மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

ராகுலுக்கு மோடிபோபியா: அமித் ஷா

ராகுலுக்கு மோடிபோபியா: அமித் ஷா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மோடிபோபியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பாஜகவும், ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், பர்வானி என்னும் இடத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, “மத்தியில் பிரதமர் மோடியும், மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும் வளர்ச்சி பாதையில் நடைபோட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரஸுக்கு அப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால், வெறுமனே மோடியைப் பற்றி கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருமுறை விமான நிலையத்தில் காத்திருந்த தருணத்தில் ராகுலின் உரைகளைக் கேட்டேன். அப்போதுதான் அவரது உரைகளில் மோடி பற்றிய ஓர் ஒற்றைத் தன்மையுடன் கூடிய பிரச்சினை இருப்பதைக் கண்டுகொண்டேன். மோடிபோபியாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் மோடி, மோடி என்று கூச்சலிடுகிறார்.

ராகுலிடம் பேசுவதற்கு என்று எதுவும் இல்லை. அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்ட ஊழல் குறித்து பேச முடியாது. வளர்ச்சி குறித்தும் பேச முடியாது. அவர்கள் ஆட்சியில் அப்படி ஒன்று இருந்ததே இல்லை.

சொல்லப்போனால் அவரது பேச்சுகளில் இருந்து என்னால் அவர் காங்கிரஸுக்குப் பிரச்சாரம் செய்கிறாரா அல்லது பாஜகவுக்குப் பிரச்சாரம் செய்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை” என்று கூறினார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon