மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

நீதிபதிகள் நியமன ஆணையம்: மறுஆய்வு மனு தள்ளுபடி!

நீதிபதிகள் நியமன ஆணையம்: மறுஆய்வு மனு தள்ளுபடி!

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கி 470 நாட்கள் கழித்து மனுதாக்கல் செய்வதற்கான காரணம் என்னவென்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த முறையை மாற்ற, என்ஜேஏசி எனும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைத்தது மத்திய பாஜக அரசு. 2014ஆம் ஆண்டு இதனை அமல்படுத்தும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து வந்தது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. 2015ஆம் ஆண்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா என்பவர், இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப், ஏ.எம்.கன்வில்கர், அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன்பு, கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

“தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் ரத்து செய்யப்பட்டு 470 நாட்களுக்குப் பின் மறுஆய்வு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாமதமாக மனுதாக்கல் செய்ததற்கான காரணத்தை, மனுதாரர் கூறவில்லை. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இல்லாவிட்டால், இந்த மனு மீது நிச்சயம் விசாரணை நடத்தியிருப்போம்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon