன்லைன் வாயிலாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால் மற்ற கட்சிகள், தங்களது வருவாயை முழுமையாகக் கணக்கு காட்டவில்லை. கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை கறுப்புப் பணமாக பதுக்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதுபோன்று இந்த ஆண்டுக்கும் தேர்தல் நிதிக்காகவும், கட்சி வளர்ச்சிக்காகவும் பிரதமர் மோடி ரூ.5 முதல் ரூ.1000 வரை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ‘நரேந்திர மோடி மொபைல் ஆப்’ மூலமாக நன்கொடை வழங்கலாம் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon