மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சிறப்புப் பார்வை: ஸ்டேன் லீ - ‘மேன் ஆஃப் ஹாலிவுட்’!

சிறப்புப் பார்வை: ஸ்டேன் லீ - ‘மேன் ஆஃப் ஹாலிவுட்’!

‘யார் திரையில் தோன்றினால் கைதட்டலும் விசிலும் பறக்கிறதோ, அவரே ஹீரோ’. இந்த வசனத்தைச் சொன்னதும் ஒரு ஹீரோவின் பெயர் நினைவுக்கு வருகிறதல்லவா. அப்படியெல்லாம் ஒரு ஹீரோவாக இல்லாமல், திரையில் தோன்றினாலே கைதட்டல்களையும், விசிலையும் பறக்கவிடக்கூடியவர்; அவர் பேசும் வசனத்தை எங்கு கேட்டாலும், படித்தாலும் நினைவுக்குக் கொண்டுவரக்கூடிய வகையில் தனது உருவத்தை மக்களிடையே பதிவு செய்தவர் தான் ஸ்டேன் லீ.

இயற்பெயராக இல்லாத இந்த ‘ஸ்டான் லீ’ என்ற பெயரை, விரைவில் மக்கள் மறந்துவிட வேண்டும் என்றே தனக்குச் சூட்டிக்கொண்டார். ஏனென்றால், ‘ஸ்டேன்லி மார்ட்டின் லிபர்’ என்ற தனது பெயரை, எதிர்காலத்தில் எழுதவிருக்கும் நாவலுக்காக ஸ்டேன் பத்திரமாக வைத்திருந்தார். ஆனால், ஸ்டேன் லீ என்ற பெயரே கடைசிவரை நிலைத்துவிட்டது.

மார்வெல் மட்டுமில்லாமல் DC காமிக்ஸ் உட்பட, பல காமிக் கேரக்டர்களை சூப்பர் ஹீரோக்களாக உருவாக்கியவர் ஸ்டேன் லீ. ஆனால், அந்த வட்டத்துக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாதவர் லீ. ‘காமிக்ஸ் கோட் அத்தாரிட்டி (CCA)’ என்ற பதிப்பகங்களுக்கான தணிக்கைத் துறையை முதல் நபராக எதிர்த்தவர் லீ. அமெரிக்க கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்பாக லீயை அணுகி, போதைப் பொருள் பாதிப்பு குறித்து ஒரு காமிக் கதையை உருவாக்கச் சொன்னார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று ஸ்டேன் லீ எழுதிய கதையே ஸ்பைடர் மேன். அப்போதைய காமிக் கோட் அத்தாரிட்டியின் விதிமுறைப்படி, போதைப் பொருட்களை எந்தவிதத்திலும் கதைகளில் பயன்படுத்தக் கூடாது. அதேசமயம், அரசாங்கத்தின் கோரிக்கைக்காக போதைப்பொருள் விழிப்புணர்வுக் கதை ஒன்றை எழுத வேண்டும் என்ற நிலையில் இருந்தார் லீ.

பல ஆண்டுகளாக காமிக் உலகத்துக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தாலும், யாரும் அந்த அமைப்பை எதிர்க்கத் தயாராக இல்லை. இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட லீ, விதிமுறைகளுக்கு முரணான கதையை அமைத்தார். அரசாங்கத்துக்காக உருவாக்கப்பட்ட கதையில் தங்களது ஆளுமையைக் காட்டாத CCA, விதிமுறைகளை மாற்றியது. அதன் பின்னர் தொடங்கிய CCAவின் வீழ்ச்சி அடுத்த 40 வருடங்களில் முழுமையடைந்தது.

அமெரிக்கர்களைப் போதை மருந்துகள் பாதித்தது குறித்து எல்லோருக்கும் புரிந்தாலும், கலை வடிவத்தில் அதனைப் பதிவு செய்வதை அமெரிக்க அரசாங்கம் விரும்பவில்லை. ஆனால், லீ இப்படிச் செய்வார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு ‘நான் எழுதும்போது எதை எழுத வேண்டும்; கூடாது என்று யோசித்தது இல்லை. அவர்கள் கேட்ட விதத்தில் ஒரு இளைஞன் எப்படி வாழ்கிறான் என்பது குறித்து யோசித்துப்பார்த்தேன். அதை சூப்பர் ஹீரோ கதையாக மாற்றினேன். அவ்வளவு தான் என் வேலை. இதற்குத்தான் நான் பணம் வாங்கினேன்” என இயல்பாகச் சொல்லிவிட்டு லீ கடந்து சென்றாலும், அப்போது அவர் செய்த புரட்சி காமிக் உலகத்தின் கையிலிருந்த விலங்கை உடைத்தெறிந்தது.

தனக்கெனத் தனி இடத்தை உருவாக்குவதில் லீ முனைப்பு காட்டவில்லை. காமிக் உலகத்தில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த லீ எப்படி பின்னாளில் மார்வெல் காமிக்கின் எடிட்டராக மாறினாரோ, அதுபோலவே ‘மக்கள் இந்த கேரக்டரை விரும்பவே கூடாது’ என்று லீ உருவாக்கிய அயர்ன் மேன் (Iron Man) கேரக்டர் மார்வெல் நிறுவனத்தின் வெற்றிகரமான கேரக்டராக மாறியது. இரண்டாம் உலகப் போரில் ராணுவத்தின் பயிற்சிப் படங்கள் பலவற்றில் பணியாற்றியதால் லீ ஆக்‌ஷன் ஹீரோ காமிக்ஸ் பலவற்றை அதன் பின் உருவாக்கினார். அதுபோலவே போர் காலத்தில் லீ மனதில் ஏற்பட்ட இன்னொரு கேள்விக்கான பதில்தான் அயர்ன் மேன் கேரக்டர். ‘அழிவுக்கான ஆயுதத்தை உருவாக்குபவன், கோபக்காரன், திமிர் பிடித்தவன், யாருக்கும் மதிப்பு கொடுக்காதவன் என்றெல்லாம் பேசப்படும் ஒருவனை யாருக்காவது பிடிக்குமா, வாய்ப்பே இல்லை’ என்று யோசித்துத் திட்டமிட்டு உருவாக்கிய அயர்ன் மேனை அனைவருக்கும் பிடித்ததென்றால், அதுதான் ஸ்டேன் லீயின் டச்.

இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு அதன் தாக்கத்தைப் புரியவைக்கக்கூடிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கினார். அந்த சூப்பர் ஹீரோக்கள் மனிதர்களாகவே இருக்கும் வகையிலும் பார்த்துக்கொண்டார். காரணம், எதைக் காட்டிலும் ஸ்டேன் லீ அதிகம் விரும்புவது மனிதத்தை.

லீ, தனது இரண்டாவது பெண் குழந்தையை மூன்றே நாட்களில் இழந்துவிட்டார். இதன் காரணமாகவே அவரது படங்களில் பெண் குழந்தைகளுக்காக அப்பாக்கள் ரிஸ்க் எடுப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஸ்பைடர் மேன் முதல் அவெஞ்சர்ஸ் வரை அத்தனை படங்களிலும், ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதாகக் காட்சிப்படுத்தினால் அது பெண் குழந்தையாக இருப்பதை உறுதிப்படுத்தினார். லீ விடாமல் செய்த இன்னொரு விஷயமும் உண்டு.

தனது சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வெள்ளை இன அமெரிக்கர்களாகவே இருக்க வேண்டும் என லீ விரும்பினார். இதுகுறித்துக் கேட்டபோதும், ‘நான் பார்த்ததைத் தான் எழுத முடியும்’ என்றார். இது ஹாலிவுட் வரை அதிருப்தி அலையை எழுப்பியதும் ஸ்பைடர் மேன் கேரக்டரையே கறுப்பினத்தவராக மாற்றினார். கறுப்பின எழுச்சிக்கு முன் லீ பணிந்துவிட்டார் என்று பேசப்பட்டபோது, ஒரு வரலாற்றைத் தோண்டி எடுத்தார்கள். அது, ஹல்க் கேரக்டரின் உண்மையை வெளிக்கொணர்ந்தது.

ஹல்க் கேரக்டரைப் பொறுத்தவரையில் ‘சாம்பல்’ நிறத்தையே பயன்படுத்தியிருந்தார் லீ. ஆனால், பிரின்ட்டிங்கில் ஒரே நிறத்தைத் தொடர்ந்து கொண்டுவர முடியவில்லை என பிரின்ட்டர்கள் கைவிரித்தனர். அந்த நிறத்தைப் பச்சைக்கு மாற்றினார். இப்படியாகத் தனது வாசகர்களுக்குச் சிறந்த காமிக்கைக் கொண்டு செல்ல எவ்வளவு உழைத்தாரோ அவ்வளவு நெருக்கமாக மக்களிடம் சென்று சேர்ந்தார் லீ. அதுதான் அவரை தனித்துவமாக மாற்றியது. அதற்காக லீ தவறே செய்யாதவர் என்று சொல்லிவிட முடியாது.

ஹாலிவுட்டை உலுக்கிய மீ டூ புயலில் லீயும் சிக்கினார். இது பல ஆண்டுகளாக அவரைத் தொடர்ந்து வந்த ஒரு பழிச்சொல்லை உறுதி செய்தது. லீ உருவாக்கிய அனிமேஷன் தொடர்களில் முக்கியமான ஒன்று ‘ஸ்டிப்பரில்லா’. அடல்ட் அனிமேஷன் படமாக உருவாகிய அதில், பமேலா ஆண்டர்சன் ஒரு சூப்பர் ஹீரோயின் கேரக்டரில் நடிப்பார். கவர்ச்சியான பல அம்சங்களை உடைய அந்த அனிமேஷன் தொடர் அதிக சீசன்கள் நீடிக்கவில்லை. ‘கேட்பது நடிப்பாக இருந்தால் பரவாயில்லை. அவருக்குத் தேவை உடையற்ற உடல்’ என்று பமேலா வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் வகையிலேயே லீ மீதான மீ டூ புகார்கள் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கவர்ச்சிப் படங்களினால் அமெரிக்க இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வது அந்தக் காலத்தில் மிகவும் சாதாரண ஒன்றாக இருந்தது. போதைப் பொருள் பயன்பாட்டுக்காக லீ கொடுத்த விளக்கமே, இதற்கும் பொருந்தியதால் அந்த இளம் கிழவன் அப்போதும் ஹாலிவுட்டினால் தூக்கி எறியப்படவில்லை. இப்போது மட்டுமல்ல; அடுத்த பத்து ஆண்டுகள் கழித்தும் லீ இல்லாத ஹாலிவுட்டைக் காண முடியாது.

சூப்பர் ஹீரோக்கள் ஆயிரம் பேர் வந்தாலும், ஒற்றை ஆளாகவோ, கூட்டத்தில் ஒருவராகவோ லீ தோன்றினால் கைதட்டல் விழும் அல்லவா. அது, ஒரு காமிக்கிற்காக லீ மற்றும் அவரது நண்பர் ஜேக் கிர்பி உருவாக்கிய காட்சி. ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (Fantastic Four) கதையில், டாக்டர் ரிச்சர்ட்ஸ் மற்றும் சூசன் ஆகிய இருவருக்கும் நடைபெறும் திருமணத்தில் கலாட்டா செய்ய, லீ மற்றும் கிர்பி கேரக்டர்கள் கதையில் சேர்க்கப்பட்டன. ஆனால், அவர்கள் அதுவரையில் கதையில் இல்லாததால் அந்தத் திருமணத்தில் இருவரும் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின் பல கலைஞர்களுடன் இணைந்தாலும் தனது கதையின் ஏதாவது ஓர் இடத்தில் இருப்பதை லீ உறுதி செய்தார். சமீபத்தில் வெளியான கார்டியன் ஆஃப் தி கேலக்சி 2 திரைப்படத்தில் வழக்கம்போல் இல்லாமல், கிராஃபிக்ஸ் காட்சி மூலம் லீ சேர்க்கப்பட்டிருப்பார். அவரது உடல் நிலை சரியில்லாமல் போனதாலோ என்னவோ, அப்போதே அடுத்து மார்வெல் உருவாக்கவிருக்கும் பல படங்களுக்கான லீ தொடர்பான காட்சிகளைப் படமாக்கிவிட்டனர். நவம்பர் 12ஆம் தேதி உடல் நோய் தீவிரமடைந்து, ஸ்டேன் லீயின் உயிர் பிரிந்த சில நிமிடங்களில், கோடிக்கணக்கான ரசிகர்களின் வலி அறிந்து ‘அடுத்தடுத்த படங்களிலும் லீ’ இருப்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டது மார்வெல்.

ஹாலிவுட்டுக்காகப் பல மேன்களை உருவாக்கிக் கொடுத்த ஸ்டேன் லீ, அடுத்து எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதற்கான கதைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஹாலிவுட்டில் இத்தகைய சாதனைகளைச் செய்வார் என்று தெரிந்தோ என்னவோ, ஹாலிவுட் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஹாலிவுட் மலைக்கு ‘மவுன்ட் லீ’ என்று முன்பே பெயர் வைத்துவிட்டனர்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon