மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

சிதம்பரம்: மருத்துவக் கல்லூரிக்குக் கண்டனம்!

சிதம்பரம்: மருத்துவக் கல்லூரிக்குக் கண்டனம்!

தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவோ, அதை மட்டுமே அரசே ஏற்று நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது மருத்துவர் சங்கம்.

சமூகச் சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் சார்பில், சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (நவம்பர் 15) நடைபெற்றது. இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்குக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குக் கிடையாது என்ற தீர்ப்பினை, கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்குக் கட்டண நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் குழு, பல்கலைக்கழகம் தாக்கல் செய்த முறைகேடான வரவு செலவு அறிக்கையினை அடிப்படையாகக்கொண்டு நியாயமற்ற முறையில் ஏற்கனவே பல்கலைக்கழகம் நிர்ணயித்திருந்த அதே கல்விக் கட்டணமாகிய எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரமும், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும் நிர்ணயித்தது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என்று, கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று கல்விக் கட்டணக் குழு நியாயமற்ற முறையில் அவசர கோலத்தில் நிர்ணயித்தது.

தமிழக அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியினை அளித்து நடத்தப்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவக் கல்லூரிக்கு இவ்வளவு கட்டணம் நிர்ணயித்துள்ளது சமூகநீதிக்கு எதிரானது. மேற்கண்ட கட்டணத்தினை வசூலிக்கக் கூடாது என்று கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று கடிதம் அளித்த பின்பு, மாணவர்கள் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

திடீரென்று, கடந்த 12ஆம் தேதியன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி நவம்பர் 13ஆம் தேதிக்குள் கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு கட்டணம் செலுத்தாவிடில் மாணவர்களை வகுப்பிற்குள் அனுமதிக்க முடியாது என்றும்,சுமார் 500க்கு மேற்பட்ட மாணவர்களை வகுப்பிலிருந்து வெளியேற்றி மருத்துவ மாணவர்களின் மருத்துவம் பயிலும் கனவைக் கேள்விக்குறி ஆக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கட்டணம் செலுத்தச் சொல்வது நிர்வாக ரீதியான நடவடிக்கை தான் என்றாலும், அதனை ஒரே நாளில் செலுத்த வேண்டும் என்று சொல்லுவது கந்து வட்டிக்காரர்களின் செயலைவிட மோசமானது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கல்லூரி நிர்வாகம் இப்படிச் செயல்படுவது கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், உடனடியாக இதில் தலையிட்டு மருத்துவ மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாழாக்க நினைக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களைத் தொடர்ந்து வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவோ, அதை மட்டுமே அரசே ஏற்று நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை டிஎம்இ (DME) மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon