மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

கும்பல் படுகொலைகளுக்கு அஞ்சும் மோடி!

கும்பல் படுகொலைகளுக்கு அஞ்சும் மோடி!

கும்பல் படுகொலைகளுக்கு அஞ்சி நீரவ் மோடி இந்தியா வராமலிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்துவிட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளில் பதுங்கியுள்ளார் நீரவ் மோடி. இந்தியாவில் கும்பல்களால் படுகொலை செய்யப்படக்கூடும் என்பதாலும், அரக்கர் ராவணனுடன் தாம் ஒப்பிடப்படுவதாலும் நீரவ் மோடி இந்தியாவுக்கு வர அஞ்சுவதாக அவரது வழக்கறிஞர் நேற்று (டிசம்பர் 1) சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும், நீரவ் மோடி பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஆளானால், அவர் காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டுமெனக் கூறி அமலாக்கத் துறை மறுத்துள்ளது.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் நீரவ் மோடியைத் தப்பியோடியவராக அறிவிக்கக் கோரி அமலாக்கத் துறை விண்ணப்பித்திருந்தது. இந்த மனு நேற்று பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீரவ் மோடி சார்பாக ஆஜரான அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் மேற்கூறியவாறு தெரிவித்துள்ளார். மோடி தரப்பு வாதத்துக்கும், வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமலாக்கத் துறை தரப்பு தெரிவித்துள்ளது. நீரவ் மோடிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்புகளையும் மீறி அவர் விசாரணையில் பங்கேற்க மறுப்பதாகவும், இந்தியாவுக்கு வரவே விரும்புவதில்லை எனவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

விஜய் அகர்வால் வாதிடுகையில், “எனது கட்சிக்காரரின் (மோடி) 50 அடி உயர உருவ பொம்மை இந்தியாவில் எரிக்கப்பட்டுள்ளது. அவரை ராவணனுடன் ஒப்பிடுகின்றனர்” என்று கூறினார். ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்த விஜய் மல்லையாவைப் போல நீரவ் மோடியிடம் செயல்படா சொத்துகள் ஏதுமில்லை எனவும் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon