மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 நவ 2018

சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும்!

சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும்!

இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் - 5)

(இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை மின்னம்பலம் வாசகர்களுக்காகத் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதன் ஐந்தாம் பகுதி இன்று)

உண்மையிலேயே தங்களது நிலை மிக மோசமாக இருப்பதாகவே இந்த ஆய்வில் 47 விழுக்காடு விவசாயிகள் கூறியுள்ளனர். வெறும் 15 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே தங்களது நிலை சிறப்பாக உள்ளதாகக் கூறியுள்ளனர். மற்ற எல்லாப் பகுதிகளைக் காட்டிலும் கிழக்கு மற்றும் தென்மாநில விவசாயிகள்தான் தங்களது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அதிகளவில் கூறியுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் விவசாயிகளின் நிலை மிகவும் எதிர்மறையாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

அதாவது, மேற்கு வங்கத்தில் 78 விழுக்காடு விவசாயிகளும், கேரளாவில் 72 விழுக்காடு விவசாயிகளும், இமாசலப் பிரதேசத்தில் 67 விழுக்காடு விவசாயிகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 65 விழுக்காடு விவசாயிகளும், அசாம் மற்றும் ஜார்க்கண்டில் 60 விழுக்காடு விவசாயிகளும் பொதுவாகத் தங்களது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், குஜராத்தில் 23 விழுக்காடு விவசாயிகளும், மத்தியப் பிரதேசத்தில் 22 விழுக்காடு விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 16 விழுக்காடு விவசாயிகளும் மட்டுமே தங்களது ஒட்டுமொத்த நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

விவசாயக் குடும்பங்களில் உள்ள 67 விழுக்காடு பெண்கள் தங்களது குடும்பச் செலவுக்கு விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் போதவில்லை என்று கூறியுள்ளனர். வெறும் 20 விழுக்காடு பெண்கள் மட்டுமே தங்களது குடும்பச் செலவுக்கு போதுமான பணம் விவசாயத்தின் மூலமாகக் கிடைக்கிறது என்கின்றனர். மற்ற துறைகளில் வேலைகளில் ஈடுபட்டால் மட்டும்தான் தங்களது குடும்பத்தின் தரம் உயரும் என்பதும் அவர்களிடையே நிலவும் எண்ணமாக உள்ளது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இன்றைய சூழலில் இந்திய விவசாயச் சமூகத்துக்குப் பல்வேறு வழிகளில் பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றில் 13 விழுக்காடு விவசாயிகளின் முக்கியப் பிரச்சினையாக வெள்ளமும், வறட்சியும் உள்ளது. 11 விழுக்காடு விவசாயிகளுக்குக் குறைந்த உற்பத்தியும், 9 விழுக்காடு விவசாயிகளுக்குப் பாசன வசதியும், 8 விழுக்காடு விவசாயிகளுக்குக் குறைந்த வருமானமும், 8 விழுக்காடு விவசாயிகளுக்கு நிறுவனங்களும், 8 விழுக்காடு விவசாயிகளுக்கு உற்பத்தி விலைச் சரிவும், 5 விழுக்காடு விவசாயிகளுக்குத் தொழிலாளர்கள் பிரச்சினையும், 5 விழுக்காடு விவசாயிகளுக்குப் பணவீக்கமும், 4 விழுக்காடு விவசாயிகளுக்குப் பொருளாதார அழுத்தங்களும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. 29 விழுக்காடு விவசாயிகளுக்கு மற்ற ஏதேனும் பிரச்சினைகள் உள்ளன.

இது இந்தியா முழுவதும் காணப்படும் பிரச்சினைகளாக இருந்தாலும்கூட ஒவ்வொரு பகுதிக்கும் இதில் வேறுபாடுகளும், ஏற்ற இறக்கங்களும் காணப்படுகின்றன. வடமாநிலங்களில் ஊழியர் பிரச்சினைகள் முதன்மை பிரச்சினையாகவும்; உற்பத்தி குறைவும், குறைந்த வருவாயும் அடுத்தடுத்த முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. ஆனால், தென்மாநிலங்களிலும், மேற்கு மாநிலங்களிலும் உற்பத்திக் குறைவுதான் முதன்மைப் பிரச்சினையாக உள்ளது. தென்மாநிலங்களில் பொருளாதார அழுத்தங்கள் இரண்டாவது முக்கியப் பிரச்சினையாகவும், பாசன வசதிகள் மூன்றாவது முக்கியப் பிரச்சினையாகவும் உள்ளது. மத்திய மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் பாசன வசதிகள்தான் முதன்மைப் பிரச்சினையாக உள்ளது.

தங்களது பிரச்சினைகளுக்கு மத்திய மாநில அரசுகள் இரண்டுமே காரணம் என்று 58 விழுக்காடு விவசாயிகள் கருதுகின்றனர். 22 விழுக்காடு விவசாயிகள் மத்திய அரசு மட்டும்தான் தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமென்றும், 20 விழுக்காடு விவசாயிகள் மாநில அரசுகள்தான் காரணமென்றும் கூறுகின்றனர்.

பயிர் அழிவும் தற்கொலைகளும்

கடந்த மூன்றாண்டுகளில் தங்களது பயிர் அழிந்துள்ளதாக 70 விழுக்காடு விவசாயிகள் கூறுகின்றனர். மழையின்மையும், வறட்சி மற்றும் வெள்ளமும்தான் பயிர் அழிவுகளுக்கு முதன்மைக் காரணங்களாக உள்ளன. பயிர் நோய்கள், பறவைகள் மற்றும் விலங்குகள், பாசனத் தட்டுப்பாடு போன்றவையும் பயிர் அழிவுக்குக் காரணமாக உள்ளன.

அதாவது, 19 விழுக்காடு வறட்சியும், 19 விழுக்காடு வெள்ளமும், 22 விழுக்காடு ஒழுங்கற்ற மழைப் பொழிவும் (கூடுதல் அல்லது குறைவான மழைப் பொழிவு), 7 விழுக்காடு பூச்சித் தாக்குதலும், 5 விழுக்காடு பறவைகள் அல்லது விலங்குகள் தாக்குதலும், 6 விழுக்காடு பாசனத் தட்டுப்பாடும், 5 விழுக்காடு ஆலங்கட்டி மழையும், 7 விழுக்காடு காலந்தவறிய அல்லது முன்கூட்டிய பருவமழையும், 5 விழுக்காடு மற்ற காரணங்களும் பயிர் அழிவுகளுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

ஆய்வு நடத்தப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் யாரேனும் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கேள்வியும் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 7இல் ஒரு விவசாயியும் (15%) தங்களது பகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதை அறிந்துள்ளனர். மற்ற பகுதிகளைக் காட்டிலும் வடஇந்தியப் பகுதிகளில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.

விவசாயிகள் தற்கொலைகளுக்கு 41 விழுக்காடு அளவுக்குக் குடும்பப் பிரச்சினைகளே காரணமாக உள்ளன. கடன் பிரச்சினைகள் 35 விழுக்காடும், பயிர் இழப்புகள் 14 விழுக்காடும் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமாக உள்ளது. இந்த ஆய்வின்படி, 23 விழுக்காடு மத்திய மாநில விவசாயிகளும், 18 விழுக்காடு தென்மாநில விவசாயிகளும், 14 விழுக்காடு வடமாநில விவசாயிகளும், 12 விழுக்காடு மேற்கு மாநில விவசாயிகளும், 9 விழுக்காடு கிழக்கு மாநில விவசாயிகளும் கடந்த ஐந்தாண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பூர்த்தியாகாத அடிப்படைத் தேவைகள்

இத்தனை இன்னல்களில் சிக்கித் தவிக்கும் இந்திய விவசாயிகளுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகள்கூடப் பூர்த்தியாகவில்லை என்பதும் அவர்களின் வேதனைகளின் வெளிப்பாடாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக்கூட இந்திய வேளாண் சமூகம் இன்னும் முழுமையாக எட்டாமல் உள்ளது.

60 விழுக்காடு விவசாயிகள் தங்களது பிள்ளைகளுக்குக் கல்வி சரியாக வழங்க முடியவில்லை என்று மிகவும் வருந்துகின்றனர். 30 விழுக்காட்டினருக்கு இதன்மீது ஓரளவு கவலையும், 10 விழுக்காட்டினருக்கு இதுபற்றிய கவலையில்லை என்றும் கூறுகின்றனர். வேலைவாய்ப்பு குறித்த கவலை 58 விழுக்காட்டினருக்கு அதிகமாக இருப்பதாகவும், 33 விழுக்காட்டினருக்கு ஓரளவு இருப்பதாகவும், 8 விழுக்காட்டினருக்கு மட்டுமே கவலை இல்லை எனவும் கூறுகின்றனர். சுகாதாரம் பற்றிய கவலை 53 விழுக்காடு விவசாயிகளுக்கு அதிகமாக இருப்பதாகவும், 39 விழுக்காடு விவசாயிகளுக்கு ஓரளவு இருப்பதாகவும், 7 விழுக்காட்டினருக்கு மட்டுமே கவலை இல்லை எனவும் கூறியுள்ளனர்.

விவசாயம் செய்வதில் 59 விழுக்காட்டினருக்கு அதிக கவலை இருப்பதாகவும், 33 விழுக்காட்டினருக்கு ஓரளவு கவலை இருப்பதாகவும், 8 விழுக்காட்டினருக்கு மட்டும் எந்தக் கவலையும் இல்லை எனவும் கூறியுள்ளனர். தங்களது வீடுகளில் செய்யப்படும் திருமணங்கள் குறித்து 47 விழுக்காட்டினருக்கு அதிக கவலை இருப்பதாகவும், 40 விழுக்காட்டினருக்கு ஓரளவு கவலை இருப்பதாகவும், 14 விழுக்காட்டினருக்குக் கவலை இல்லை எனவும் கூறுகின்றனர்.

வீடு வாங்குவதில் 33 விழுக்காட்டினருக்கு அதிக கவலை இருப்பதாகவும், 39 விழுக்காட்டினருக்கு ஓரளவு கவலை இருப்பதாகவும், 28 விழுக்காட்டினருக்கு எந்தக் கவலையும் இல்லை எனவும் கூறியுள்ளனர். அதேபோல, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் 31 விழுக்காட்டினருக்கு அதிக கவலை இருப்பதாகவும், 30 விழுக்காட்டினருக்கு ஓரளவு கவலை இருப்பதாகவும், 39 விழுக்காட்டினருக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

(தொடரும்...)

- பிரகாசு

முந்தைய கட்டுரைகள் :

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 1

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 2

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 3

இந்திய விவசாயிகளின் நிலை - பாகம் 4

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 30 நவ 2018