மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

ஊழல் ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள்: தினகரன்

ஊழல் ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள்: தினகரன்

அதிகாரிகள் ஆசியுடன் ஊழல் நடப்பதாகவும், ஊழல் ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி டெண்டரில் கூட்டு சதி நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம், சமீபத்தில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் நேற்று (நவம்பர் 15) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மழைக்காலங்களில் புயல் வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாகப் பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றியப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனைச் சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை. ஊழல் புகார்மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யும் உள்ளாட்சித் துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது" என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon