மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

கேரளப் பெருஞ்சுவர்: போராட்டத்தில் பெண்கள்!

கேரளப் பெருஞ்சுவர்: போராட்டத்தில் பெண்கள்!

கேரளாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் நான்கு நபர் அடங்கிய குழு ஒன்று இன்று (டிசம்பர் 2) கேரளா வந்துள்ளது. இங்கு கொச்சியில் பக்தர்கள் மற்றும் கட்சிப் பணியாளர்களுடன் அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சபரிமலையில் நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படவுள்ளது. சரோஜ் பாண்டே, வினோத் சொங்கார், பிராகலாத் ஜோசி, நளின் குமார் கதீல் ஆகியோர் அடங்கிய இக்குழு 15 நாட்களுக்குள் அறிக்கையை தயாரித்து பாஜக தேசிய தலைவரான அமித் ஷாவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இவ்விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், “சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்ற அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸின் ஆதரவுடன் சங் பரிவாரங்கள் சபரிமலையில் பிரச்சினை உருவாக்க நினைத்தாலும், நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய கடமை உள்ளது” என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஜனவரி 1ஆம் தேதி முதல் கேரளத்தின் கசரகோடு மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் வரை ‘பெண்களுக்கான சுவர்’ எழுப்பப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில நிதியமைச்சரான தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலம் இடைக்கால மூடத்தனத்தில் விழுந்துவிடாதவாறு தடுப்பதற்கு கேரளத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு 10 லட்சம் பெண்களால் புத்தாண்டு அன்று கேரளப் பெருஞ்சுவர் எழுப்பப்படும். இதன் நீளம் 600 கிலோமீட்டராகும். வாருங்கள், போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். இது மிக மிக புதிய ஆண்டாக இருக்கப் போகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு நீளத்திற்கு பெண்கள் நின்று போராட்டம் நடத்தவுள்ள நிலையில், இதற்கு மற்ற அமைப்புகள் ஆதரவளித்துள்ளதாகவும், அரசியல் கட்சிகளும் தங்களது பெண் பொறுப்பாளர்களை போராட்டத்திற்கு அனுப்பலாம் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon