மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்க!

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்க!

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி நடைபெற்ற நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் கலந்துகொண்ட பிறகு, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று (டிசம்பர் 2) தமிழகம் திரும்பினர். அவர்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “கடன் தள்ளுபடி, நியாய விலை இரண்டும்தான் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. இது செய்யமுடியாத விஷயமே கிடையாது. நாங்களும் அரசுக்கு இதுகுறித்தான கோரிக்கையை வலியுறுத்துவோம். எங்களின் ஒத்துழைப்பைத் தருவதற்குத்தான் தற்போது இவர்களை சந்தித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பேசிய அவர், “நேற்றுவரை டெல்டா பகுதிகளில் இருந்தேன். அங்கு நிவாரணப் பணிகள் மந்தமாகவே நடந்துவருகின்றன. இதனை எதிர்க்கட்சியின் குரலாக பார்க்காமல் மக்களின் குரலாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் மக்கள் சொன்னதை நான் அப்படியே சொல்கிறேன். விவாதம் செய்வதற்கு இது நேரமல்ல, மக்கள் 15 நாட்களாக கூரை இல்லாமல், குடிநீர் இல்லாமல் பல இடங்களில் இருக்கிறார்கள். நாங்கள் இதில் அரசியல் செய்யவில்லை. அரசின் பணிகளை துரிதப்படுத்துவது எங்களின் கடமை. விமர்சனம் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. சேதமடைந்த மரங்களை கணக்கெடுத்தது எல்லாம், இருந்த இடத்திலிருந்தே கணக்கெடுத்துள்ளது போல்தான் தெரிகிறது” என்று குற்றம் சாட்டினார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டம், மிகமோசமான போராட்டம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “இந்த விமர்சனங்களை அவர் பின்பு வைக்கலாம். விவசாயிகள் பசி என்று போராடும் போது, நீங்கள் கேட்கும் முறை சரியல்ல என்று கூறுவது விமர்சனம் மட்டும்தான். இன்னும் விவசாயிகளின் கோரிக்கைகள் அப்படியே இருக்கிறது என்பதுதான் உண்மை” என்று பதிலளித்தார்.

மேலும், “கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி பரிசீலனையில் இருக்கிறது என்று கூறுவது போதாது. அது செயலாக வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஏனெனில் கடன் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை” என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon