மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

“பாடப் புத்தகத்திலிருந்து பெரியார்-மணியம்மை குறித்த பாடங்கள் நீக்கப்பட வேண்டும்” என்று பேசி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வரும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல பெரியாரின் சிலையும் அகற்றப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையாகவே தனது அட்மின் பதிவிட்டார் என்று விளக்கம் அளித்தார்.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார் ஹெச்.ராஜா.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார் ஹெச்.ராஜா, அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 15) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈவேரா பற்றியும் மணியம்மை பற்றியும் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? யோசிக்க வேண்டாமா? ஒரு நீதிபதி கேட்கிறார், பள்ளிக்கூட குழந்தைகள் வயதானவரையும், கல்யாணம் ஆனவர்களையும் ஏன் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள்? இதை அரசாங்கம் தடுக்க என்ன செய்திருக்கிறது? என்று கேட்கிறார். இதையெல்லாம் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டாலே சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அவதூறாக விமர்சித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ஹெச்.ராஜாவைப் போன்றவர்கள் மீண்டும், மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். தந்தைப் பெரியாரின் கொள்கைகள் சிறப்பானவை. தமிழ் சமுதாயத்துக்கு அவசியமானவை. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் கூட சமுதாயத்துக்கு பொருந்தக்கூடியவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

தந்தைப் பெரியாரின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அவற்றிலிருந்து ஹெச்.ராஜா போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. தந்தை பெரியார் பற்றி பள்ளிப் பாடநூலில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்து பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ள கருத்துகள் அவதூறானவை; இரசனைக்குறைவானவை; கண்டிக்கத் தக்கவை” என்று விமர்சித்துள்ளார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon