மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

வருவாயை எதிர்நோக்கி சன் டிவி!

வருவாயை எதிர்நோக்கி சன் டிவி!

இந்த ஆண்டின் முதல் பாதியில் போதிய வருவாய் ஈட்டமுடியாமல் தவிக்கும் சன் டிவி, இரண்டாம் பாதியில் விளம்பரங்கள் வாயிலாக இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் மாஸ் மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 33 தொலைக்காட்சி சேனல்களை இயக்கி வருகிறது. மேலும், 48 எஃப்.எம் ரேடியோ ஸ்டேஷன்களையும் சன் நெட்வொர்க் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான விளம்பர வருவாய் கடுமையான போட்டி காரணமாகக் குறைந்திருந்தது. எனினும், அக்டோபர் - மார்ச் மாதங்களில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாக சன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. சன் டிவியின் பொதுப் பொழுதுபோக்கு சேனலான சன் லைஃப், சில போட்டி நிறுவனங்களால் (ஜீ, கலர்ஸ்) பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், அதன் சந்தை மதிப்பு குறைந்துள்ளதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் கேரள வெள்ள பாதிப்பால்தான் இந்நிறுவனத்தின் விளம்பர வருவாயில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஓணம் பண்டிகைக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் விளம்பர வருவாய் ரூ.7 கோடி வரையில் குறைந்துள்ளது. அதேபோல, திமுக தலைவர் கருணாநிதி மறைவை முன்னிட்டு இரண்டு நாள் தொடர் அஞ்சலி அனுசரிக்கப்பட்டதால் தசரா பண்டிகைக்கான விளம்பர வருவாயிலும் ரூ.7 கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேற்கூறிய சம்பவங்கள் நிகழாமல் இருந்திருந்தால் சன் டிவியின் விளம்பர வருவாய் 10 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விளம்பரங்கள் வாயிலான வருவாய் 10 முதல் 12 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளதாக சன் டிவி நிர்வாகம் பிசினஸ் ஸ்டேண்டார்டு ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon