மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

பயிர்க்காப்பீடு: தமிழகத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு!

பயிர்க்காப்பீடு: தமிழகத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு!

பயிர்க்காப்பீடு செய்ய தமிழக நெல் விவசாயிகளுக்கு 15 நாட்களுக்கு காலக்கெடு நீட்டித்து வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று கடந்த வாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். பயிர்க்காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் சான்றிதழ் தேவைப்படும் நிலையில் அச்சான்றிதழை வழங்கக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் கஜா புயல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறிருந்தார். மேலும், எந்த நேரத்திலும் புயலால் பாதிக்கப்படலாம் என்ற சூழலில் பயிர்க்காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளதாகவும் முதல்வர் கூறியிருந்தார்.

மிகப்பெரிய புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில் கூட பயிர்க்காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்காமல் மத்திய அரசு மவுனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் ஊடகங்களில் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை 15 நாட்கள் மத்திய அரசு நீட்டித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தி இந்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், ’புதியக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக நெல் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தகவல் அளித்துள்ளது.

பயிர்க்காப்பீடு செய்வதற்கான விதிகளைத் தளர்த்தி 15 நாட்கள் காலக்கெடுவை பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கவுள்ளன. இந்த உத்தரவானது மாநில அரசுக்கு வெறும் வாய்மொழியாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அரசு மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த அறிவிப்பானது அதிகாரப்பூர்வமாக மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon