மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! (பாகம் 2)

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! (பாகம் 2)

நா. ரகுநாத்

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள துறை சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த மாற்றங்கள் போதிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை என்பதை இக்கட்டுரையின் பாகம் 1இல் பார்த்தோம். மேலும், நாட்டில் உழைக்கும் வயதில் இருப்பவர்களில் 50 சதவிகிதத்துக்கும் குறைந்தவர்களே உழைப்புப் படையில் இருப்பதும், அது தொடர்ந்து சரிந்து வருவதும் கவலையை அளிக்கிறது என்று கூறியிருந்தோம். சரி, உருவாக்கப் பட்ட வேலைகளாவது மக்களுக்கு இந்த நவீன உலகில் நாகரிகமான ஒரு வாழ்க்கையை வாழ உதவும் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்திருக்கின்றனவா? அவை நிரந்தரமான, தரமான வேலைகளா?

முறைசாரா பொருளாதாரமும், பாதுகாப்பற்ற தொழிலாளர்களும்

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா என்றோ, உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் இந்தியா என்றோ பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இன்றும் நாட்டில் 80 சதவிகித தொழிலாளிகள் முறைசாராத் துறையில்தான் (informal sector) இருக்கிறார்கள் என்றால், உண்மையில் இந்த வளர்ச்சி மக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். ஒருவர் முறைசார்ந்த வேலையில் இருக்கிறாரா, இல்லையா என்பதை மூன்று அளவுகோல்கள் கொண்டு அறியலாம். நிரந்தர வேலையை உறுதிசெய்யும் ஒப்பந்தம் (written contract), மாதம் தவறாமல் ஊதியம் (regular wages) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பயன்கள் (social security benefits) ஆகிய மூன்றும் இருந்தால் ஒருவர் முறைசார்ந்த தொழிலாளர் ஆவார். இந்த அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் இந்தியாவில் முறைசார்ந்த தொழிலாளர்கள் வெறும் 17 சதவிகிதம்தான். 46.7 கோடி தொழிலாளர்கள் உள்ள இந்நாட்டில், 47 சதவிகித மக்கள் சுயமாக தொழில் செய்து பிழைப்பவர்கள். பிரதமர் மோடி இவர்களை ‘தொழில்முனைவோர்’ என்கிற அந்தஸ்தை அளித்து கவுரவப்படுத்தலாம். ஆனால், உண்மை நிலவரம்தான் என்ன?

வேலை ஏதும் கிடைக்கவில்லை என்று வீட்டில் இருந்துவிட முடியுமா? வயிற்றுப்பிழைப்புக்கு எதையாவது செய்தாக வேண்டுமே! வடமாநிலங்களில் இருந்து கிளம்பிவந்து சென்னையில் தள்ளுவண்டியில் பானிபூரி செய்து விற்பவர்கள் தொழில்முனைவோர் என்றால், நாட்டில் உருவாக்கப்படும் வேலைகளின் தரம் என்ன என்பதை நாமே அனுமானித்துவிடலாம். இது ஒருபுறம் இருக்க, நாட்டில் தினக்கூலிக்கு வேலை பார்ப்பவர்கள் 36.5 சதவிகிதம். இப்படியொரு நிலை இருக்க, பணமதிப்பழிப்பு (demonetization) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலாக்கத்திற்குப் பின், முறைசார்ந்த வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சமீபத்தில் அரசு தரப்பு பொருளாதார வல்லுநர்கள் வாதம் செய்தனர்.

இந்த ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும், இந்தியா அமைப்பு சார்ந்த, முறைசார்ந்த பொருளாதாரமாக மாறிவருகிறது என்கிற கருத்தை முன்வைத்தது. இந்த ஆண்டு வேலையின்மை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, ஜூன் மாதம் 5.8 சதவிகிதமாக இருந்தது; 2011க்குப் பின், ஒவ்வொரு ஆண்டும் உழைப்புப் படை சுருங்கிக்கொண்டே வருகிறது. பொருளாதாரம் முறைசார்ந்த ஒன்றாக மாறிவருகிறது என்பதுதான் இதற்கான பதிலா?

2015இல் தொழிற்துறையில் முறைசார்ந்த தொழிலாளர்களின் பங்கு 10.3 சதவிகிதம். சேவைத் துறையில் அவர்களின் பங்கு 28.2 சதவிகிதம். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முற்போக்கு மாநிலங்களாகக் கருதப்படும் தென்மாநிலங்களுள் கேரளாவில் மட்டும்தான் முறைசார்ந்த தொழிலாளர்களின் பங்கு 16 முதல் 25 சதவிகிதம்வரை இருந்தது. மற்ற நான்கு தென்மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை வெறும் 5 முதல் 15 சதவிகிதமே. தொழிற்துறையில் முன்னிலையில் உள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் இதே நிலைதான். தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் கூலியின் மட்டம், பொருளாதாரம் வளர்ந்த வேகத்திலோ, உற்பத்தித்திறன் அதிகரித்துள்ள விகிதத்திலோ உயர்ந்துவிடவில்லை. தினக்கூலிக்கு வேலை பார்க்கத் தயாராக இருக்கும் சாதாரணத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் வேளையில், முறைசார்ந்த தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதோ அல்லது அவர்களது ஊதியத்தை உயர்த்துவதோ லாபநோக்கிற்கு முரணானது அல்லவா?

2015இல், தேசிய அளவில் ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்த குடும்பங்கள் 67 சதவிகிதம். ரூ.50,000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் பெற்ற குடும்பங்கள் 98 சதவிகிதம். மாத சம்பளம் வாங்குபவர்களிலும் 57 சதவிகித தொழிலாளர்களின் அதிகபட்ச வருமானம் ரூ.10,000 தான். இது, மத்திய சம்பள நிர்ணயக் குழு பரிந்துரைத்த ரூ.18,000க்கும் மிகக்குறைவு என்பது வருந்தத்தக்கது. தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, உணவகங்கள், நிதி நிறுவனங்கள், அரசாங்க வேலை என முறைசார்ந்த சேவைத் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு மட்டும்தான் ஓரளவுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. வேளாண் துறையில், நிலம் உள்ளவர்களும், அடுத்தவர் நிலத்தில் கூலிக்கு வேலைபார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. 2010-2014 காலத்தில் கிராமப்புற கூலியின் வளர்ச்சி 8 சதவிகிதம். அதன்பிறகு, அடுத்தடுத்து ஏற்பட்ட வறட்சியால், விவசாயம் பொய்த்து, அதிலிருந்து வரும் வருமானமும் குறைந்து, கிராமப்புற கூலியும் சரிந்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாம் பார்க்கும் விவசாயிகளின் போராட்டங்கள், கிராமப்புறப் பொருளாதாரத்தின் நெருக்கடியைக் காட்டுகிறது.

ஒருபுறம் பெரும்பான்மையான மக்களின் தனிப்பட்ட பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்க, மறுபுறம் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் ஆதாயங்கள் தொழிலாளர்களுக்குச் செல்லாமல், மூலதனத்திற்குச் சொந்தக்காரர்களான முதலாளிகளிடமே சென்று குவிகிறது என்பது ‘உழைக்கும் இந்தியாவின் நிலை 2018’ அறிக்கை நமக்குத் தெரிவிக்கும் செய்தி.

வேலையில் சாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள்

இந்தியா காலங்காலமாக ஒரு படிக்கட்டு சமுதாயமாகத்தான் இயங்கி வருகிறது என்கிற உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. அரசியல் சாசனம் சமத்துவக் கோட்பாட்டை முன்னிறுத்தினாலும், நிஜத்தில் நாம் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூகமாகத்தான் இயங்கி வருகிறோம். அதன் வெளிப்பாட்டை நம் பொருளாதார அமைப்பிலும் நாம் காணலாம். ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை அவரது சாதி நிர்ணயம் செய்யும் நிலை சற்று மாறியுள்ளது என்றாலும், சாதியின் பிடி முற்றிலுமாகத் தளர்ந்துவிடவில்லை. மேலும், இன்றும் நாம் ஓர் ஆணாதிக்க சமுதாயமாகத்தான் இருந்து வருகிறோம். இந்தச் சமமின்மை வேலைவாய்ப்பில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்று பார்ப்போம்.

பெண் தொழிலாளர்கள் குறைவான மதிப்புக் கூட்டும் (low value-added) துறைகளில்தான் அதிகமாகப் பணிபுரிகிறார்கள். உழைக்கும் வயதில் இருப்பவர்களில் பெண்கள் 50 சதவிகிதம்; ஆனால், மொத்தத் தொழிலாளர்களில் அவர்களின் பங்கு 22 சதவிகிதம்தான். 2004-2015 காலத்தில் உழைப்புப் படையில் அவர்களது பங்கு தொடர்ந்து சரிந்துள்ளது. இதன் பொருள், பெண்கள் ஊதியம் ஈட்டித்தரும் வேலைவாய்ப்பைத் தேடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதே. உயர்கல்வி பெறுவதற்காக அவர்கள் உழைப்புப் படையில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது வரவேற்கத்தக்கதுதான். அதிக வருமானத்தை ஈட்டித்தரும் முறை சார்ந்த சேவைத் துறையில், பெண்களின் பங்கு 10 சதவிகிதம்தான். வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பாலின பாகுபாடு உள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, அவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை தேடும்போது, அவர்களின் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

2015 வரை திரட்டப்பட்ட தரவுகளின்படி, குறைவான வருமானம் ஈட்டித்தரும் வேலைகளில், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பங்கு, மொத்த தொழிலாளர்களில் அவர்கள் வகிக்கும் பங்கைவிட மிகவும் அதிகம். அதே நேரத்தில், மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் அலுவலக மேலாளர் போன்ற அதிக வருமானம் பெற்றுத்தரும் வேலைகளில் இவர்களின் பங்கு மிகவும் சொற்பமாக இருக்கிறது. சுரங்கம், கட்டுமானம் மற்றும் தோல் பதனிடுதல் போன்ற பாதுகாப்பு இல்லாத வேலைகளில்தான் இவர்கள் பெரும்பாலும் அமர்த்தப்படுகிறார்கள்.

முறைசார்ந்த சேவைத் துறையின் உயர்மட்ட வேலைகளில் உயர்சாதி மக்கள் என்று கருதப்படுபவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். சுயமாகத் தொழில் செய்து பிழைப்பவர்களிலும், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வருமானம், மற்ற சாதியினர் பெறும் வருமானத்தில் 50 முதல் 60 சதவிகிதம்தான். அரசாங்க வேலைகளில் இவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் உள்ளது ஆறுதலான செய்தி. இது, இடஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்த உதவும் பயனுள்ள ஏற்பாடு என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.

முடிவாக இந்த அறிக்கை, வேலைவாய்ப்பை முன்னிறுத்தும் தேசிய அளவிலான தொழிற்கொள்கை ஒன்றை அரசின் முன்முயற்சியோடும், தனியாரின் முனைப்போடும் செயல்படுத்துவதற்கான காலம் கனிந்துவிட்டது என்கிறது. பெரும் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும், வேகமான பொருளாதார வளர்ச்சியும் தானாகவே தரமான, அர்த்தமுள்ள வேலைகளை உருவாக்கிவிடும் எனும் கனவுலகிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அரசியல் தளத்தில் அனைவருக்கும் வாக்குரிமையை அளித்து ஜனநாயகத்தை நிறுவிய நாம், அந்த ஜனநாயகத்தை பொருளாதாரத் தளத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும். உழைப்பின் மதிப்பை உணர்ந்து பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும் அதே நேரத்தில், வளங்குன்றா வளர்ச்சிக்கான பாதையையும் நாம் அமைத்தல் அவசியம். அவ்வாறு செய்தால் மட்டுமே, அம்பேத்கரும் காந்தியும் வலியுறுத்திய அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க முடியும் என்ற நிலைப்பாட்டோடு இந்த அறிக்கை முடிவடைகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

- [email protected]

முந்தையக் கட்டுரை: சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! - (பாகம் 1)

ஞாயிறு, 11 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon