மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 டிச 2018

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுமா, வீழுமா?

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுமா, வீழுமா?

இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் - 6)

(இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த செண்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை மின்னம்பலம் வாசகர்களுக்காகத் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதன் ஆறாம் பகுதி இன்று.)

இந்தியாவின் விவசாயிகளின் பொருளாதார நிலை மிகவும் விரும்பத்தகாத நிலையில் உள்ளதாகவே அதிகம் கூறுகின்றனர். விவசாயிகள் தங்களது பிள்ளைகள் விவசாயத்தைத் தொடர விரும்புவதில்லை. குறைவான வருமானம், குறைவான உற்பத்தி, ஒழுங்கற்ற பருவநிலை சுழற்சி, அரசின் ஆதரவு போதாமை ஆகிய காரணங்கள் விவசாயிகளின் அதிருப்திக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. விவசாயிகளின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து அவர்களிடம் கேட்கையில், சுமார் 50 விழுக்காடு விவசாயிகள் தங்களது தற்போதைய பொருளாதார நிலை குறித்து திருப்தியும், 40 விழுக்காட்டினர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய அடிப்படையில் பார்க்கையில், மத்திய இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் திருப்தியடைந்துள்ளனர். கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் அதிருப்தியடைந்துள்ளனர். நிலமற்ற விவசாயிகள் தங்களது பொருளாதார நிலை குறித்து மிகவும் குறைவாகவே திருப்தியடைந்துள்ளனர். நிலம் படைத்த பெரு விவசாயிகள் பெரிதும் திருப்தியடைந்துள்ளனர்.

விவசாயிகளின் தற்போதைய பொருளாதார நிலையையும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில், 40 விழுக்காட்டினர் தங்களது பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 37 விழுக்காட்டினர் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், 15 விழுக்காட்டினர் தங்களது நிலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், விவசாயிகள் அவர்களது பொருளாதார நிலையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். 42 விழுக்காட்டினர் தங்களது பொருளாதார நிலை மாறும் எனவும், 19 விழுக்காட்டினர் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும், 10 விழுக்காட்டினர் நிலைமை மோசமடையும் எனவும் பதிலளித்துள்ளனர்.

கடந்த கால மற்றும் எதிர்காலப் பொருளாதார சூழல் குறித்த கேள்விகளுக்கு, சிறு மற்றும் குறு விவசாயிகளைக் காட்டிலும் பெரு விவசாயிகள் நேர்மறையான பதிலையே அளித்துள்ளனர். கிராம வாழ்க்கையை விட நகர வாழ்க்கை சிறந்தது என்று 69 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை சிறந்தது என்று 19 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நிலமற்ற விவசாயிகளே கிராம வாழ்வை விட, நகர வாழ்வு சிறந்தது என்று அதிகம் எண்ணுகின்றனர். இதற்கு, கிராமங்களை விட நகரங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் காரணமாக இருக்கலாம்.

நகரங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தால் விவசாயத்தைக் கைவிட்டுவிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆம் என்று 61 விழுக்காட்டினரும், கைவிட விடமாட்டோம் என்று 26 விழுக்காட்டினரும் பதிலளித்துள்ளனர். நகரத்தில் நல்ல வேலை கிடைத்தால் மட்டுமே விவசாயத்தைக் கைவிடுவோம் என்று 50 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நிலமற்ற அல்லது குறைவான நிலம் கொண்ட விவசாயிகள் நல்ல வருமானத்துக்காக விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு நகரத்துக்கு இடம்பெயர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். மறுபுறம் நிறைய நிலம் படைத்த பெரு விவசாயிகள் வேலைவாய்ப்புக்காக நகரங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை.

விவசாயத்தில் தங்களது பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லை எனவும், பிள்ளைகள் நகரங்களில் குடியேற வேண்டுமெனவும் பெரும்பாலான விவசாயிகள் கருதுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. தங்கள் பிள்ளைகள் நகரங்களில் குடியேற வேண்டுமென 60 விழுக்காட்டினரும், குடியேறக்கூடாது என்று 14 விழுக்காட்டினரும், பிள்ளைகளின் விருப்பம் என்று 19 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். நகரங்களில் குடியேறுவதற்கு தரமான கல்வியே முதன்மை காரணமாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிறந்த வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியன உள்ளன.

விவசாயம் தங்களது முன்னோர்களின் தொழில் எனவும், விவசாயத்தைத் தொழிலாக மேற்கொள்ளவும் பெரும்பாலான விவசாயிகள் கருதுகின்றனர். எனினும், விவசாயத்தை அவர்களது பிள்ளைகள் தொடர விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு 18 விழுக்காட்டினர் நேர்மறையாகவும், 36 விழுக்காட்டினர் எதிர்மறையாகவும், 37 விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகளின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளனர்.

விவசாயம் மீது விவசாயிகள் ஏன் அதிருப்தியடைந்துள்ளனர்? தங்களது பிள்ளைகள் ஏன் விவசாயத்தைத் தொடருவதற்கு விவசாயிகள் விரும்புவதில்லை? இதற்கு விவசாயிகள் பல்வேறு பதில்களை அளித்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பிள்ளைகள் விவசாயத்துக்குப் பதிலாக நல்ல வேலைக்குச் செல்ல வேண்டுமென்றே விரும்புகின்றனர். விவசாயம் ஒரு லாபகரமான தொழில் இல்லையென விவசாயிகள் நம்புகின்றனர். ஆகையால் பிள்ளைகள் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர். விவசாயத்தில் எதிர்காலம் இல்லையெனவும், வேளாண்மையிலிருந்து பிள்ளைகள் வெளியேறவேண்டும் என்பதும் அவர்களின் கருத்து. பிள்ளைகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகரங்களில் குடியேற வேண்டுமென்பது நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளிடத்தில் (39 விழுக்காடு) அதிகமாகவும், பெரு விவசாயிகளிடத்தில் (28 விழுக்காடு) குறைவாகவும் உள்ளது.

விவசாயிகள் மட்டுமல்லாமல், வேளாண் குடும்பங்களைச் சேர்ந்த இளம் உறுப்பினர்களுமே விவசாயம் மீது ஈடுபாடற்றவர்களாகத்தான் உள்ளனர். இந்த ஆய்வில் வேளாண் குடும்பங்களின் இளம் உறுப்பினர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது. விவசாயத்துக்குப் பதிலாக வேறு வேலைகளை விரும்புவதாக 60 விழுக்காட்டினரும், விவசாயத்தையே தொடர விரும்புவதாக 20 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணிடமும் கேள்வியெழுப்பப்பட்டது. தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவசாயத்துக்குப் பதிலாக வேறு வேலைகளில் இருந்தால் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு இருந்திருக்கும் என்று 43 விழுக்காடு பெண்கள் கருதுகின்றனர்.

பொருளாதார இன்னல்கள்

இந்த ஆய்வில், கடந்த 5 ஆண்டுகளில் நிலத்தை விற்க வேண்டிய நிலைமைக்கு ஆளானதாக 5 விழுக்காட்டினர் மட்டுமே பதிலளித்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதன்மை காரணமாக மோசமான நிதி நிலை (27 விழுக்காடு) உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் குடும்பத் திருமணத்துக்கான பணத் தேவை (15 விழுக்காடு), நில அபகரிப்பு அழுத்தம் (9 விழுக்காடு), மகன்/மகளின் கல்வி மற்றும் தொழில் (9 விழுக்காடு), கடன் வழங்கியவருக்கு செலுத்த வேண்டிய தொகை (7 விழுக்காடு), நல்ல வேலைவாய்ப்பு கிடைத்ததனால் (7 விழுக்காடு), மருத்துவ செலவுகள் (6 விழுக்காடு), சொத்துப் பிரச்சினையால் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் (4 விழுக்காடு) உள்ளிட்டவை இருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்மை தொடர்பான செயல்பாடுகளுக்காக பத்தில் 2 விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றையும், டிராக்டர் போன்ற உபகரணங்களையும் வாங்குவதற்காகவே விவசாயிகள் பெரும்பாலும் கடன் வாங்கியுள்ளனர்.

(இந்தத் தொடரின் இறுதி பாகம் டிசம்பர் 3ஆம் தேதி காலைப் பதிப்பில் வெளியாகும்...)

-விக்னேஷ்

முந்தைய பகுதிகள் :

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 1

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 2

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 3

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 4

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 5

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 1 டிச 2018