மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

2022இல் இந்தியாவில் ஜி20 மாநாடு!

2022இல் இந்தியாவில் ஜி20 மாநாடு!

2022ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஜி20 என்பது வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த கூட்டமைப்பாகும். இந்த ஜி20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜி20 மாநாடு ஜெர்மனியில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டுக்கான மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்று மாநாடு நிறைவடைந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை இத்தாலி நடத்துவதாக இருந்தது. இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை அந்த ஆண்டு கொண்டாடவுள்ளதால் இத்தாலி, ஜி20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள அறிவிப்பில், “2022ஆம் ஆண்டு தனது 75ஆம் சுதந்திர தினத்தை இந்தியா நிறைவு செய்கிறது. அந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறேன். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவின் உயர்ந்த வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியாவின் விருந்தோம்பல் ஆகியவற்றை அனுபவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon