மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

ரனில்தான் எங்கள் பிரதமர்: ஐ.தே.க. உறுதி!

ரனில்தான் எங்கள் பிரதமர்: ஐ.தே.க. உறுதி!

அதிபர் சிறிசேனாவுடனான சந்திப்புக்குப் பிறகும், ‘ரனில்தான் எங்கள் கட்சியின் பிரதமருக்கான நபர்’ என்று ஐக்கிய தேசியக் கட்சி தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்‌ஷேவை பிரதமர் ஆக்கினார். அதன் பின் நவம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நவம்பர் 14 முதல் இதுவரை இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்துமுறை பிரதமர் ராஜபக்‌ஷே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நவம்பர் 29 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்த அதிபர் சிறிசேனா, நவம்பர் 30 ஆம் தேதி இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனையும் கூட்டணியின் எம்.பி.க்களையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது அதிபர் சிறிசேனா, டிசம்பர் 5 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது, ‘புதிய பிரதமரை நியமிக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டு ஒரு புதிய தீர்மானம் நிறைவேற்றுங்கள். ரனிலை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் பிரதமராக நியமியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், 30 ஆம் தேதியே அதிபர் சிறிசேனாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், “எங்கள் கட்சியின் சார்பான பிரதமர் வேட்பாளர் ரனில் விக்ரமசிங்கேதான். அதில் மாற்றமில்லை” என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான கபிர் ஹாசிம் எழுதிய கடிதத்தில், “தாங்கள் 29 ஆம் தேதி அதிபருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நியமனம் பற்றி குறிப்பிட்டிருப்பது அறிந்தோம். எங்கள் கட்சி சார்பில் பிரதமராக ரனில் விக்ரமசிங்கேவைதான் முன்மொழிகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் நகலை அவர் அதிபர் சிறிசேனாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon