மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சபரிமலை செல்லும் திருப்தி: பாஜக எதிர்ப்பு!

சபரிமலை செல்லும் திருப்தி: பாஜக எதிர்ப்பு!

சபரிமலை கோயிலுக்குச் செல்வதற்காக வந்த பெண்ணுரிமைச் செயற்பாட்டாளரான திருப்தி தேசாய்க்கு எதிராக, கொச்சி விமான நிலையத்தின் வெளியே பாஜக உட்பட சில கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவர் விமானநிலையத்தை விட்டுச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர் கேரள போலீசார்.

கேரளாவிலுள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இடையில் இரண்டு முறை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டாலும், இதுவரை 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் எவரும் ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையையொட்டி, இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு மாத காலம் வரை இது தொடரும். இந்த காலகட்டத்தில் பெருமளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி, சபரிமலை கோயிலுக்குக் குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் வருவதை யாரும் தடுக்காத வகையில் பாதுகாப்பு அளிக்க முடிவெடுத்துள்ளது கேரள அரசு. இதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆறு பெண்களுடன் நாளை (நவம்பர் 17) சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார் மும்பையைச் சேர்ந்த பூமாதா படை அமைப்பின் நிறுவனர் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, கேரள மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர்கள், கேரள டிஜிபி ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கும் தனது குழுவினருக்கும் சபரிமலை செல்வதற்குப் பயண ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று காலை 4.30 மணியளவில், அவர் தன் குழுவினருடன் கொச்சி விமான நிலையம் வந்திறங்கினார். ஆனால், அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேற முடியாத வகையில், பாஜக உள்பட சில கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனால், கொச்சி விமானநிலையத்தில் இருந்து திருப்தி தேசாய் வெளியேறுவதற்கு அனுமதி மறுத்துள்ளது கேரள காவல் துறை. இதனால், அவர் கொச்சி விமான நிலையத்தினுள்ளேயே தங்கியுள்ளார். கர்ணா சமிதி மற்றும் ஐயப்ப சேவா சங்கம் ஆகிய அமைப்பினர், திருப்தி தேசாய் திரும்பிச் செல்லும்வரை தாங்கள் இங்கிருந்து நகரப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ஏஎன்ஐக்குப் பேட்டியளித்துள்ளார் கேரள பாஜக நிர்வாகி எம்.என்.கோபி. காவல் துறை வாகனம் அல்லது பிற அரசுத் துறை வாகனங்கள் மூலமாக, திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டுச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். “திருப்தி தேசாய் விரும்பினால், அவரது சொந்த வாகனத்தில் செல்லட்டும். விமான நிலைய டாக்ஸிகளும் அவரை அழைத்துச் செல்லாது. திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியேறினாலும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

கேரள பாஜக தலைவர் சுரேந்திரனும், மாநில அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். பெண்கள் எவரையும் சபரிமலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கொச்சியிலுள்ள சில டாக்ஸி ஓட்டுனர்கள் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களை தங்களது வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனாலும், எவரும் பெண்களை ஏற்றிச்செல்லத் தயாராக இல்லை.

இன்று மதியத்துக்குப் பிறகு, நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon