மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சோமசுந்தரம் (ஹெச்.சி. ஆர்கானிக்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சோமசுந்தரம் (ஹெச்.சி. ஆர்கானிக்)

இயற்கை உணவுப் பொருட்களை ஆன்லைனில் சிறப்பான முறையில் விற்பனை செய்து வரும் சோமசுந்தரம் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

சோமசுந்தரம் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை கருணாகரன் ஓட்டுநர். தாய் ராஜாத்தி கூலித் தொழில் செய்து வருகிறார். தங்கை சந்தியா பள்ளி ஆசிரியராக உள்ளார். சோமசுந்தரம் சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் பொறியியல் பட்டம் முடித்துள்ளார். கல்லூரி முடித்த பிறகு ஒரு வருடம் மும்பையில் பணிபுரிந்தார். சிறு வயதிலிருந்தே இவருக்குத் தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. ஆனால், அது மற்றவர்கள் செய்யும் தொழிலைப் போன்றதாக அல்லாமல் புதுமையானதாக இருக்க வேண்டுமென்றும் சோமசுந்தரம் விரும்பினார்.

இந்த எண்ணத்திலிருந்து உதித்ததுதான் இயற்கைப் பொருட்கள் விற்பனை. ஏனென்றால், இன்று சந்தையில் விற்பனையாகும் 90 விழுக்காடு பொருட்கள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டவைதான். இவற்றை உண்பதால் மனிதர்களுக்கு எளிதில் நோய்கள் தாக்குகின்றன. எனவே, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்று சோமசுந்தரம் விரும்பியுள்ளார். இதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளம்தான் ஹெச்.சி. ஆர்கானிக். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தளத்தின் வழியாக ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு பல முயற்சிகளை மேற்கொண்டு சோமசுந்தரம் தோல்வி கண்டுள்ளார். இதற்கு முன்பு இவருடன் இணைந்து தொழில்புரிய ஆர்வம் காட்டியவர்கள் எல்லாம் இயற்கைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடலாம் என்றவுடன் விலகிக் கொண்டார்கள். ஆனால், சோமசுந்தரம் துணிச்சலாக இயற்கைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். இந்தத் தளத்தின் வழியாக நுகர்வோருக்கு, உடல்நலத்துக்குப் பாதிப்பில்லாத இயற்கையான பொருட்கள் கிடைப்பதோடு விவசாயிகளுக்கும் உரிய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

ரசாயனங்கள் கலப்பில்லாத இயற்கையான முறையில் விற்பனை செய்யப்பட்ட கம்பு, சோளம், திணை, குதிரைவாலி போன்ற பொருட்களையும், செக்கு எண்ணெய், பாக்கு மட்டை தட்டுகள், பேப்பர் கப்புகள், மண் பானைகள் போன்றவற்றையும் இந்தத் தளத்தின் வழியாக விற்பனை செய்யலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் பிரதான நோக்கமாகக் கொண்டு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார் சோமசுந்தரம். தொடங்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், இந்தத் தளத்தின் வழியாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கிறது.

பொருட்களை உற்பத்தி செய்பவர்களே, அதற்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையையும் இந்தத் தளம் வழங்குகிறது. அதனால் இயற்கைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்தத் தளம் மிகச் சிறந்த சந்தை வாய்ப்பை அளிக்கிறது. விற்பனை செய்யப்படும் பொருட்கள் வேகமாக அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

வாடிக்கையாளர்களின் திருப்திக்காக ‘கேஷ் ஆன் டெலிவரி’ வசதியையும் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது ஹெச்.சி. ஆர்கானிக். மறைந்த இயற்கை ஆர்வலர் நம்மாழ்வாரைப் பின்பற்றி இயற்கைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியிருக்கிறார் சோமசுந்தரம். ஹெச்.சி. ஆர்கானிக் தளத்திலும் நம்மாழ்வாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளை இந்தத் தளத்தில் இணைக்க வேண்டுமென்பதையும், குறைந்தபட்சமாக ஒரு லட்சம் குடும்பங்களை இயற்கை உணவு முறைக்கு மாற்ற வேண்டுமென்பதையும் ஹெச்.சி. ஆர்கானிக் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக இயற்கை உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

குறைந்த விலைக்கு இயற்கைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் மிகக் குறைவான சேவைக் கட்டணத்தை மட்டுமே இந்நிறுவனம் பெற்று வருகிறது. பொதுவாக இயற்கைப் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்குச் சந்தைப்படுத்துதல் என்பதுதான் மிகுந்த சிரத்தையை அளிப்பதாக இருக்கும். ஆனால், அந்தக் குறையைத் தொழில்நுட்ப வசதிகளால் மிக எளிமையாகப் போக்கியிருக்கிறது ஹெச்.சி. ஆர்கானிக். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியா முழுவதும் ஆன்லைன் வழியாக இயற்கை உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் முனைப்பிலும் இந்நிறுவனம் உள்ளது. நிறுவனத்தை விரிவுபடுத்தி எல்லாப் பகுதிகளிலும் சேவைகளைத் தொடங்க முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியிலும் ஹெச்.சி. ஆர்கானிக் ஈடுபட்டுள்ளது.

இயற்கையான இட்லி அரிசி, கோதுமை, நிலக்கடலை, முருங்கை சூப் பவுடர், முடக்கத்தான் தோசை பவுடர், சுத்தமான தேங்காய் எண்ணெய், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சோப்புகள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், கடலை எண்ணெய், சுத்தமான தேன், நொறுக்குத் தீனி வகைகள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற எண்ணிலடங்காத பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி பல மதிப்பு கூட்டுப் பொருட்கள் மற்றும் இயற்கை உரங்கள் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலும் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களிலிருந்தே தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் ஹெச்.சி. ஆர்கானிக் நிறுவனம் சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்தே செயல்பட்டு வருகிறது. இயற்கை முறையிலான உற்பத்திக்கும், விற்பனைக்கும் ஊக்கமளித்து வரும் ஹெச்.சி.ஆர்கானிக் நிறுவனத்துக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தொகுப்பு: ர.பிரகாசு

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி: கஜல் & வருண் (மாமா-எர்த்)

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஞாயிறு, 25 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon