மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி!

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி!

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான தடையை நீக்கி அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும் முழுமையான பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone-EEZ) ஒன்று ஐநாவின் கடல் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த முழுமையான பொருளாதார மண்டலமானது கடற்கரையிலிருந்து சராசரியாக 200 கடல் மைல் வரை உள்ளது. இது நாட்டைப் பொறுத்து வேறுபடும். (1 கடல் மைல் என்பது 1.65 கிமீ) இதில் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் அதாவது 24 கிமீ வரை கடற்கரையுள்ள அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாகும். 200 கடல் மைல் வரை உள்ள பகுதியானது ஆழ்கடல் பகுதியாகும். 200 கடல் மைலையும் தாண்டிய பகுதி சர்வதேச கடல் பகுதியாகும்.

கடந்த 2014 நவம்பர் 12ஆம் தேதியன்று மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதித்தது. தற்போது இந்தத் தடையை நீக்கி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொதுநல வழக்கு மனு ஒன்றை, மீனவர் பாதுகாப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கானது உயர் நீதிமன்ற நீதிபதிகள் வீனித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பீட்டர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எல்.பி.மௌரியா தனது மனுவில் கூறியிருந்ததாவது, முழுமையான பொருளாதார மண்டலமானது 23,05,143 கிலோமீட்டராகப் பரந்து விரிந்துள்ளது. 2014இல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடையில் ஆழ்கடல் மீன்பிடிப்பு கலத்தின் மொத்தப் பகுதியும் 15இல் இருந்து 20 மீட்டர் வரை இருக்க வேண்டும் என்று குறைவான அளவாக வரையறுத்துள்ளது. மீன்பிடிக் கலத்தின் மொத்தப் பகுதியானது மிகவும் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப மீன்பிடிப்பும் அதிகமாக இருக்கும். அதனால், மீன் வளம் முழுமையும் கலத்தின் வலைகளால் அரித்து செல்லப்படும் என்ற காரணத்தை முன்நிறுத்தியே இவ்வாறு குறைவான அளவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்,1995இல் ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பான அரசின் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பி.முராரி கமிட்டி பரிந்துரைகளை அளித்திருந்தது. அந்தப் பரிந்துரைகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பு ரத்து செய்யப்பட வேண்டும் அப்போதுதான் கடலின் மீன்வளம் காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், முராரி கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து தனது நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon