மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: சாதி கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா?

சிறப்புக் கட்டுரை: சாதி கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா?

அ. குமரேசன்

அந்த அரங்கில் இப்படியொரு கேள்வி வரும் என்று நிச்சயமாக யாரும் எதிர்பார்க்கவில்லை. சென்னை பல்கலைக்கழக மாணவர் சங்கம், அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் இரு அமைப்புகளும் இணைந்து ‘சாதி ஒழிப்பு: முரண்பாடுகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் நடத்திய விவாத அரங்கம் அது. சாதி என்பது சமுதாய அமைப்பின் அடிகட்டுமானமா மேற்கட்டுமானமா என்ற கேள்வி இன்றளவும் கேட்கப்படுகிறது. உழைப்புப் பிரிவினை அடிப்படையிலான சுரண்டலும் வர்க்க வேறுபாடும்தான் அடிக்கட்டுமானம், மதம், சாதி, பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவையெல்லாம் மேற்கட்டுமானங்கள். ஆகவே, சுரண்டல் அமைப்புக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் வெற்றியில், அதாவது அடிவாரத்தைத் தகர்க்கிறபோது, மேற்கட்டுமானங்கள் நொறுங்கிவிடும் என்ற வாதிடப்பட்டு வந்திருக்கிறது.

அப்படி வாதிடுகிறவர்களிடம் நான், “ஒரு பாழடைந்த கட்டடத்தை இடிக்கிறோம் என்றால் எடுத்த எடுப்பில் அடிவாரத்தை இடிக்க மாட்டோம். முதலில் கூரை, அப்புறம் சுவர் என்று மேற்கட்டுமானங்களை இடித்த பிறகுதான் அடிவாரத்திற்குப் போவோம். நேரடியாக அடிவாரத்தில் கைவைத்தால் கட்டடம் தகர்கிறபோது நாமும் உள்ளே சிக்கி நசுங்குண்டு போவோம்… ஆகவே வர்க்கப் போராட்டத்தோடு இணைந்ததாகத்தானே சாதி ஒழிப்புப் போராட்டமும் இருக்க முடியும்,” என்று கேட்பேன்.

கடவுளும் சாதியும்

ஆனால் சாதி கருத்துமுதல்வாதமா அல்லது பொருள்முதல்வாதமா என்ற கேள்வி, நான் சந்தித்தவரையில் இதுதான் முதல்முறை. சாதியம் குறித்து இந்தக் கோணத்தில் யோசித்ததுமில்லை, விவாதித்ததுமில்லை. நன்கு யோசித்துவிட்டுப் பின்வரும் பதிலைச் சொன்னேன்...

“கடவுள் நம்பிக்கையைக் கருத்துமுதல்வாதம் என்கிறோம். ஏனென்றால் கடவுள் இல்லை, கடவுள் இருப்பதாக நினைப்பதும் நம்புவதும் ஒரு கருத்து. ஆகவே அது கருத்துமுதல்வாதம். ஆனால் சாதி இருக்கிறது, கண் முன்னால் இருக்கிறது, திட்டவட்டமாக இருக்கிறது, எங்கும் இருக்கிறது. கொடூரமாக இருக்கிறது, பாகுபடுத்திக்கொண்டே இருக்கிறது முன்னேற்றங்களுக்கும் சமத்துவத்துக்கும் தடையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே, இருக்கிறது என்பதால் அது பொருள்முதல்வாதம்தான்.”

அந்தக் கேள்வியையும் எனது பதிலையும் முகநூல் பக்கத்திலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவேற்றினேன். இப்போதும் சம அளவில் எதிர்வினைகள் வந்துள்ளன.

“கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டும் தத்துவப் பார்வைகள். சாதி என்பது பிறப்பை அடிப்படையாக வைத்தும், கடவுளின் பெயராலும் மனித மனங்களில் ஆழமாகப் பதியவைக்கப்பட்ட, பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிற ஒரு எண்ணம்தான். மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்பதாக நினைக்க வைக்கிற எண்ணம் அது. ஆகவே அது ஒரு கருத்துமுதல்வாதம்தான்,” என்பது, என் கருத்தை மறுக்கிற நண்பர்களது வாதங்களின் சாரம்.

ஆரியர்களின் வழித்தோன்றல்களான பிராமணர்களால் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்திக்கொள்வதற்காகப் புகுத்தப்பட்டதுதான் சாதியம் என்ற தத்துவம், அந்த வகையிலும் அது ஒரு கருத்துமுதல்வாதமே என்றும் அந்த நண்பர்கள் சொல்கிறார்கள்.

கடவுள் என்பது ஒரு கற்பனை மட்டுமல்ல, எதுவும் கடவுளால் இறுதிப்படுத்தப்பட்டதே, ஆகவே மாற முடியாததே என்ற ‘நிலையான’ கற்பிதம் அதில் இருக்கிறது. சாதி ஏற்பாடும் மாறாதது, மாற்ற முடியாதது என்பதே சாதித் தத்துவத்தின் மையம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

சாதி என்பது இந்தியச் சமுதாயச் சூழலில் வர்க்க வெளிப்பாடுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தனது ‘இந்தியாவில் சாதி முறை – ஒரு மார்க்சியப் பார்வை’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். “சாதி என்பது முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்பின் எச்சம் என்ற கருத்து மார்க்சிஸ்ட்டுகள் மத்தியில் பரவலாக நிலவிவருகிறது. நமது போராட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் ‘அனைத்து நிலப்பிரபுத்துவ எச்சங்களும் அகற்றப்பட வேண்டும்’ என்று பேசுவோம். ஆனால், சாதி நிலப்பிரபுத்துவ எச்சம் என்ற புரிதல் சரியானதல்ல. முதலாளித்துவத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு சமூக அமைப்பாக சாதி இருக்கிறது,” என்று கூறுகிறார்.

“ஆதி உற்பத்தி முறையில் நிலவிய வர்க்கம்தான் சாதி. ஒரு சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான மத வழிமுறை. அவ்வழியில், ஒரு சமூகத்தின் முதன்மை உற்பத்தியாளரிடமிருந்து, மிகக்குறைந்த எதிர்ப்புணர்வுடன், அவரின் உபரி உற்பத்தியை கையகப்படுத்தும் ஒப்புதலை அது பெறுகிறது” என்று வரலாற்றாய்வாளர் டி.டி.கோசாம்பி எழுதியிருப்பதை பிரகாஷ் காரத் மேற்கோள் காட்டுகிறார். “எளிமையாக விவரித்தால் சாதி என்பது ஆதியில் அமைந்த வர்க்க அமைப்பின் வடிவமாகும்,” என்கிறார் காரத்.

முதலாளித்துவத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு சமூக அமைப்பான சாதி வெறும் கருத்தாக்கமாக இருக்க முடியுமா? ஆதி உற்பத்தி முறையில் நிலவிய வர்க்க அமைப்பு வெறும் கருத்தியலாக இருக்க முடியுமா? சமூகத்தின் முதன்மை உற்பத்தியாளரிடமிருந்து, மிகக் குறைந்த எதிர்ப்புணர்வுடன், அவரின் உபரி உற்பத்தியை கையகப்படுத்தும் உத்தி இருக்கிறது என்றால் அது பொருள் சார்ந்ததா இல்லையா என்பது என் கேள்வி. தானியங்களுக்காகவோ, இதர தேவைகளுக்காகவோ அமைந்த, திட்டவட்டமான பொருள் உற்பத்தி சார்ந்த, உழைப்பவர் யார், உழைப்பைச் சுரண்டுகிறவர் என்ற தெளிவான, அடிப்படையான சமூகப் பிரிவினைதான் சாதி. வர்க்கம் பொருள்முதல்வாத அடிப்படையைக் கொண்டது. ஆகவே, ஆதி உற்பத்தி முறையில் நிலவிய வர்க்கமாகிய சாதியும் பொருள்முதல்வாத அடிப்படையைக் கொண்டதுதான். அது வெறும் கருத்தியலாக, கருத்துமுதல்வாதமாக இருக்க இயலாது.

ஆரியமும் சாதியமும்

சாதி என்ற கருத்தியலை ஆரிய வழி பிராமணர்கள்தான் உருவாக்கினார்கள் என்ற வாதத்தையும் நான் முழுமையாக ஏற்கவில்லை. ஆரியர்கள் புகுந்த மற்ற புவிப்பகுதிகளில் ஏன் இங்கிருப்பது போன்ற சாதிப் பிரிவினைகள் ஏற்படவில்லை என்று ஆய்வாளர் கெய்ல் ஓம்வெல்ட் கேட்பது முக்கியமானது. விவாத அரங்க நெறியாளர் பேராசிரியர் ராமு மணிவண்ணன், உலகின் மற்ற பகுதிகளில் வேறு வகையான பாகுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன என்றார். ஜப்பானில் கிட்டத்தட்ட இங்குள்ளது போன்ற பிரிவினை இருக்கிறது என்றும், அதை அவர்கள் சாதி (கேஸ்ட்) என்றே குறிப்பிடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பான தகவல்களைத் தேடியபோது, 1871ஆம் ஆண்டில் அங்கே சாதி அமைப்பு சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், ஆனால் இன்றளவும் குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களும், துப்புரவு, இறைச்சித் தயாரிப்பு போன்ற சில பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களும் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்படுவது தொடரவே செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. உலகச் சந்தையில் ஆளுமை செலுத்துகிற நாடுகளில் ஒன்றான ஜப்பானில், பல நிறுவனங்களின் நிர்வாகங்கள், தங்களுக்கு வருகிற வேலைக்கோரிக்கை விண்ணப்பங்களை எடுத்துக்கொள்கிறபோது, குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களையும், தங்களது பிறப்பிடத்தை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடாதவர்களையும் முதலிலேயே தள்ளுபடி செய்துவிடுகின்றன. ஜப்பானில் எந்தெந்த ஊர்கள், குடியிருப்புகள் “தீண்டத்தகாதவர்கள்” பாரம்பரியமாக வாழ்கிற இடங்கள் என்ற ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, தொழில் நிறுவனங்களிடையே ரகசியமாக மின்னஞ்சலில் பகிரப்பட்டது! சில ஆண்டுகளுக்கு முன் அது அம்பலமாகிப் பெரும் சர்ச்சையானது.

சுரண்டலுக்காகத் தத்துவம்

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரிய வருகைக்கு முன்பு உருவான சமூக ஏற்பாடுகளிலேயே பிரிவினை இருந்திருக்கிறது. சிலரது சுகத்திற்காகப் பலர் வியர்வை சிந்துகிற உழைப்புச் சுரண்டல் இருந்திருக்கிறது. அதைத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதற்கான அகமண முறை கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது. ஆரிய வருகைக்குப் பின் என்ன நடந்தது என்றால், நிலத்தை ஆக்கிரமித்து அதனை ஆளுகிற சிம்மாசனத்தில் அமர முயன்றவர்கள், பரம்பரை மன்னர்களின் தோள் வலிமையோடும் ஆள் வலிமையோடும் மோத முடியாதவர்களாக சமரசம் செய்துகொண்டார்கள். அரியாசனத்தில் அவர்களை அமரவைத்துவிட்டு, அறிவாசனத்தில் இவர்கள் அமர்ந்து கொண்டார்கள். வானியல், வேதக்கல்வி, நிர்வாக நுணுக்கம் போன்றவற்றில் திறமை பெற்றிருந்தவர்களின் துணை இருந்தால்தான் அரியாசனத்தில் இறுக்கமாக அமர்ந்துகொண்டு மக்களை அடக்கியாள முடியும் என்பதால், அரச குலத்தவர்கள் அறிவாசனத்தைத் தாராளமாக விட்டுக்கொடுத்தார்கள்.

இவ்வாறாக அரசர்களையும் சேர்த்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள் அன்றைய அர்ச்சகக் குலத்தவர்கள். இதிகாச அரண்மனைகளில் ஆளுமை செலுத்திய ராஜரிஷிகளின் கதைகள் காட்டுவது இதைத்தான். தங்களுக்குக் கீழே மற்ற சமூகங்கள் உற்பத்தியாளர்களாகவும் உழைப்பாளிகளாகவும் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய கோட்பாட்டைத்தான் பிராமணியம் என்கிறோம்.

அந்தக் கோட்பாடும் ஏற்பாடும் இரண்டு வழிகளில் சமூக வெளியில் நிறுவப்பட்டன. ஒன்று தத்துவ வழி, இன்னொன்று அரசியல் வழி. தத்துவ வழியில், இன்னார் ஆள வேண்டும், இன்னார் உழைக்க வேண்டும் என்பது இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. தலைவிதி, முற்பிறப்பு நம்பிக்கைகள் புகுத்தப்பட்டன. கதைகள் கட்டப்பட்டன. கடவுளே சொல்வது போன்ற பகவத் கீதை உள்ளிட்ட நூல்கள் பின்னப்பட்டன. இதையெல்லாம் எப்படி ஏற்பது என்று கேள்வி கேட்கக்கூடியவர்கள் அன்றும் இருந்திருப்பார்கள் அல்லவா? அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காக அரசியல் வழி கையாளப்பட்டது. அதற்கெனச் சட்டங்கள் இயற்றப்பட்டன. மீறுவோருக்கும் கேள்வி கேட்போருக்கும் சிறைவாசம், தலைசீவல் உள்ளிட்ட தண்டனைகள் வரையறுக்கப்பட்டன. அர்த்த சாஸ்திரம் போன்றவை அன்றைய அரசமைப்புச் சட்டங்கள்தான். ஆண்டவனின் கட்டளைகளை ஏற்க மறுப்பவர்கள்கூட ஆள்பவரின் கட்டளைகளை மறுக்க இயலாது அல்லவா? மறுத்தால் கொடும் தண்டனைகள் பாயுமே!

இப்படி ஒடுக்கப்பட்ட பிரிவுகளாகப் பெரும்பகுதி மக்களை ஒதுக்கிவைத்த ஏற்பாட்டில் உழைப்பாளிகளின் மிகை உற்பத்தியைக் களவாடுகிற உத்தி இருந்திருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஜெயந்தானுஜா பண்டோபாத்யாயா (‘வர்க்கப் போராட்டமும் சாதி ஒடுக்குமுறையும் – இடதுசாரிகளின் உள்ளார்ந்த வியூகம்’). உழைப்புப் பிரிவினையும், சுரண்டலும், மிகைமதிப்புக் கொள்ளையும் இருக்கிற ஒரு பொருளியக் கட்டமைப்பு உருவமற்ற சிந்தனையாக முடியுமா? வெறும் கருத்துமுதல்வாதமாக முடியுமா?

அகமண அடிப்படை

சாதி எப்படித் தோன்றியது, எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பதை ஆராய்கிற டாக்டர் அம்பேத்கர் அகமண முறை பற்றி அழுத்தமாகக் கூறுகிறார். வாழ்க்கை நடைமுறையாக இன்றளவும் இருக்கிற ஒன்றின் பொருளிய அடிப்படையை நாம் புரிந்துகொள்ளலாம். அகமண முறையின் அடிப்படையாக சொத்து, வாரிசுரிமை ஆகியவை இருந்தன, இன்றும் இருக்கின்றன.

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றிய புரிதல்களையும் நாம் காலத்திற்கேற்ப விரிக்கலாம், செழுமைப்படுத்தலாம். முடிந்த முடிவான ஒன்று என எதனுள்ளும் சிந்தனையை அடைத்துக்கொள்வது சமூக மாற்றத்திற்கும், மானுட விடுதலைக்கும் முட்டுக்கட்டையாகிவிடும்.

எளிமையாகச் சொல்வதென்றால் அச்சத்தின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட கடவுளை மையப்படுத்திய எல்லாமே கருத்துமுதல்வாதம் எனலாம். தலையெழுத்து, சொர்க்கம், நரகம், மறுபிறவி, பிறவியே இல்லாமல் ஆண்டவன் காலில் ஆன்மா சரணடைவது இவையெல்லாம் கருத்துமுதல்வாதம். ஆனால், உழைப்பும் சுரண்டலும் ஏற்றத்தாழ்வும் பொருளை மையமாகக் கொண்டவை. சாதி அமைப்புக்கு இவைதான் அடிப்படை என்கிறபோது சாதியம் அடிப்படையில் ஒரு பொருள்முதல்வாதம் என்பதை ஏற்கலாம். மக்கள் தலையில் ஒரு கருத்தியலாகப் பரம்பரை பரம்பரையாகப் புகுத்தப்பட்டு நிலைத்திருப்பதால் அது கருத்துமுதல்வாதமாகிவிடாது.

கடவுளைக் காரணம் காட்டிக் கொண்டுவரப்பட்டதுதான் சாதி என்கிறார் ஒரு நண்பர். உண்மையில் சாதியைக் காரணம் காட்டிக் கொண்டுவரப்பட்டதுதான் கடவுள்! சாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்தி நிலைப்படுத்துவதற்காகக் கடவுள் கருத்து சாதுரியமாகப் பயன்படுத்தப்பட்டது. கடவுள் இல்லை என்று சொல்வதும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதும் ஒன்றல்ல. கடவுள் எப்படி ஒரு கட்டப்பட்ட கருத்தோ, அதே போல் சாதி என்பதும் கட்டப்பட்ட கருத்துதுதான் என்ற வாதத்தை ஏற்பதானால், சாதி அமைப்பு இருப்பது உண்மை, ஆகவே கடவுள் இருப்பதும் உண்மை என்று ஏற்க வேண்டியதாகிவிடும்.

ஒழிக்க முடியுமா?

எல்லாமே நிலையானது, எதுவுமே மாற்ற முடியாதது என்பதும் கருத்துமுதல்வாதத்தின் ஒரு வலுவான நிலைப்பாடு. ஆகவே சாதி அமைப்பையும், பிரிவினைகளையும், அவரவர்க்கென விதிக்கப்பட்ட வேலைகளையும் (கடவுளே நினைத்தாலும்) மாற்ற முடியாது, மாற்றக் கூடாது, மாற்றுவதற்குக் கோரவும் கூடாது என்ற மிரட்டல் இதனுள் இருக்கிறது.

ஆனால் பொருள் என்பது மாறக்கூடியது, பொருளை மாற்ற முடியும், மாற்றுவதற்குக் கோர முடியும். பொருளியலை அடிப்படையாகக் கொண்டதுதான் சாதி என்று புரிந்துகொண்டால், அதை மாற்ற முடியும், ஒழிக்க முடியும் என்ற உறுதி பிறக்கும்.

சாதி அமைப்பை வெறும் கருத்தாக்கமாக மட்டும், சமுதாயக் கட்டமைப்பின் மேற்கட்டுமானமாக மட்டும் பார்த்ததால்தான் சாதியத்தை ஒழித்துக்கட்டுவதற்கான வரலாற்றுப் போராட்டம், இந்தியச் சூழல் சார்ந்த வர்க்கப் போராட்டம் பின்தங்கிப்போனது என்ற சிந்தனையும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

சாதியின் அடித்தளம் பொருளியல் செயல்பாடுதான் என்பதை ஏற்கிறவர்களும்கூட, அதற்குப் பொருள்முதல்வாதம் என்ற தத்துவக் கண்ணோட்டச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்துவது பொருந்தாது என்ற கோணத்தில் வாதிடுகிறார்கள். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வாதமாகவே கருதுகிறேன். தொடர்ந்து விவாதிக்கவும், தெளிவுபடவும், சரியானதொரு பொதுமுடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது. அதற்குத் தனிமனிதர்களாகவும் இயக்கங்களாகவும் நாம் தயாராக இருக்கிறோமா, அல்லது ஏற்கெனவே நம் சிந்தனைகளில் ஊறிப்போன விளக்கங்களோடு நிற்கப்போகிறோமா?

இறுதி விளைவாக சாதி ஒழித்துக்கட்டப்படுவதற்கு, சாதியின் பெயரால் தொடரும் தீண்டாமை அநீதிகள் தடுக்கப்படுவதற்கு, ஒதுக்கப்பட்ட மக்கள் மீட்கப்படுவதற்கு, சமத்துவ நீதியின் முன் எல்லோரும் பாகுபாடின்றி அணிவகுப்பதற்கு, தேர்தல் போன்ற தற்காலிகக் குறுக்கீடுகளால் தேங்கிவிடாமல் வெற்றி கிட்டும் வரை அந்த நெடும்போர் தொடர்வதற்கு எந்தவொரு பாதையும் அடைபட்டுவிடக் கூடாது. ஏனென்றால் சாதி இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது.

(கட்டுரையாளர்: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

சனி, 17 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon