மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

கஜா பாதிப்பு: ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு!

கஜா பாதிப்பு: ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு!

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. புயலில் சிக்கி சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. இதனால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியும், தற்காலிகமாக ரூ.1,500 கோடியும் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து முதற்கட்டமாக மத்திய அரசு கடந்த ஞாயிறு அன்று ரூ.200 கோடி வழங்கியது. இந்த நிலையில் இரண்டாவது தவணையாக, இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ. 353.70 கோடி ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கஜா புயல் பாதிப்புக்காக, தமிழகத்துக்கு 353.70 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு அளித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை, விமானப் படை, கடற்படை, கடலோரக் காவல் படை மூலம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உதவியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon