மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

சிறப்புப் பார்வை: அமெரிக்க இடைத்தேர்தல் கூறும் பாடம்!

சிறப்புப் பார்வை: அமெரிக்க இடைத்தேர்தல் கூறும் பாடம்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல், அரசியல்ரீதியாக அதிபர் தேர்தலுக்கு நிகரான பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. காரணம், பிரதிநிதிகளின் அவை அல்லது காங்கிரஸ் என்று அழைக்கப்படும் மக்களவையில் 435 இடங்களும், செனட் என்று அழைக்கப்படும் மேலவையின் 100 இடங்களில் 35 இடங்களும், 50 மாநில ஆளுநர் பதவிகளில் 36 இடங்களும், அதோடுகூட பல மாநில மற்றும் உள்ளூர் பதவிகளும் நிரப்பப்படுவதற்காக நடத்தப்பட்ட தேர்தல் இது. அதிபர் ட்ரம்ப் மக்களவையில் பெரும்பான்மை இழப்பாரா, அதனால் அவரது அதிதீவிர தடாலடிக் கொள்கைகளுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆதிக்கத்திலுள்ள மக்களவை கடிவாளம் போடுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகளின் காரணமாகவும் இத்தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றன.

நவம்பர் 6இல் இருந்து வெளிவரத் தொடங்கிய முடிவுகள் ட்ரம்ப்புக்குக் கடுமையான பேரிடியாக விளங்கின. மக்களவை அவரது கையைவிட்டு நழுவியது. 23 இடங்களை அதிகமாகப் பெற்று, ஜனநாயகக் கட்சி மக்களவையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால் மேலவையில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று, அதன் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்தது.

சட்டம் இயற்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை தேவை. உலகில் எங்காயினும் போருக்குச் செல்ல வேண்டுமானால் அல்லது ஆயுதத் தாக்குதல்களை நடத்த வேண்டுமென்றால், இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை. எனவே, உள்நாட்டு விஷயங்களிலும் அயல்விவகாரங்களிலும் ட்ரம்ப் கொள்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டை போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எழுச்சி

தேர்தல் அரசியலில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமோ அல்லது ஏதேனும் ஒன்றிலோ பெரும்பான்மை பெறுவது ஒன்றும் அமெரிக்காவுக்குப் புதிதல்ல. ஜனநாயகக் கட்சி புத்துயிரூட்டப்பட்டதற்குப் பின்னால் கட்சித் தலைமையின் வழக்கமான அணுகுமுறையைக் காட்டிலும், அடிமட்டத்தில் செயற்பாட்டாளர்களும் வேர்க்கால் மட்டக் குழுக்களும் உத்வேகம் பெற்று தீவிரமாகப் பணியாற்றியதே இதில் புதிய விஷயம். வேர்க்கால் மட்ட சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் முன்முயற்சிகள் கூட சில சந்தர்ப்பங்களில் தேசிய மட்டத்திலான அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் நல்ல எடுத்துக்காட்டு. இந்த கீழ்மட்டச் செயல்வீரர்கள் எவ்வாறு வீரியமிக்க வகையிலே பணியாற்றி ஜனநாயகக் கட்சியை உயிர்ப்பித்தனர் என்பதை நாம் இங்கு காணலாம்.

2016இல் இனவெறியுடனும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு எதிரான சமூக வெறியுடனும் பெண்களுக்கு எதிராகக் கொச்சையாக அவதூறு பேசியும் செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும் நல்வாழ்வுத் திட்டங்களைக் குறைப்பேன் என்று உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகப் பேசி பிரச்சாரம் செய்த ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்டார் ஹிலாரி கிளிண்டன். அவரைவிட 4.6% மக்கள் வாக்குகளை, அதாவது 29 லட்சம் வாக்குகளைக் குறைவாகப் பெற்றிருந்தாலும், எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாநிலப் பிரதிநிதிகள் தொகுப்பில் 74 வாக்குகளை அதிகமாகப் பெற்று அதிபரானார் ட்ரம்ப். இதனைக் கேள்விப்பட்டதும், அமெரிக்கர்களில் பலர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

தவற்றைச் சரிசெய்ய வேண்டும்

அவருடைய ஜனரஞ்சக வாதத்தால், பெரும்பான்மையின் ஆதரவு அவருக்கு இருக்கிறதோ எனவும் குழம்பினர். ஏதோ தவறு நடந்துவிட்டது. ஆனால் வெட்டியாக இருக்க முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று பலர் எண்ணினர். தேர்தல் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அணி திரட்டும் பணியில் இறங்கினர். பெரும்பாலானவர்களுக்குக் கோபம் மட்டுமே இருந்தது, அரசியல் அனுபவம் எதுவும் இருக்கவில்லை. இதுவரை அரசியல் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்கள் கூட, முகநூலில் ட்ரம்ப் எதிர்ப்புக் குழுக்களை உருவாக்கினர்.

முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. ட்ரம்ப்பின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து தீட்டித் தீர்த்தனர். கையெழுத்துகளைச் சேகரித்து மனுக்களை அனுப்பினர். முகநூலிலேயே அறிக்கைகளைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால், தெளிவான அரசியல் திசைவழி எதுவும் இருக்கவில்லை. 2009லும், 2010லும் தற்போது ஆளும்கட்சியாக உள்ள குடியரசுக் கட்சியிலேயே வரியைக் குறைக்க வேண்டுமென்றும், பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமென்றும், தீவிர வலதுசாரிகள் அடிமட்டங்களில் நடத்திய டீ பார்ட்டி இயக்கமொன்றே அவர்களது முன்னுதாரணமாக இருந்தது. ஜனநாயக உள்ளடக்கத்துடன், அதே பாணியில் இயக்கம் நடத்த பலர் யத்தனித்தனர்.

ட்ரம்ப்பின் கொள்கைகள் பாசிசம் என வர்ணித்துப் பல ஆய்வுகள் இணையத்தில் வலம்வந்தன. ஆனால், அவை தத்துவ உபன்யாசங்கள். அன்றாட நடைமுறையில் பாசிசத்தை திறம்பட எவ்வாறு எதிர்ப்பது என்பதற்கு உதவாதவை. ட்ரம்ப்பின் கொள்கைகளை எதிர்க்க வேண்டுமானால், இரு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அமைப்பில் இருக்கும் ஒரே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியால் மட்டுமே முடியும். ஆனால், அது துடிப்பின்றி மக்களுடனான பிணைப்புகள் பலவீனப்பட்டு கிடந்தது.

துளிர்த்த இணைய எதிர்ப்புகள்

ட்ரம்ப்புக்கு எதிராகச் சிற்றூர்களில் கூட காளான்கள் போல முளைத்த மக்கள் செயல்பாட்டுக் குழுக்கள், தீவிர எதிர்ப்புகளை மேற்கொள்ளும்படி வற்புறுத்தி ஜனநாயகக் கட்சிக்குக் கீழ்மட்டங்களில் புத்துயிரூட்டத் தலைப்பட்டனர். எப்படிச் செயல்பட்டால் ஜனநாயகக் கட்சியையும் உந்தித்தள்ளலாம் என்று செயல்பாட்டுக்கான பல வழிகாட்டி ஏடுகளை இணையத்தில் வெளியிடலாயினர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்களை அனுப்புவது வீண். கட்சியில் இணைந்து கூட்டங்களிலும் இயக்கங்களிலும் பங்கெடுத்துச் செயல்பாட்டை முடுக்கிவிட வேண்டும் என ஒரு வழிகாட்டி ஏடு அறிவுறுத்தியது. செயற்பாட்டாளர்கள் புதிய கட்சிக்கிளைகளைத் தாங்களே அமைத்தனர்.

ஆண்டுதோறும் கட்சியின் பல மட்டங்களிலான பொறுப்புகளுக்கு பிரைமரீஸ் எனப்படும் கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இருகட்சிகளிலும் வழக்கம். சில உட்குழுக்களும்கூட தங்கள் கொள்கைத் திட்டங்களையும் செயல் திட்டங்களையும் platforms என்ற பெயரில் முன்வைத்து வேட்பாளர்களை முன்னிறுத்திப் போட்டியிடுவது சகஜம். தீவிர ட்ரம்ப் எதிர்ப்புக் குழுக்களும் தாங்கள் விரும்பும் சில வேட்பாளர்களை ஆதரித்து உள்ளூர், பிராந்திய மற்றும் மாநில மட்டங்களில் போட்டியிடலாயின. கட்சித் தேர்தல்கள் களைகட்டின.

ட்ரம்ப்பின் கொள்கைகள் இனரீதியாகவும், உள்ளூரார் - புலம்பெயர்ந்தோர் எனவும், இதர பல அடையாளங்கள் வாரியாகவும் வாக்காளர்களைப் பிளவுபடுத்துவதாக இருந்தது. இதற்கு எதிராக ‘கூறுபோடப்பட முடியாத வழிகாட்டி’ (Indivisible Guide) என்ற அமைப்பொன்று ஒரு சிற்றூரில் உதயமானது. விரைவிலேயே இது நாடெங்கும் ஆயிரக்கணக்கான ஊர்களுக்குத் தீ போல பரவியது. பலர் இந்தப் பெயரில் செயல்பட ஆரம்பித்தனர். ட்ரம்ப் எதிர்ப்புக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தலாயினர்.

பூதாகரமான மக்கள் சக்தி

ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே உள்ள முற்போக்கு சக்திகள், கடந்த தேர்தலின்போது ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக பெர்னீ சாண்டர்ஸ் என்பவரை நிறுத்திப் போட்டியிட்டனர். பெர்னீ சாண்டர்ஸ் தோல்வியுற்றபின், இவர்கள் அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படத் தொடங்கினர். அவரை ஆதரித்த இன்னொரு பிரிவினர் ‘நமது புரட்சி’ (Our Revolution) என்ற பெயரில் இயங்கினர். பல ஊர்கள் பெயரிலும் குழுக்கள் உருவாயின.

பெண்களை ட்ரம்ப் இழிவு செய்ததைக் கண்டித்தும் பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், 8 மார்ச் 2017 அன்று நூற்றுக்கணக்கான ஊர்களில் மாதர் பேரணிகள் நடைபெற்றன. இப்பேரணிகளைக் கட்டமைப்பதில் இந்த வேர்க்கால்மட்டக் குழுக்கள் இணையம் வாயிலாக பல நெட்வொர்க்குகளை உருவாக்கின. வரலாறு காணாத வகையில் 50 லட்சம் பெண்கள் இப்பேரணிகளில் பங்கெடுத்தனர். இந்நாள்வரை கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருந்த சக்தியொன்று பூதாகரமாக உருவெடுத்தது.

இந்த ஜனநாயகக் கிளர்ச்சியாளர்கள் காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தல்களுக்குத் தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல புரட்சிகர வேட்பாளர்களை ஆதரித்து, முன்னிறுத்தி, அவர்களுக்கான பிரச்சாரத்தையும் தங்கள் பொறுப்பில் மேற்கொண்டனர். பெரும் செல்வந்தர்கள் நலனிலேயே பெரும்பாலும் பணிபுரிந்து வந்த கட்சியின் பழம்பெருச்சாளிகள், பணமுதலைகளைச் சார்ந்து நின்று அவர்களிடமிருந்து மட்டும் கோடிக்கணக்கில் தேர்தல் நிதி திரட்டுவது வழக்கம். இம்முறைக்குப் பதிலாக, இந்த புதிய சக்திகள் லட்சக்கணக்கானோரிடமிருந்து 2 டாலர், 5 டாலர், 10 டாலர் என சிறுசிறு பங்களிப்புகளாக நன்கொடை பெற்றனர்.

குவிந்தது நிதி

கிரௌட் ஃபண்டிங் (crowd funding) என்றழைக்கப்படும் இந்த முறையில், ஜனநாயகக் கட்சியில் அனைத்து மட்டங்களிலும் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்காகவும் ஆக்ட் ப்ளூ (Act Blue - ஜனநாயகக் கட்சி நீல நிறத்தாலும் ட்ரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சி சிகப்பு நிறத்தாலும் அறியப்படுகின்றன) என்ற ஓர் அமைப்பால் மட்டும் திரட்டப்பட்ட தொகை அக்டோபர் மாத இறுதியில் 3 பில்லியன் டாலரை (ரூ.21,500 கோடி) எட்டியது.

செயற்பாட்டாளர்கள் வீடுவீடாகச் சென்று ட்ரம்ப்புக்கு எதிராக மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு திரட்டலாயினர். 2016 தேர்தலின்போது உருவாகிய 'இடது நோக்கி திரும்பு' (Swing Left) என்ற ஓர் அமைப்பின் செயல்வீரர்கள் மட்டும் 84 மாவட்டங்களில் 20 லட்சம் பேரைச் சந்தித்தனர். இந்த செயல்வீரர்களில் 40% பேருக்கு அரசியல் முன்னனுபவம் எதுவும் இருந்ததில்லை. இவர்களுள் 75% பேர் பெண் செயல்வீரர்கள். ஆசிய நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் தத்தம் மொழி பேசும் மக்களிடையே தாய்மொழியில் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை மேற்கொண்டனர். தனிப்பட்ட பிரச்சினைகள் மீதான இயக்கங்களும் உருவாயின. எடுத்துக்காட்டாக "அனைவருக்கும் சுகாதார வசதி" என்ற ஒரு குழு மும்முரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி ட்ரம்ப்பைத் தோற்கடிக்கப் பேரணிகளை நடத்தியது.

இதில் சிறப்பு என்னவென்றால், மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரே தலைமை எதுவும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் அனைத்தும் தன்னெழுச்சியாகவும் பரவலாகவும் நடந்தேறின. பழுத்த அரசியல்வாதிகளே பெரிதும் போட்டியிடும் செனட் வேட்பாளர்கள் விஷயத்தில் பெரும் வெற்றியீட்ட இயலாமல் போனாலும், மக்களவை வேட்பாளர்கள் பெற்ற மகத்தான வெற்றிகளுக்கு இந்த அடிமட்ட மறுமலர்ச்சி பெரிதும் உதவியது என்பதைக் கட்சித்தலைவர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் இன்று அங்கீகரித்துள்ளன.

பா.சிவராமன்

எழுத உதவிய கட்டுரை: ‘Life After Trump—How Donald Trump Saved the Democratic Party From Itself’, Ryan Grim, November 6 2018.

இணைய முகவரி: https://theintercept.com/2018/11/05/democratic-party-donald-trump-election/

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon