மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 நவ 2018

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களை ஏமாற்றுவதற்கா தேர்வாணையங்கள்?

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களை ஏமாற்றுவதற்கா தேர்வாணையங்கள்?

கார்த்தி கோவர்த்தனன்

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை வழங்குவதில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய இரு அமைப்புகள் முக்கியச் செயலாற்றுகின்றன. முன்னது 1923ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டு, பல்வேறு பெயர், அமைப்பு மாறுதலுக்குட்பட்டு இறுதியில் தற்போது உள்ள நிலையை 1970ஆம் ஆண்டில் எட்டியது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான உயர் பதவிகளிலிருந்து எட்டாம் வகுப்புத் தகுதி வரை உள்ள கடைநிலைப் பதவிகள் இத்தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவின் மூலமும் பணிவாய்ப்புகள் தற்போது சொற்ப அளவில் வழங்கப்படுகின்றன. 1988ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனமாக ஆசிரியர் தேர்வு வாரியமானது உருவாக்கப்பட்டது. அரசுக் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர் பணியிடங்கள் முதல் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியப் பணியிடங்கள் வரை தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணியமர்த்தும் பணியை இது செய்கிறது.

சமீபகாலமாகப் பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, தனியார் நிறுவனங்களில் நிலவும் பணிப் பாதுகாப்பின்மை காரணமாக இளைஞர்கள் அரசு வேலை என்ற கனவினைச் சுமந்துவருகின்றனர். மேலும், கிராமங்களில் சமூகப் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் எண்ணற்ற இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பினை ஏணிப்படியாக நினைக்கின்றனர். ஆகையால் கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை இளைஞர்களும் விடாமல் முயற்சி செய்து படித்தால் கண்டிப்பாக அரசு வேலை கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

ஆனால், இளைஞர்கள் பெரிதாக நம்பியிருக்கும் இந்த இரு தன்னாட்சி பெற்ற அமைப்புகளும் இன்று நம்பிக்கையற்றவைகளாக மாறியிருக்கின்றன. இதற்குக் காரணம் நடுத்தர மக்களிடையே நிலவும் அரசுப்பணி என்கிற மோகம் மற்றும் அதனை வைத்து அரசியல் பிழைப்புவாதிகளின் ஊழல் படிந்த கைகளே. இன்றளவும் பல்வேறு அரசியல் மற்றும் வழக்கு நெருக்கடியால் இவ்வமைப்புகள் திணறிவருகின்றன என்பதைத் தற்போது நடக்கும் சில ஊழல் செயல்பாடுகள் மூலம் காண முடிகிறது. இதனை நிரூபிக்கும் இரு சம்பவங்கள்:

பல்வேறு சிறு சிறு குளறுபடிகளுடன் இயங்கிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2016ஆம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வில் நடந்த விடைத்தாள் முறைகேட்டில் அம்பலமாகி நிற்கிறது. இரு நிலைகளில் நடைபெற்ற இத்தேர்வில் தேர்வான 74 பேரில் 62 பேர் சென்னை அப்போலோ பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்.

விடைத்தாள்கள் தேர்வாணையத்திலிருந்து கூரியர் மூலம் சில தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் இங்கு வருவதை சத்யம் தொலைக்காட்சி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. தேர்வானவர்களில் பலர் ஏற்கனவே உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளின் மகன்கள் மற்றும் மகள்கள். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நேர்முகத் தேர்வின்போதும் குறிப்பிட்ட நபர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்க ஏதுவாக ஒரே நிறத்தில் உடையணிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சி மையம் மற்றும் தேர்வாணையத்தின் முக்கிய அதிகாரிகளின் கூட்டு வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரைக் கைது செய்தாலும் விசாரணை முடிவடையாதவாறு அதிகாரத்தில் உள்ள சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இம்முறைகேட்டை வழக்காகப் பதிவு செய்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த சீனுவாசன் தெரிவிக்கையில், “கஷ்டப்பட்டு படித்தால் அரசுப்பணி கிடைக்கும் என்று பார்த்தால் சிலர் குறுக்கு வழியில் பணத்தைக் கட்டி என்னைப் போன்ற கிராமப்புற இளைஞர்களின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுகின்றனர். ஈக்கள் போல பயிற்சி மையங்கள் ஒருபக்கம் இதைப் பயன்படுத்திக் கொழிக்கின்றனர்” என்றார்.

மேலும், ஒரு நிலை (குரூப்) பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வர வருடக்கணக்கில் ஆவதால் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை நம்பி எந்தவொரு தேர்வரும் உறுதியாக கவனம் செலுத்தித் தயார் செய்ய முடிவதில்லை. தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் ஆண்டுக் குறிப்பின்படி எந்தவொரு தேர்வின் அறிவிப்புகள், முடிவுகள் வெளியிடப்படுவதில்லை. இதனால் தேர்வர்கள் மத்தியில் தேர்வாணையம் மீது நம்பிக்கை இழந்த சூழல் காணப்படுகிறது.

அம்பலமாகும் தொடர் மோசடிகள்

இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர் கொள்ளை போல நம்பிக்கையுடன் தேர்வெழுதியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தொடர் மோசடிகள் அம்பலமாகியுள்ளது. முதலாவதாக, 2017 செப்டம்பரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,088 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டது. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகள் என இரு பிரிவுகளில் அம்மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. ஏற்கனவே வெளியான எழுத்துத் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட நிலையில் வாரியமானது மறுமுறை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில் சுமார் 196 பேருடைய மதிப்பெண் அசல் மதிப்பெண்ணைவிட அதிகமாக வழங்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் சில முக்கியக் குற்றவாளிகளைக் காக்கும் பொருட்டு 2018 பிப்ரவரியில் மொத்தத் தேர்வுமே ரத்து செய்யப்படுவதாக வாரியம் அறிவித்தது. நான்கு மாத இடைவெளியில் வாரியத் தலைவர்களாக நான்கு பேர் மாற்றப்பட்டது தேர்வர்களின் மத்தியில் பெரும் சந்தேகம் எழுப்பியுள்ளது.

தேர்வெழுதி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த அருண் இதுகுறித்துக் கூறுகையில் “நான் ஒரு தனியார் கல்லூரியில் குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து வந்தேன். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த வேலையை விட்டுவிட்டு இரவுப் பகலாகப் படித்துத் தேர்ச்சியும் பெற்றேன். ஆனால், யாரோ சிலர் செய்த தவற்றுக்காக சுமார் ஆயிரம் பேருக்கான நீதி பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கிறோம்” என்றார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியப் பணிக்கான தேர்வு, டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு, சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு என அனைத்திலும் தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். மேலும், பல்வேறு வழக்குகளைச் சமாளிக்க முடியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் திணறிவருவதாகவும் தேர்வு வாரியத்தை அரசு கலைக்கவும் முயற்சி செய்துவருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

நாளுக்கு நாள் பெருகிவரும் போட்டி மனப்பான்மை, பணம், அதிகாரக் குவியல் ஆகியவை ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலைப் போல இங்கு நடைபெறும் ஊழல்கள் எவ்வித அற மற்றும் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நடக்கிறது. பொதுச் சமூகமும் அரசு வேலை கிடைப்பது பணமில்லாமல் சாத்தியமில்லை என்ற கருத்தாக்கத்தில் கண்டும் காணாமல் இருக்கிறது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வரும் கல்வியாளருமான பேராசிரியர். பா.சிவக்குமார் கூறுகையில், “சமீபகாலமாக அரசு வேலைவாய்ப்பு என்றாலே பணம் மூலம் தான் என்று மக்கள் நம்புவது சமூக்கேடு. தேர்வுகளில் ஊழல் என்பது வெறும் பொருளாதாரக் ரீதியிலான கொள்ளை மட்டுமல்ல; அது சமூக நீதிக்கு எதிரானது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது முதல் தலைமுறை பட்டதாரிகளும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும்தான். மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடினால் மணல் மாஃபியா கும்பலால் கொல்லப்படுபது போல கல்வி மாஃபியா கும்பல்களால் கல்விக் கொலைகளும் நடக்க வாய்ப்பிருக்கிறது” என்று எச்சரிக்கிறார்.

பேராசிரியர் குறிப்பிட்டது போலவே இத்தேர்வுகளை முன்வைத்து நடக்கும் பயிற்சி மைய மாஃபியாக்கள் இதனை சரியாகப் பயன்படுத்தி கோடிகளைக் குவிக்கின்றனர். தேர்வுக்கான பயிற்சி என்ற பேரில் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்குவது மட்டுமில்லாமல் அதிகாரத்தின் உதவிக்கொண்டு தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட பல லட்சங்களைத் தேர்வர்களிடமிருந்து பெற்று அதிகாரிகளுக்குத் தரும் தரகர்களாக மாறியுள்ளனர் என்பதே நிதர்சனம்.

ஒருபடி மேலே சென்று தேர்வாணையங்கள் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாளைத் தீர்மானித்தல், வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் பட்டியலைத் தயார் செய்வது ஆகியவற்றையும் சில பயிற்சி மையங்கள் செய்கின்றன. இதில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடங்கி, பயிற்சி மைய உரிமையாளர் முதல் அதிகாரிகள் வரை கூட்டு வலைப்பின்னல் அமைத்துக் கோடிகளில் குவிப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.

அரசு வேலை கனவில் இருக்கும் எண்ணற்ற கிராமப்புற ஏழை இளைஞர்களின் கனவுகளை இவ்விரு அரசு அமைப்புகளும் சிதைத்து வருவது வேதனை தருகிறது. இரு தேர்வாணையங்களிலும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதாகத் தேர்வர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கின்றனர். நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும் விசாரிக்கவும் எந்த உள்கட்டமைப்பும் இல்லை என்பதால், தவறு செய்யும் அதிகாரிகள் எளிதில் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுத் தப்பித்து விடுகின்றனர்.

ஒருபுறம் பணியாளர் பற்றாக்குறை, மறுபுறம் அரசியல் தலையீடு, பணம் ஆகியவற்றின் காரணமாக அதிகாரிகள் இம்முறைகேடுகளுக்குத் துணைபோக வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார் பெயர் கூற விரும்பாத தேர்வாணைய அதிகாரி ஒருவர்.

இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இவ்விரு வேலை வழங்கும் அமைப்புகளின் மீது பணியில் உள்ள இரு நீதிபதிகளின் தலைமையிலோ அல்லது சிபிஐ அமைப்பின் மூலமாகவோ உரிய விசாரணை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கிடவும் தேர்வு வாரியங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தேர்வர்கள் கோருகின்றனர்.

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

வியாழன் 15 நவ 2018