மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ஹெல்மெட் அணியாததால் 3 பேர் பலி!

ஹெல்மெட் அணியாததால் 3 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே, ஹெல்மெட் அணியாமல் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, இரு சக்கர வாகனங்களை இயக்குபவரும் பின்னால் அமர்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார்.

கோவை மாவட்டம் சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பாபு, பாரதி, ராஜீவ். இவர்கள் மூவரும், இன்று (நவம்பர் 16) ஹெல்மெட் அணியாமல் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். கோவை கிணத்துக்கடவு பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். தாமரைக்குளம் பகுதி அருகே வந்தபோது, இவர்களது இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இந்த தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார், மூவரது உடல்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்து பயணித்திருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றபோது நேரிட்ட விபத்துக்களினால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் நாளொன்றுக்குச் சராசரியாக 98 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும், ஹெல்மெட் அணியாத காரணத்தினால் 5,211 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon