ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வரும் மாதங்களில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாமாயில் இறக்குமதியில் உலகின் மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியா சர்வதேச பாமாயில் விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி வழக்கமான அளவில் இருக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உள்நாட்டில் விநியோகம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இறக்குமதி மந்தமாகவே இருக்கும் என்று ஜி.ஜி. படேல் & நிகில் ரிசர்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கோவிந்த்பாய் படேல், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் காலாண்டில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 7,50,000 டன் முதல் 8,00,000 டன் வரையில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதி அளவு 7,58,000 டன்னாக இருந்தது. கோடைப் பயிர்களில் முக்கியமான சோயாபீன், நிலக்கடலை ஆகிய எண்ணெய்வித்துப் பயிர்களின் வரத்து அதிகமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் சோயாபீன் உற்பத்தி ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாமாயில் விலையைப் பொறுத்தவரையில், உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், சீனா தனது தாவர எண்ணெய்க்கான தேவைக்கு பாமாயிலை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாலும் விலை அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.