மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

மெளன குரு இயக்குநரின் மகாமுனி!

மெளன குரு இயக்குநரின் மகாமுனி!

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார் இயக்குநர் சாந்த குமார்.

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகர்களுள் ஒருவர் அருள்நிதி. அப்படியாக அவர் தேர்ந்தெடுத்து நடித்திருந்த படம்தான் மெளன குரு. நேர்த்தியான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்த அப்படத்தைக் கோலிவுட்டில் வெளியான படங்களுள் மிக முக்கியமான படைப்பு எனக் கூறி கொண்டாடி மகிழ்ந்தனர் பல சினிமா விமர்சகர்கள்.

படம் கொண்டாடப்பட்டாலும் அதை இயக்கிய அறிமுக இயக்குநர் சாந்த குமார் அதன் பின்னர் எந்தப் படத்தையும் இயக்காமலேயே இருந்துவந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்யாவை கதாநாயகனாக வைத்து மகாமுனி எனும் படத்தைத் தற்போது இயக்கவுள்ளார் சாந்தகுமார். இப்படத்தின் துவக்க விழா இன்று (நவம்பர் 14) சென்னையில் நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா இதைத் தயாரிக்கிறார்.

ஆர்யாவுடன் மஹிமா நம்பியார்,இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜிஎம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். படத் தொகுப்பை VJ சாபு ஜோசப் கவனிக்க ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.

முதல் படம் ஆக்‌ஷன் த்ரில்லராக வெளியான நிலையில் இந்தப் படமும் கிட்டத்தட்ட அதைபோலவே க்ரைம் த்ரில்லராக வெளிவரவிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். சாந்த குமாரின் முதல் படம் நல்ல கவனத்தை ஏற்படுத்தியிருந்ததால் இந்தப் படத்திற்கும் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon